Last Updated : 30 Jun, 2019 07:47 AM

 

Published : 30 Jun 2019 07:47 AM
Last Updated : 30 Jun 2019 07:47 AM

உலகெங்கும் தமிழ்க் குழந்தைகள் எப்படித் தமிழ் கற்கிறார்கள்?- இது ஹாங்காங் அனுபவம்!

தமிழ்நாட்டில் தமிழ் கற்கும் அனுபவம் என்பது வேறு; வெளிநாடுகளில் தமிழ் கற்கும் அனுபவம் என்பது வேறு. இன்று (30.6.19) 15-ம் ஆண்டு விழா காணும் ஹாங்காங் தமிழ் வகுப்பின் கதை தமிழர்கள் பெருமை கொள்ளவும், நம்பிக்கை கொள்ளவும் வைக்கக் கூடியது. எவ்விதமான நல்கைகளோ, நிதி உதவியோ, செல்வாக்கோ, கணிசமான மனித வளமோ இல்லாத நிலையிலும், அந்நிய நாடொன்றில் தமது தாய்மொழியை அடுத்த தலைமுறைக்குக் கைமாற்றிக் கொடுக்கிறது ஹாங்காங் தமிழ்ச் சமூகம்.

ஹாங்காங்கின் 74 லட்சம் மக்கள்தொகையில் சுமார் 92% சீனர்கள். வெளிநாட்டினரில் ஃபிலிப்பைன்ஸினர், இந்தோனேசியர் மற்றும் ஆங்கிலேயர்களுக்கு அடுத்தபடியாகச் சுமார் 36 ஆயிரம் இந்தியர்கள் வசிக்கின்றனர். இன்னும் நேபாளம், தாய்லாந்து, பாகிஸ்தான் மக்களும் ஹாங்காங்கின் பன்முகக் கலாச்சாரத்தில் பங்கு பெறுகின்றனர். எல்லா சமூகத்தினரும் தமது அடையாளங்களைப் பேண முடிகிறது.

ஹாங்காங்கில் தமிழ்ச் சமூகம்

தமிழர்கள் ஹாங்காங்கில் சுமார் 2,000 பேர் இருக்கலாம். 25 ஆண்டுகள் முன்பு வரை கணிசமான தமிழர்கள் நவரத்தின வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். பின்னால் வந்தவர்கள் நிதி, வங்கி, தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பணியாற்றுகிறார்கள். ஹாங்காங் தமிழ்ச் சமூகத்தைப் போலவே தமிழ் வகுப்புகளிலும் இந்துக்களும் இஸ்லாமியர்களும் நல்லிணக்கம் பேணுகின்றனர்.

ஹாங்காங்கின் இளம் இந்திய நண்பர்கள் குழுவின் ‘ஒய்ஐஎஃப்சி கல்விக் கழகம்’ 2004-ல் தமிழ் வகுப்புகளைத் தொடங்கியது. தமிழ்நாட்டில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பிள்ளைகள்கூடத் தமிழ் மொழியை ஒரு பாடமாகப் படிக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லாத நிலைதான் அன்று இருந்தது.

2006 முதல் தமிழக அரசு படிப்படியாகத் தமிழ்க் கல்வியைக் கட்டாயமாக அமலாக்கியதன் பலனாகவே, 2016-ல் தமிழகமெங்கும் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதிய பிள்ளைகளில் பலர் தமிழை ஒரு பாடமாகவேனும் படித்திருந்தார்கள். ஆனால், எவ்விதமான வற்புறுத்தலும் இல்லாமலேயே 2004-ல் தமிழ் கற்கலானார்கள் ஹாங்காங் தமிழ்ப் பிள்ளைகள்.

தமிழ் வகுப்புகள் 2004-ல் தொடங்கியபோதே 35 குழந்தைகள் சேர்ந்தார்கள். ‘சுன் கிங் மேன்ஷன்ஸ்’ என்ற பழம்பெரும் கட்டிடத்தில் ஒரு தமிழ்ப் புரவலரின் இந்திய உணவகம் சனிக்கிழமைதோறும் வகுப்பறையாக மாற்றப்பட்டது. உணவகத்தின் இடப்பற்றாக்குறை காரணமாகக் கூடுதல் மாணவர்களைச் சேர்க்க முடியவில்லை. 2007-ல் டி.ஏ.பி. என்ற அரசியல் கட்சியின் உதவியுடன், யாவ் மாவ் தை-யில் உள்ள நியூமேன் கத்தோலிக்கக் கல்லூரியில் நான்கு வகுப்பறைகள் கிடைத்தன. விசாலமான வகுப்பறைகள், பல்லூடக வசதிகள், இருக்கைகளுக்கு நடுவே நடந்து செல்ல இடம்.

