Published : 06 Aug 2017 01:07 PM
Last Updated : 06 Aug 2017 01:07 PM

சிமிட்டிச் சிமிட்டிக் கவிதை செய்யும் விக்ரமாதித்யன்

விக்ரமாதித்யன் கவிதைகளில் மூன்று அம்சங்களைப் பொதுவாகக் காணலாம். 1. எளிமை, 2. மொழிப்பித்து, 3. இருமை. இவை போக வடிவரீதியாகச் சீட்டுக்களை வைத்து வீடமைப்பதுபோல் கவிதை வடிவத்தை அமைப்பார். இந்த வகையில் கடைசி வரியானது முத்தாய்ப்பாய் ஒரு தரிசனம்போல அமைவது. விக்ரமாதித்யனின் ‘வடக்கேயும் தெற்கேயும்’ என ஆரம்பிக்கும் கவிதையை வாசிக்கும்போது அதில் ‘புத்தியை வருத்திக்கொள்ளாதவன் பூடகமானவன் மாதிரிதான் படுவான்’ என்ற வரியைத் தாண்ட முடியாமல் நெடுநேரம் மனம் நின்றுவிடுகிறது. ஒரு வகைக் கழிவிரக்கம், தனிமையுணர்வு. புத்தியை வருத்திக்கொள்வதினால்தானே இத்தனையும். சரஸ்வதி தேவியிடம் வரம் கேட்பதாய் இருந்தாலும் புத்தியை வருத்திக்கொள்ளாதிருக்கும் வரத்தைக் கேட்பதுதான் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது.

விக்ரமாதித்யன் ஒருமுறை சொன்னார், “உணர்ச்சிகள் எல்லாருக்கும்தான் இருக்கிறது. எல்லாருக்கும்தான் வலியும் காதலும் காமமும் இருக்கின்றன. மொழியில் யார் இவற்றைப் பிடிக்கிறாரோ, அவர்தான் கவிஞர். மொழிதான் முக்கியம்’ என்றார்.

மொழிப்பித்து

மனிதர்களில் பெருவாரியானோர் லௌகீகவாதிகளே. எல்லோருக்கும் ஆழமான உணர்வுகள் அமைந்தாலும், தன்னிலிருந்து விலகி நின்று பார்க்கும் பார்வை, திகைப்பு, தன்னைத் தானே கேள்வி கேட்டுக்கொள்ளுதல், தன் உணர்வுகளைப் பின்தொடர்தல், உள்ளுக்கும், புற உலகுக்குமான இடைவெளியை அறிதல் என்ற போராட்டமெல்லாம் இருப்பதில்லை. அது வெகுசிலருக்கான போராட்டம். எழுத்து வெளிப்படுவதே இத்தகைய மனம் கொண்டவரிடமிருந்துதான். இத்தகைய மனதின், அதன் அழுத்தத்திலிருந்து, சுய அனுபவத்திலிருந்து வார்த்தைகள் மேல் வருகின்றன. அதில்தான் உண்மையான அழகு இருக்கும். எந்த மொழியாக இருந்தாலும் கவிதை எழுதுபவருக்கு இதுவே முதல். ஆனால் விக்ரமாதித்யனிடம் வெளிப்படுவது மொழிப்பித்து. அந்தப் பித்து நிலை அபூர்வமானது. அவரது எல்லாக் கவிதைகளிலும் இதைக் கண்டுணர முடியும்.

சிமிட்டி

சிமிட்டிச் சிமிட்டித்தான் பேசுவாள்

சிமிட்டி

சிமிட்டி

சிமிட்டிச் சிமிட்டித்தான் சிரிப்பாள்

சிமிட்டிச் சிமிட்டித்தான்

பார்ப்பாள் சிமிட்டி

சிமிட்டி கேட்பதும்

சிமிட்டிச் சிமிட்டித்தான்

நடக்கும்போதும் சிமிட்டி

சிமிட்டாமல் இராள்

மற்றதிலெல்லாம்

சிமிட்டி எப்படியோ

இந்தக் கவிதையில் பெரிதாய் உட்பொருள் என எதுவுமில்லை. ஒரு குழந்தை கிலுகிலுப்பையை கையில் வைத்துக்கொண்டு அப்படியும் இப்படியும் ஆட்டுவதுபோல ‘சிமிட்டி’ என்ற சொல் கவிதையில் புரள்வதைக் காணலாம். இதைத்தான் மொழிப் பித்து என்கிறேன்.

