

நாடகத்துக்காக ‘நாடகவெளி’ என்ற இதழைத் தொடர்ந்து நடத்தியவர் வெளி ரங்கராஜன். தீராநதியில் தொடராக வந்த இவருடைய கட்டுரைகளின் தொகுப்பு இந்தப் புத்தகம்.
பேரா. இராமானுஜம் இயக்கிய ‘வெறி யாட்டம்’ நாடகத்தில் தன் அழுத்தமான நடிப்பாற்றலால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் காந்திமேரி. ஆண்களே கொடிகட்டிப் பறந்த நாடக உலகில், முழுக்கப் பெண்களே பங்கேற்ற ஒரு குழுவை அமைத்து, சமூகத்தில் பல அதிர்வுகளை ஏற்படுத்தியவர் கும்ப கோணம் பாலாமணி. பாஸ்கரதாஸ் பாடல்களால் மக்களிடையே விடுதலை உணர்வைத் தூண்டி, பெண்கள் எத்தகைய அதிகாரத்தையும் எதிர்த்து அச்ச உணர்வின்றிப் போராடக்கூடியவர்கள் என்பதை உணர்த்தியவர் ஆர்மோனிய பின்பாட்டுக் கலைஞர் எம்.ஆர். கமலவேணி. ஆண் வேடத்தால் அரங்கை அதிரடிப்பவர் லட்சுமி அம்மாள். இப்படிப்பட்ட பெண் கலைஞர்கள் குறித்த கட்டுரைகளால் நிரம்பியிருக்கிறது இந்தப் புத்தகம்.
உயர் சாதியினரின் ஆதிக்க மனப் போக்கை எதிர்த்துக் குரல்கொடுத்த ஓம் முத்துமாரி, அம்மாப்பேட்டை கணேசன், வேலாயுதம் என்று பல்வேறு கலைஞர்கள்குறித்த கட்டுரைகளையும் கொண்டிருக்கிறது இத்தொகுப்பு.
- ந. பெரியசாமி
வெளிச்சம் படாத நிகழ்கலைப் படைப்பாளிகள்
வெளி ரங்கராஜன்
அடையாளம் வெளியீடு,
1205/1, கருப்பூர் சாலை,
புத்தாநத்தம்,
திருச்சி - 621510.
விலை-ரூ.100