Published : 30 Jun 2019 07:48 AM
Last Updated : 30 Jun 2019 07:48 AM

பதிப்பாளரிடம் ரூ.92 கோடி நஷ்டஈடு கேட்கும் எழுத்தாளர்

ஜோர்டானிய-அமெரிக்க எழுத்தாளரும் பத்திரிகையாளருமான நடாஷா டைன்ஸ், தனது புத்தக ஒப்பந்தத்தை ரத்துசெய்த ‘ரேர் பேர்ட்ஸ்’ பதிப்பகத்தின் மீது 1.34 கோடி டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.92 கோடி) நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடுத்துள்ளார். கடந்த மே மாதம், வாஷிங்டன் நகரில் உள்ள மெட்ரோ ரயிலில் காலை உணவைச் சாப்பிட்ட டபிள்யுஎம்ஏடிஏ நிறுவன ஊழியரான கருப்பினப் பெண்ணின் புகைப்படத்தைப் பதிவிட்டு, ரயிலில் உணவு உண்டது சட்டவிரோதமானது என்று ட்வீட் செய்திருந்தார் டைன்ஸ். அவரது ட்விட்டர் பதிவு நிறவெறி கொண்டதென்று சக ட்விட்டர்கள் கடுமையாகக் கண்டனம் தெரிவித்தார்கள்.

ரயில்களில் சாப்பிடுவதற்கு மெட்ரோ ரயில் பாதுகாவலர்கள் ஒரு தடையையும் அமல்படுத்தவில்லை என்று தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பதிலளித்திருந்தனர். ஒரு வேலை இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு வேலைக்குச் செல்லும் நிலையில், கிடைக்கும் இடைவெளியில் அவர் சாப்பிட்டதையும் சுட்டிக்காட்டினார்கள். இதைத் தொடர்ந்து, டைன்ஸ் தனது பதிவை அகற்றி, மன்னிப்பும் கேட்டார்.

இந்நிலையில், அவரது புத்தகத்தை வெளியிடுவதாக இருந்த ‘ரேர் பேர்ட்ஸ்’ பதிப்பகத்தினர் டைன்ஸின் செயலுக்காக அவரது ஒப்பந்தத்தை சமீபத்தில் ரத்துசெய்துள்ளனர். எழுத்தாளர் டைன்ஸின் வழக்கறிஞர், தனது கட்சிக்காரர் இணையரீதியான விமர்சனங்களால் மிகுந்த துன்பத்துக்குள்ளானதாகவும் கொலை மிரட்டல் விடப்பட்டதாகவும் கூறியுள்ளதோடு மட்டுமல்லாமல் ஒப்பந்தத்தை ரத்துசெய்த பதிப்பகத்தின் மீது வழக்கும் தொடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x