Last Updated : 31 Aug, 2017 09:41 AM

 

Published : 31 Aug 2017 09:41 AM
Last Updated : 31 Aug 2017 09:41 AM

பெண்கதை எனும் பெருங்கதை: 9

ரண்மனையில் ராஜா பக்கவாத நோயில் படுத்த படுக்கையாக இருந்தார்.

இப்போது ராணியின் மேல்பார்வையில்தான் எல்லாமும்.

தர்பார் மண்டபத்தில் கம்பளம் விரித்து அதில் நடுவே ஒரு அகலமான தட்டில் நிறைய ஜாதகங்கள் குவியலாக வைக்கப்பட்டிருந்தன.

ராணி வந்து அமர்ந்துகொண்டு, பார்க்க வேண்டிய ஜாதகங்களைப் பார்க்கச் சொன்னார்.

பார்த்துக் கொண்டிருந்தபோதே மாலை நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. மதியம் வந்தபோது ஜோதிடருக்கும் அரண்மனை உணவு கிடைத்தது. ராணி அதிக நேரம் பேச்சை வளர்த்துக்கொண்டேயிருந்தார் எனப்பட்டது ஜோதிடருக்கு. என்ன செய்வது? ஜோதிடரால் ஒன்றும் சொல்ல முடியாது.

சில பெரிய இடங்களில், ‘இருங்க, தீபம் பொருத்திய பிறகு போகலாம்...’ என்று சொல்லிவிட்டால், தட்டிச் சொல்ல முடியாது. ஜோதிடரின் மனம் அலைபாய்ந்தது.

இல்லாத சந்தேகங்களைக் கேட்டுக்கொண்டே இருந்தார் ராணி. ஊர்ஜிதம் செய்துகொள்ள அதையே மாறி மாறிக் கேட்பார்.

புறப்படும்போது மழை பிடித்துக் கொண்டது.

ஜோதிடர் எதிர்பார்த்ததையும்விட சன்மானம் மிக அதிகமாக இருந்தது.

‘மழை இருட்டு’ என்பது பல வகை, பல முகம் கொண்டது; மழை வருவதற்கு முன்பே இருட்டு வந்துவிடும்.

கூடார வண்டி தயாராக வந்து நின்று கொண்டிருந்தது. இருந்து போகும்படிதான் சொன்னார்கள்.

எல்லாத்தையும் விட ‘அந்த சோலி’ முக்கியமல்லவா! ‘‘வண்டியை வேகமாக விடு...’’ என்றார். வேகமாகத்தான் போனது. வண்டி ஓட்டிக்குத் தெரியும்; வாயைத் திறக்கக் கூடாது. ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். பிடிவாதமாக இருந்தார் ஜோதிடர். அரண்மனையில் கொடுத்தனுப்பிய தாழம்பூக் குடையைப் பிடித்துக்கொண்டு வண்டியை அனுப்பிவிட்டார்.

ஆத்தங்கரையில் ஒரு ஈ, காக்கையைக் கூடக் காணோம்.

டகுத் துறையைப் பார்க்க நடந்தார். அங்கேயும் யாரும் இல்லை. படகுகள் மட்டும் குப்புறக் கிடந்தன.

‘இனி என்ன செய்ய?’ என்று யோசித்தவேளையில், யாரோ குரல் கொடுத்தது கேட்டு, குரலைத் தேடினார். பக்கத்தில் உள்ள குடிசைக்குள்ளே இருந்து ஆண் குரல் வந்தது. அதைப் பார்த்துப் போனார்.

“பாத்து வாங்க, களி மண் வழுக்கும்” என்றது குரல். அந்தக் குடிசைக்குள் புதிதாகச் செய்த பானை, சட்டிகள் அடுக்கப்பட்டிருந்தன.

“வாங்க, வாங்க, பேச்சுத் துணைக்கு ஆள் கிடைச்சது” என்று வரவேற்றார் முன் குடுமி வைத்திருந்த அந்த வேளாளர். விவரம் தெரிந்தவராகத் தெரிந்தார்.

“கொட்ற மழையில அப்படி என்ன அவசரம்?” என்று கேட்டார். எப்படிச் சொல்றது?

“போயே ஆகணும். அப்படி ஒரு அவசரம்; அவசரத்திலும் அவசரம்!”

“உயிர் போற அவசரமா?”

“உயிர் தரும் அவசரம்!”

வேளாளர் சிரித்தார். ஜோதிடருக்கும் சிரிப்பு வந்தது.

“ஏதாவது பச்சிலை கொண்டுப் போறீகளா?”

திணறியது மனசு ஜோதிடருக்கு. கைமீறிப் போய்விடும் என்று தோன்றிவிட்டது. மனம்விட்டுப் பேசாவிட்டால் மனம் வெடித்துவிடலாம்.

