Last Updated : 07 Jul, 2019 09:20 AM

 

Published : 07 Jul 2019 09:20 AM
Last Updated : 07 Jul 2019 09:20 AM

சார்வாகன்: அங்கீகரிக்கப்படாத கனவுகள்

நவீனத் தமிழ் இலக்கியத்தில் பெறுமதியும் தனித்துவமும் மிக்க உயரிய பங்களிப்புகள் செய்த சார்வாகன், 1960-களின் தொடக்கத்தில் புனைவுப் பாதையில் பயணம் மேற்கொண்டவர். சார்வாகன் என்ற புனைபெயரில் கதைகளும், ஹரி ஸ்ரீனிவாசன் என்ற இயற்பெயரில் புதுக்கவிதைகளும் எழுதியவர். எழுத்துலகப் பிரவேசத்தின் தொடக்க கட்டத்திலேயே இவரது கலைத்துவ வெளிப்பாடுகள் அன்றைய கலை இலக்கியப் பயணிகளால் கண்டறியப்பட்டுப் போற்றப்பட்டன. எனினும், காலகதியில் அவர் பெயர் மங்கியது. இது, நம் சூழலின் விநோதங்களில் ஒன்று. உரிய காலத்தில் அவரது புத்தகம் வெளிவராததும் இதற்கான காரணியாக இருக்கலாம்.

எழுதத் தொடங்கி 30 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘க்ரியா’ வெளியீடாக ‘எதுக்குச் சொல்றேன்னா...’ வந்தது. அப்புத்தகத்தை மதிப்புரைக்காக ‘இந்தியா டுடே’ எனக்கு அனுப்பியிருந்தது. மதிப்புரையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்: “சார்வாகன் எழுதத் தொடங்கி 30 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது முதல் தொகுதி வருகிறது… இத்தொகுதி உரிய வரவேற்பு பெற்று, எழுத்துரீதியாக சார்வாகனைத் தீவிரமாகச் செயல்படத் தூண்டுமெனில், தமிழ்ப் பதிப்புச் சூழலில் முன்னர் நிகழ்ந்துவிட்ட ஒரு தவறை ஈடுகட்டுவதாக அது அமையும்.” அப்படி ஏதும் நிகழவில்லை. அதன் பிறகு, 20 ஆண்டுகள் கழித்துத்தான் அவரது இரண்டாவது புத்தகமாக அவரது எல்லாக் கதைகளும் அடங்கிய தொகுப்பு 2013-ல் ‘நற்றிணை’ வெளியீடாக வந்தது.

எழுத்தியக்கத்தின் முதல் பத்தாண்டுகளில், (அறுபதுகளின் முதல் பாதியிலிருந்து எழுபதுகளின் முதல் பாதி வரை) அவர் முனைப்புடன் செயல்பட்டார். இக்காலகட்டத்திலேயே அவரது கதைகள் புத்தக வடிவம் பெற்றிருந்தால், ஒருவேளை அவர் தொடர்ந்து படைப்பூக்கத்தோடு செயல்பட்டிருக்கக்கூடும். அவர் இடையில் 15 ஆண்டுகள் எழுதாமல் இருந்தார். மீண்டும் 1991-ல்தான் எழுதத் தொடங்கினார். அப்போது எழுதிய இரண்டு கதைகளையும் சேர்த்துத்தான் 1993-ல் ‘க்ரியா’ வெளியீடாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 18 கதைகள் அடங்கிய ‘எதுக்குச் சொல்றேன்னா...’ தொகுப்பு வெளிவந்தது. அதற்கும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது முழுத் தொகுப்புக்கான ஆரம்ப முயற்சியில் என் பங்கு அமைந்தது. அதன் காரணமாகத்தான், 30 ஆண்டுகளுக்குப் பிறகு அவரை மீண்டும் சந்தித்தேன். அவரது முதல் தொகுப்புக்காக முதல் சந்திப்பு அமைந்ததைப் போலவே அவரது முழுத் தொகுப்புக்காக இரண்டாவது சந்திப்பு நிகழ்ந்தது.

2013-ன் முற்பாதியில் ஒருநாள் காலை நண்பரும் எழுத்தாளருமான திலீப்குமார் தொலைபேசியில் அழைத்தார். சார்வாகன் தன்னுடைய எல்லாக் கதைகளையும் கவிதைகளையும் தொகுத்திருக்கிறார். ‘நற்றிணை’ மூலமாக அது புத்தகமாகக் கொண்டுவர ஏற்பாடு செய்ய முடியுமா? என்று கேட்டார். நானும் மகிழ்ச்சியோடு, அவசியம் திலீப். நற்றிணை யுகனோடு பேசிவிட்டுத் தொடர்புகொள்கிறேன் என்றேன். ‘நற்றிணை’ யுகனோடு பேசினேன். அவர் மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் உடன்பட்டார். ஒருநாள் மாலை யுகனும் நானும் திருவான்மியூரில் மகள் வீட்டில் தங்கியிருந்த சார்வாகனைப் போய்ப் பார்த்தோம். அவரது முழுமையான தொகுப்பைக் கொண்டுவர முன்வந்திருப்பது குறித்து மகிழ்ச்சியடைந்தார்.

