

புத்தகங்களை விற்று நிறையப் பணம் சம்பாதிக்கவில்லை. ஆனால், நிறைய மனிதர்களைச் சம்பாதித்திருக்கிறேன். அது போதும் எனக்கு’’ என, ஒரு சாலையோரப் புத்தக வணிகர் என்னிடம் சொன்னார். அனுபவம் பேசுகிறது என்று அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தேன்.
‘‘ஆசைப்பட்ட புத்தகங்களை எல்லோராலும் வாங்க முடிவதில்லை. அந்த ஏமாற்றத்தில் சிலர், அடிக்கடி கடைக்கு வந்து புத்தகங்களைத் தொட்டுப் பார்த்து விலையைக் கேட்டுவிட்டுப் போய்விடுவதும் உண்டு.
எனக்குத் தெரிந்த ஒரு போட்டோ கிராபர், வெளிநாட்டுப் புகைப்படப் புத்தகங்களை விலை கேட்டுவிட்டு நீண்ட நேரம் புரட்டிக் கொண்டே இருப்பார். ஆயிரம், ரெண்டாயிரம் விலை கொடுத்து அவரால் வாங்க முடியாது எனத் தெரியும் என்பதால், நானும் கண்டுகொள்வது இல்லை.
தனக்கு விருப்பமான புகைப்படங்களை ஆசை ஆசையாகப் புரட்டிப் பார்த்துவிட்டு, பெருமூச்சுடன் வைத்து விட்டுப் போய்விடுவார். ஒருமுறை பெரிய போட்டோகிராபி புத்தகம் ஒன்றை என்னிடம் எடுத்துக் கொடுத்து, ‘இதை யாருக்கும் வித்துறாதீங்க. காசு ரெடி பண்ணிட்டு வந்து ஐந்து தேதிக்குப் பிறகு வாங்கிக் கொள்கிறேன்’ என்றார்.
அந்தப் புத்தகத்தை அவருக்காகத் தனியே எடுத்து வைத்திருந்தேன். சொன்னபடி ஐந்தாம் தேதி அந்தப் போட்டோகிராபர் வரவில்லை. ஒருநாள் ஓவியர் ஒருவர் வந்து கேட்கவே, அந்தப் புத்தகத்தை விற்றுவிட்டேன். இரண்டு மாசங்களுக்குப் பிறகு ஒருநாள் மாலை அந்தப் போட்டோகிராபர் பரபரப்புடன் வந்து, ‘நான் எடுத்து வெச்ச புத்தகத்தை வாங்கிக்கிறேன்’ எனப் பணத்தை நீட்டினார்.
‘அதை எப்பவோ விற்றுவிட்டேனே…’ என்று சொன்னதும், அவருக்கு முகம் வெளிறிப் போய்விட்டது.
‘வித்துட்டீங்களா… என்னங்க இப்படிப் பண்ணீட்டீங்க? அதான் நான் வாங்கிக்கிறேன்னு சொன்னேன்ல…’ எனக் கோபப்பட்டுக் கத்தினார்.
‘நீங்க ஆளே வரலை. அதான் வேற ஆளுக்குக் கொடுத்திட்டேன்’ என்றேன்.
‘நீங்க என்ன செய்வீங்களோ, தெரியாது. எனக்கு அந்தப் புத்தகம் இப்போ வேணும். ரொம்ப ரேர் புக்குங்க அது’ எனப் பிடிவாதமான குரலில் சொன்னார்.
‘அது போல போட்டோகிராபி புத்தகம் வந்தால் எடுத்து வைக்கிறேன்’ எனச் சொன்னதை அவர் ஏற்றுக் கொள்ளவே இல்லை.
‘யார் வாங்கினாங்கன்னு சொல்லுங்க. அவர் வீட்டுக்குப் போய் நான் கேட்டுப் பாக்குறேன்…’ என்றார்.
‘அடிக்கடி வர்ற ஓவியர்தான். ஆனால், அவர் அட்ரஸ்லாம் தெரியாதே…’ என்றதும் அவரது முகம் இன்னும் வாடிவிட்டது.
‘இந்தப் பணத்தை நான் ரெடி பண்றதுக்குப் பட்ட கஷ்டம் எனக்குத்தான் தெரியும். பணம் உங்கக்கிட்டயே இருக்கட்டும். எனக்குப் புத்தகம்தான் வேணும்’ எனப் பிடிவாதமாக பணத்தைத் திணித்தார்.
இத்தனை வருஷ புத்தக விற்பனையில் அன்று மட்டும்தான் ‘நான் தப்புப் பண்ணிவிட்டதைப் போல’ மனதில் ஒரு உணர்ச்சி உருவானது. எப்படியாவது அந்தப் புத்தகத்தைத் திரும்ப வாங்கித் தந்துவிட வேண்டும் எனக் காத்துக் கொண்டிருந்தேன்.
நாலைந்து நாட்களுக்குப் பிறகு அந்த ஓவியர் வந்தார். அவரிடம் நடந்ததைச் சொல்லி… ‘அந்தப் புத்தகத்தை ரிட்டர்ன் பண்ணிருங்க. கூட வேணும்னாலும் ஐநூறு ரூபாய் தர்றேன்’ என்றேன். அவர் மனம் இரங்கி மறுநாளே அந்தப் புத்தகத்தைக் கொண்டுவந்து தந்ததோடு, பணமே வேண்டாம் என்று சொல்லி போய்விட்டார்.
போட்டோகிராபரிடம் அந்தப் புத்தகத்தைக் கொடுத்தபோது, கையில் வாங்கிக் கொண்டு… சிரித்த முகத்தோடு, ‘ரொம்ப நன்றிங்க. என்னால நம்பவே முடியலை…’ என்று சொல்லி, என் இரு கைகளையும் பற்றிக் கொண்டார்.
