Published : 29 Jun 2019 09:35 AM
Last Updated : 29 Jun 2019 09:35 AM

இது விருதுகள் வாரம்...

இந்த வாரம் தமிழ் எழுத்தாளர்கள், இலக்கியச் செயற்பாட்டாளர்கள் எனப் பலருக்கும் வெவ்வேறு அமைப்புகள் விருதுகளை அறிவித்திருக்கின்றன.

கலைஞர் பொற்கிழி விருது

தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி கொடுத்த ஒரு கோடி நிதியில் அவர் பெயராலேயே அறக்கட்டளையைத் தொடங்கி ஆண்டுதோறும் ஏழு தமிழறிஞர்களுக்கு பொற்கிழி விருதுகளை வழங்கிவருகிறது தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம். இந்த ஆண்டுக்கான பொற்கிழி விருதுக்கு மு.மேத்தா (கவிதை), கா.வேழவேந்தன் (கட்டுரை), அய்க்கண் (புதினம்), ப.வேட்டவராயன் (நாடகம்), குழ.கதிரேசன் (சிறுவர் இலக்கியம்), கண்மணி குணசேகரன் (சிறுகதைகள்), கயல் கோ.தினகரன் (இதழாளர்) ஆகிய எழுவரும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். சுப.வீரபாண்டியன், மாம்பலம் சந்திரசேகர், பேராசிரியர் அரிகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழு விருதாளர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது. ஜூலை 16-ல் மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் விருதளிப்பு நடைபெற உள்ளது.

சிற்பி விருது

சிற்பி பாலசுப்பிரமணியம் தலைமையில் இயங்கிவரும் சிற்பி அறக்கட்டளை, கவிஞர் தேவதச்சனுக்கு 24-ம் ஆண்டுக்கான சிற்பி இலக்கிய விருதை அறிவித்துள்ளது. ‘விரல்களில் வழியும் குரலற்றவனின் செங்குருதி’ நூலுக்காகக் கவிஞர் சோலை மாரியப்பனுக்கு சிற்பி இலக்கியப் பரிசையும் டார்கெட் ஜீரோ சுற்றுச்சூழல் வனப்பாதுகாப்பு அமைப்புக்கு பொ.மா.சுப்பிரமணியம் விருதையும் சிற்பி அறக்கட்டளை அறிவித்துள்ளது. ஜூலை 27-ல் பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லூரியில் விருதளிப்பு விழா நடைபெற உள்ளது.

ஸ்பாரோ இலக்கிய விருது

2019-ம் ஆண்டுக்கான ஸ்பாரோ-ஆர்.தியாகராஜன் விருது, தமிழ்க் கவிதைக்குப் பல்லாண்டு கவிதைப் பங்களிப்புக்காக யுவன் சந்திரசேகருக்கும், நம்பிக்கையூட்டும் கவிஞர் கீதா சுகுமாரனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பாரோ விருதானது வழக்கமாகத் தமிழில் இரு விருதுகளும், வேறு மொழிகளில் ஒரு விருதுமாக வழங்கப்பட்டுவருகிறது. இந்த ஆண்டு டி.ஐ.அரவிந்தன், அம்பை, டாக்டர்.சரஞ்சித் கௌர் ஆகியோர் தேர்வுக் குழுவில் இடம்பெற்றிருந்தனர். வேற்றுமொழி விருது இந்த ஆண்டு பஞ்சாபிக் கவிஞர் ஸிம்ரத் ககனுக்கு வழங்கப்படுகிறது. விருது விழா டிசம்பர் மூன்றாம் வாரத்தில் நடைபெறும்.

முத்துகுமாரசாமி விருது

உரையாசிரியர் புலியூர்க்கேசிகன் இலக்கியப் பேரவையும் தமிழாய்வு அறக்கட்டளையும் இணைந்து ஜூன் 26-ல் நடத்திய ஐம்பெரும் விழாவில், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் நிறுவனர் முத்துகுமாரசாமி பெயரிலான விருது, டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பாளர் வேடியப்பனுக்கு வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x