நாம் ‘எளிமை’ என்னும் சொல்லைப் பிரத்யேகமான அர்த்தத்தில் பயன்படுத்துகிறோம். அதாவது ‘பகட்டு’ என்பதற்கு எதிர்ச்சொல்லாக. எளிமை என்பது இயல்பு. எளிமை என்பது இந்த அறையில் இப்போது நீக்கமற நிறைந்திருக்கும் காற்றைப் போன்றது. தன்னுணர்வின்றி நம் சுவாசமாக எப்படிப் போய் வருகிறதோ அத்தகைய தன்மையுடையது. விக்ரமாதித்யனின் கவிதை நடை இத்தகையது. எந்த அகச்சிடுக்கும் சொற்களில் வெளிப்படாத வண்ணம் அவரது எளிமையான சொற்களின் வடிவம் இருக்கிறது.

கனிந்து தந்த பழம்

ஒரு கவிதையின் முதல் வரி ‘மனமே மிகைதான்’. இதை வாசித்ததிலிருந்து பல நாட்கள் விடாமல் உள்ளுக்குள் ஒலித்தபடி இருந்தது. என்ன ஒரு அழகு! எத்தனையோ ஞானிகள் திரும்பத் திரும்பச் சொன்னதுதான். ஒரு கவிஞன் சொல்லும்போது அது எவ்வளவு அழகாக இருக்கிறது. இது ஒரு தரிசனம்! இந்த வரியைக் கண்டடைய ஒருவருக்கு 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருக்கிறது. ஓங்கியுயர்ந்த பெருமரம் கனிந்து தந்த பழம்.

அடுத்ததாக சீட்டுக்களை வைத்து வீடு கட்டுவது போன்ற கவிதை வடிவம். இதை இன்னொரு வகையில் சொல்லலாம். ஒரு வீட்டின் கதவைத் தொடர்ந்து ஒரே மாதிரியாக ‘டொக் டொக்’ என்று தட்டுவது, கடைசியில் கதவு படீரென்று திறக்கிறது. சமயங்களில் இந்தத் தட்டல்கள் வித்தியாசப்படும்.

அதாவது தட்டுவதற்குப் பதிலாக கதவைத் தள்ளுதல். இந்த வடிவத்தில் ஒரு சிக்கல் என்னவென்றால் இந்த ‘டொக் டொக்’ என்ற சப்தம். ஒரு தடவை தட்டியாயிற்று. எதற்குத் திரும்பத் திரும்ப? ஆனால் இரண்டாவது மூன்றாவது தட்டல்களை எடுத்துவிட்டால் கடைசி வரியின் அழுத்தம் குறைந்துவிடும்.

அது கவிதை வடிவைச் சிதைத்துவிடும். ஒவ்வொரு தட்டலுமே கடைசி வரிக்கு அழுத்தம் கொடுப்பதற்காகத்தான். இதற்கு உதாரணமாக ‘பராமரிப்புப் பணிகள்’ எனத் தொடங்கும் கவிதையையும் ‘என்னபாடு படுத்துகிறது பக்கத்துப் படுக்கை’ என்ற தலைப்பிலான கவிதையையும் சொல்லலாம்.

என்ன பாடு படுத்துகிறது

பக்கத்துப் படுக்கை

காலியாகக் கிடந்தது

என்ன செய்தோம்

பக்கத்துப் படுக்கை

காலியாகக் கிடக்கிறது

என்ன செய்வோம்

பக்கத்துப் படுக்கை

காலியாகவே கிடக்கும்

என்ன செய்ய

என்ன பாடு படுத்துகிறது

இந்தப் பக்கத்துப் படுக்கை

ஒரே விஷயம்தான். காலத்தை மாற்றிப் போடுவதன் மூலம் அதன் அர்த்தம் எத்தனை விதமாக மாறிவிடுகிறது. ஒவ்வொரு பத்தியும் எத்தனை சாத்தியங்களுடன் இருக்கிறது. மூன்று பத்திகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாய். ஆனால் முழுக்கவும் வேறுவேறானதாய். விக்ரமாதித்யனின் கவிதைகளில் விமர்சிக்க நிறைய இருக்கத்தான் செய்கிறது. பிரச்சினை என்னவென்றால் அவை என்னவென்று அவருக்கே தெரிந்திருப்பதுதான்!

- பாலா கருப்பசாமி, இலக்கிய விமர்சகர்,

தொடர்புக்கு: balain501@gmail.com

சாயல் எனப்படுவது யாதெனின்

06chdas_vikki-saayal

விக்ரமாதித்யன்

விலை: ரூ. 125

வெளியீடு: படிகம் பதிப்பகம், வில்லுக்குறி -629 180,

9840848681

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x