‘நீங்க நன்றி சொல்ல வேண்டியது எனக்கில்லை. இந்தப் புத்தகத்தை இலவசமாகவே திருப்பிக்கொண்டு வந்து கொடுத்த ஓவியருக்குத்தான்…’ என்று சொல்லி, வாங்கியிருந்த பணத்தை போட்டோகிராபரிடம் திருப்பிக் கொடுத்தபோது… இரட்டை சந்தோஷத் தில் அவர் ‘நிஜமாவா… நிஜமாவா…’ எனக் கேட்டுக் கொண்டே இருந்தார்.
பிறகு சந்தோஷத்தில் தனது கேமராவால் என்னை கடையோடு சேர்த்து, ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
‘இத்தனை வருஷ அனுபவத்தில் அதுதான் முதன்முறையாக நான் கடையோட சேர்த்து போட்டோ எடுத்துக்கிட்டது. இதைவிட வேற என்ன சந்தோஷம் தம்பி இருக்கு! அதான் சொன்னேன் நிறைய மனுசங்களைச் சம்பாதிச்சிருக்கேன்னு’’ என்றார் பழைய புத்தகக் கடைக்காரர்.
எவ்வளவு பெரிய மனசு! எத்தனை அன்பு… என அந்த ஓவியரையும் புத்தகக் கடைக்காரரையும் வியந்தபடியே சொன்னேன்.
இந்த நேசத்தைதான் புத்தகங்கள் உலகுக்குக் கற்றுத் தருகிறது. புத்தகங்களை நேசிக்கிறவருக்குத் தன்னைப் போலப் புத்தகம் படிக்க ஆசைப்படுகிற மற்றவருடைய மனசு நிச்சயம் புரியும் என்றேன். அவர் அதை ஆமோதித்துத் தலையாட்டினார்.
அவ்வளவு ஆசைப்பட்டுப் போட்டோ கிராபர் தேடி வாங்கிய புத்தகம் எது தெரியுமா? உலகப் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் அன்சல் ஆடம்ஸின் ‘400 போட்டோகிராப்ஸ்’.
அந்தப் புத்தகத்தை நான் அமெரிக்காவின் சாலையோர கடையில் 15 டாலருக்கு வாங்கினேன். அமெரிக்காவின் எல்லா முக்கிய நகரங்களிலும் தரமான பழைய புத்தகக் கடைகள் உள்ளன. உண்மையில் ஒரு சுரங்கம் போல, நாள் முழுக்கத் தேட வேண்டிய அளவு புத்தகங்கள் அங்கே கொட்டிக் கிடக்கின்றன.
அது போலவே அங்குள்ள நூலகங் களிலே பயன்படுத்திய புத்தகங்களை… ஒரு டாலர், இரண்டு டாலர் விலைக்கு வாரம் ஒருநாள் விற்பனை செய்கிறார்கள். அதில் நிறைய நல்ல புத்தகங்களை வாங்க முடியும். நான் அறிந்தவரை தமிழ்நாட்டில் எந்த நூலகத்திலும் அப்படி நடைபெறுவதாகத் தெரியவில்லை.
அன்சல் ஆடம்ஸ் கறுப்பு - வெள்ளையில் எடுத்தப் புகைப்படங்கள் அபாரமான அழகுடையவை. தன் வாழ்நாளில் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட புகைப்படங்களை அவர் எடுத்திருக்கிறார். குறிப்பாக, யோசெமிட் பள்ளத்தாக்கில் நிலா ஒளிர்வதை அவர் விதவிதமாக புகைப்படம் எடுத்துள்ளார். இன்று அந்த ஒரு புகைப்படத்தின் விலை 80 லட்சம் ரூபாய்.
அமெரிக்காவில் உள்ள 40 தேசியப் பூங்காக்களை, அதன் இயற்கை வனப்பை, கானுயிர்க் காட்சிகளைச் சிறந்த புகைப்படங்களாக எடுத்துச் சாதனை செய்தவர் அன்சல் ஆடம்ஸ். புகைப்படக் கலை குறித்த நிறையப் பயிலரங்குகள் நடத்தியவர். அவர் எடுத்த முக்கிய புகைப்படங்களும் சிறிய தொழில்நுட்பக் குறிப்புகளும் அடங்கிய தொகுப்பு நூல்தான் இது.
புகைப்படங்கள் சார்ந்த புத்தகங்கள் அவ்வளவாக தமிழில் வெளியாவது இல்லை. கேமரா தொழில் நுட்பம் சார்ந்து ஒன்றிரண்டு புத்தகங்கள் மட்டும் வெளியாகியுள்ளன. சமீபமாக ‘சென்னை கிளிக்கர்ஸ்’ என்ற அமைப்பு, இளம் புகைப்படக் கலைஞர்கள் எடுத்த சிறந்த புகைப்படங்களை ஒன்று சேர்த்து புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள். அது பாராட்டுக்குரிய முயற்சியாகும். யாராவது புதிய பதிப்பகங்கள் இது போல முயற்சி செய்து வெளியிடலாம்.
இது போலவே தமிழ் வாழ்வின் பல்வேறு பண்பாட்டு அடையாளங்களை, ஆளுமைகளை, வரலாற்றை, இயற்கைச் சூழலை, வாழ்வியலைக் கூறும் புகைப் படங்களுக்கான ஆவணக் காப்பகம் ஒன்றும் அவசியம் தேவை. அதை ஆர்வலர்கள் ஒன்றுகூடி குறைந்தபட்சம் இணையத்திலாவது ஆரம்பிக்கலாமே!
- இன்னும் வாசிக்கலாம்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com