பளிச் என்று வேளாளரின் இரு கைகளையும் பிடித்தார்.

“சொல்லுங்க என்னதுன்னு? சொன்னாத்தானே தெரியும். என்ன சங்கடம் உங்களுக்கு?”

மனம் திறந்து எல்லாத்தையும் சொல்லிவிட்டார் ஜோதிடர்.

சொல்லி முடித்துவிட்டு “எல்லாம் போச்சி” என்றார்.

“ஒண்ணும் போகலை; இப்படியான சமயங்களில்தான் நம்ம கெட்டிக்காரத்தனத்தைப் பயன்படுத்தணும்.”

“தலைக்கு மேல் போயாச்சி.”

“போகலைங்கிறேன். நீங்க சொன்ன நேரத்துல நீங்க அங்கே போக முடியாது; அதனால அது இங்கே முடியும்.”

“என்னச் சொல்றீங்க... தெளிவா சொல்லுங்க?”

“சொல்றேன். என்னுடைய பேத்தி இருக்கா. ஒரு மஞ்ச நூல்ல மஞ்சத் துண்டு ஒண்ணக் கட்டி, அவ கழுத்துல கட்டும். ஜாம் ஜாம்னு ஜாலியா இரும். கடவுள் உம்ம பக்கந்தாம் இருக்காரு; புறப்படுவம்; எந்திரியும்....”

“ஆஹா.. ஆஹா.. கடவுளே, நம்ப முடியலையே சாமி!”

நெமை தட்டுவதற்குள் ‘கல்யாணம்’ நடந்தது. சரியான நேரத்தில் ரெண்டு பேரையும் ஒரு அறைக்குள் தள்ளி கதவை அடைத்தார்கள்.

வேளாளரோட பேத்தி சரியான வெடுவாச் சுட்டி. வேத்துக் கை மேல படவே விடலை. கையை கிட்டே கொண்டு போனாலே துள்ளி துள்ளி சாமியாடுனா.

‘உலக மகா ஜோதிட வல்லாள கண்டன்’ என்று பெயர் எடுத்த, வாழ்நாளில் பாதிக்கும் மேலாகிவிட்ட வயசில், பல கோணங்களில் யோசித்தான். உட்கார்ந்து பேசிப் பார்த்தான். இப்படி இப்படி என்று சொன்னான். அவளுக்கும் அந்த ஆசை, உணர்வு இருந்தது. ஆனால் கிட்டப் போனாலே துள்ளி விழுந்தாள். எல்லாருக்கும் பத்துப் பொருத்தங்களைப் பார்த்து பார்த்துச் சொல்ற பாவி என்னோட வாழ்க்கை இப்படி ஆயிட்டேன்னு புலம்பினான் ஜோதிடன்.

அந்த நேரமெல்லாம் கடந்துபோனது. அழுகையே வந்துவிட்டது ஜோதிடனுக்கு.

“அழாதீங்கொ அத்தான்... கிணத்துத் தண்ணியெ வெள்ளம் கொண்டு போயிறாது” என்றாள் புதுப் பெண்டாட்டி.

சின்னப் பொண்ணானாலும் விவரமா இருக்காளே. இன்னைக்கு இல்லேன்னா நாளைக்கு, நாளைக்கும் இல்லேன்னா நாளைன்னக்கி. கிணத்துல தண்ணியிருக்கந்தண்டியும் கவலையில்லே!

வேளாளரும் இதெத்தாம் சொல்லி மாப்பிள்ளையையும், பேத்தியையும் படகுல ஏத்தி அனுப்பி வெச்சாரு.

இவர்கள் வருவதை தூரத்திலிருந்தே பார்த்துவிட்டாள் ஜோதிடரின் பொண்டாட்டி. கூட ஒரு பெண்ணையும் புருசன் கூட்டிட்டு வர்றது அவளுக்கு தப்பாகத் தெரியலை.

‘ஏம் நேரத்தோட வரலைனு திட்டுவாளோ என்று நினைச்சதுக்கு மாறாக, இப்படி சந்தோசமா அவள் வரவேற்பது ஆச்சரியமா இருந்தது.

“சரியான நேரத்தில் சரியானபடிக்கு எல்லா நடந்து முடிஞ்சது!’’ என்றால் ஜோதிடன் பொண்டாடி

“கழுகுமலையில மழை பேஞ்சுதாம்; கடம்பூர்ல இடி விழுந்துச்சாம்” என்கிற சொலவடைதான் அவனுக்கு அப்போ ஞாபகத்துக்கு வந்திச்சி.

- கதை பேசும்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x