பத்தாவது ஆண்டில் மாணவர்களின் எண்ணிக்கை 125 ஆனது. அப்போதுதான் ஒரு சோதனை வந்தது. 2012-ல் நியூமேன் நிர்வாகம், பள்ளியின் வளர்ச்சிப் பணிகளின் பொருட்டு, வகுப்பறைகளை இனி தமிழ் வகுப்புகளுக்காகத் தர இயலாது என்று சொன்னபோது, ஹாங்காங் தமிழ்ச் சமூகத்துக்கு அது கொஞ்சம் அதிர்ச்சியான செய்தியாகவே இருந்ததது. என்றாலும் யாரும் தளர்ந்துவிடவில்லை. மீண்டும் டி.ஏ.பி. உதவிக்கு வந்தது. இந்த முறை டி.கே.டி.எஸ். பாங்-சுயூ-ச்யூன் பள்ளி வளாகத்தில் வகுப்பறைகளைப் பெற்றுத் தந்தார்கள். 2013 முதல் தமிழ் வகுப்புகள் இங்குதான் நடந்துவருகின்றன.

கடந்து வந்த பாதை

முதன்முதலாக வகுப்பு தொடங்கியபோது ஆசிரியர்கள் மாணவர்களின் நோட்டுப் புத்தகங்களிலேயே பாடங்களையும் பயிற்சிகளையும் எழுதிக் கொடுத்தனர். பிற்பாடு, தமிழ்நாட்டுப் பாடநூல்களின் ஒளிநகல்கள் பயன்படுத்தப்பட்டன. தொடர்ந்து, சிங்கப்பூரின் ‘தமிழோசை' பாட நூல்கள் ஹாங்காங்கின் பன்முகக் கலாச்சாரத்துக்கும் கல்வி முறைக்கும் இசைவாக இருப்பதால், இரண்டாம் ஆண்டிலிருந்தே அவை பாடத்திட்டத்தின் அங்கமாகிவிட்டன. கூடவே, தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் வெளியிட்டிருக்கும் பயிற்சிப் புத்தகங்களும் இலக்கண நூல்களும் பயன்படுத்தப்படுகின்றன.

கற்கும் முறை

இந்தியாவில் மொழியைப் படிப்பதில் எழுதும் திறனுக்கே மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆனால், மொழி அறிவு நான்கு திறன்களை உள்ளடக்கியது - வாசித்தல், எழுதுதல், பேசுதல், கேட்டல் ஆகியன. ஹாங்காங் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தாம் கற்கும் மொழிகளை இவ்வண்ணமே படிக்கிறார்கள். தமிழ் வகுப்பிலும் அதுவே பின்பற்றப்படுகிறது. இது மனப்பாடம் செய்யும் முறை அல்ல. வகுப்புகள் இறுதித் தேர்வை மட்டும் குறிக்கோளாகக் கொண்டதல்ல.

மாணவர்களின் தமிழ்க் கல்விக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டதால் புறமே நடத்தப்படும் தேர்வுகளில் அமைப்பாளர்கள் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், பலருக்கும் இது ஒரு குறையாக இருந்தது. நமது பிள்ளைகளின் கல்வித் தரத்தை வேறு உரைகற்களில் உரசிப் பார்க்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். தமிழக அரசின் தமிழ் இணையக் கல்விக் கழகம் மூலம் ஆரம்பக் கல்வி (சான்றிதழ்), உயர் நிலை (மேற்சான்றிதழ்), பட்டயம், பட்டம் என்று பல நிலைகளில் தமிழைக் கற்க முடியும். ஹாங்காங் ஒய்ஐஎஃப்சி கல்விக் கழகம், தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் தேர்வு மையமாகப் பதிவுசெய்துகொண்டது. 2016 முதல் விருப்பமுள்ள மாணவர்கள் இணையக் கல்விக் கழகத்தின் தேர்வையும் எழுதுகிறார்கள். கடந்த ஆண்டு ஆரம்பக் கல்வியின் அடிப்படை, இடைநிலை, மேல்நிலை ஆகிய தேர்வுகளை எழுதியவர்களின் எண்ணிக்கை முறையே 36, 20,10. தேர்ச்சி விகிதம் எவ்வளவு தெரியுமா? எல்லா ஆண்டுகளிலும் 100%. வாழ்க தமிழ்!

- மு.இராமனாதன்,

ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர்.

தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x