பேசிக்கொண்டிருக்கும்போது, எங்களுக்கு பிஸ்கட், தேநீர் வந்தது. அவருக்கு ஏதுமில்லை. “நீங்கள் சாப்பிடுவதில்லையா?” என்று கேட்டதற்கு, அவர் தன்னுடைய ஒருநாள் உணவு பற்றிச் சொன்னார். நான் புத்திசாலித்தனமாகச் சொல்வதாக நினைத்துக்கொண்டு, “க்ரீன் டீ சாப்பிடலாம்தானே?” என்றேன். அவர் வெகு நிதானமாக, “க்ரீன் டீ நல்லதுதான். ஆனால், க்ரீன் டீயில் இருக்கும் ஒரு வேதிப்பொருள் (அது என்னவென்று அவர் சொன்னது இப்போது எனக்கு நினைவில்லை) எல்லோருக்கும் உகந்ததல்ல. அதன் அளவு ஒருவருடைய ரத்தத்தில் கூடுதலாக இருந்தால் க்ரீன் டீ குடிக்கக் கூடாது. அதன் அளவு கூடினால் கடுமையான விஷம். இரண்டாம் உலகப் போரின்போது இந்த வேதிப்பொருளை ஊசியின் மூலம் செலுத்தி பல்லாயிரம் யூதர்களைக் கொன்றிருக்கிறார்கள். ரத்தப் பரிசோதனை செய்துவிட்டுத்தான், பிரச்சினை இல்லையென்றால்தான் க்ரீன் டீ அருந்த வேண்டும்” என்றார்.

படைப்பாளியின் மொத்தப் படைப்புகளும் ஒரே தொகுப்பாக வந்துகொண்டிருந்த காலம் அது. ‘நற்றிணை’ வெளியிட்ட கோபிகிருஷ்ணன் தொகுப்பு சார்வாகனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதைப் போல, தன் கதைகளும் கவிதைகளும் இணைந்து ஒரே தொகுப்பாக வந்தால் நல்லது என்று நினைத்தார். ஆனால், யுகன் முதலில் கதைகளின் முழுத் தொகுப்பைக் கொண்டுவரலாம். பிறகு, கவிதைகளைத் தனித் தொகுப்பாகக் கொண்டுவரலாம் என்றார். எனக்கும் அது சரியெனப்பட்டது. தொகுப்பில் கவிதைகளும் சேரும்போது, பக்கங்கள் கூடி விலை அதிகமாகும். மேலும், கதைகளை மட்டும் வாசிக்க விரும்பும் ஒரு வாசகர் அவசியமில்லாமல் கவிதைப் பக்கங்களுக்கான விலையையும் கொடுக்க வேண்டியிருக்கும் என்றேன். சார்வாகன் ஏற்றுக்கொண்டார். ஆனால், அவர் பெரிதும் ஆசைப்பட்ட அவரது கவிதைகளின் தொகுப்பு இன்றளவும் வெளிவரவில்லை.

சி.சு.செல்லப்பா அவரது கவிதைகளை ‘எழுத்து’ இதழில் தொடர்ந்து வெளியிட்டார். ‘எழுத்து’ கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுத்து வெளியிட்ட ‘புதுக்குரல்கள்’ தொகுப்பிலும் அவரது கவிதைகள் இடம்பெற்றன. செல்லப்பாவின் அபிமானக் கவிஞர்களில் ஒருவராக அவர் இருந்தார். சார்வாகனைக் கவிதைகள் எழுதும்படி தொடர்ந்து வலியுறுத்தியிருக்கிறார் செல்லப்பா. இன்று அவரது கவிதைகள் நம் வாசிப்புக்குக் கிட்டாதது பெரும் துரதிர்ஷ்டம். ஏதேனும் ஒரு பதிப்பகம் முயற்சி எடுத்தால், அது காலத்துக்குச் செய்த ஓர் அழகிய கடமையாக இருக்கும்.

‘சார்வாகன் கதைகள்’ முழுத் தொகுப்பு வெளிவந்த பின்பு, அவரது கதைகள் சற்றே கவனம் பெறத் தொடங்கின. விமர்சனக் கூட்டங்கள் நடந்தன. விமர்சனங்கள் வந்தன. குறிப்பாக, சாரு நிவேதிதா சார்வாகனுடைய கதைகளில் பெரிதும் ஈர்க்கப்பட்டு, சார்வாகன் பற்றி எழுதவும் பேசவும் தொடங்கினார். இளம் வாசகர்களிடையே சாரு நிவேதிதா பெற்றிருந்த செல்வாக்கின் காரணமாக ஒரு கவனக்குவிப்பு ஏற்பட்டது.

நிறைவான, பெறுமதியான அவரது வாழ்க்கை, 86-வது வயதில் டிசம்பர் 21, 2015-ல் முடிவுற்றது. அவரது மரணத்துக்குப் பின், அஞ்சலிகள், நினைவஞ்சலிகள் என சார்வாகனின் அருமை நினைவுகூரப்பட்டது. எனினும், நம் நினைவுகளின் அடுக்குகளிலிருந்து நழுவி, மறதியின் பள்ளத்தாக்கில் வீழ்ந்துவிடாதிருக்க நம் முயற்சிகள் தொடர வேண்டும். மீண்டும் மீண்டும் அவரது படைப்பு மேதமையும், வாழ்வின் மீதான ஆழ்ந்த பரிவும் போற்றப்பட வேண்டும். அது நம் வாழ்வுக்கான பொக்கிஷமாக நம்மோடு நிலைத்திருக்க வேண்டும்.

- சி.மோகன், எழுத்தாளர்.

தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x