Last Updated : 18 Aug, 2017 11:02 AM

 

Published : 18 Aug 2017 11:02 AM
Last Updated : 18 Aug 2017 11:02 AM

பார்த்திபன் கனவு 17: விக்கிரமன் சபதம்!

சி

த்திரங்கள் எல்லாம் பார்த்து முடித்ததும் விக்கிரமன் தயங்கிய குரலில் “அப்பா!” என்றான். மகாராஜா அவனை அன்பு கனியப் பார்த்து “என்ன கேட்க வேண்டுமோ கேள்… குழந்தாய்! சொல்ல வேண்டியதையெல்லாம் தயங்காமல் சொல்லிவிடு; இனிமேல் சந்தர்ப்பம் கிடைப்பது அரிது” என்றார்.

“ஒன்றுமில்லை அப்பா! இந்தச் சித்திரங்கள் எல்லாம் எவ்வளவு நன்றாயிருக்கின்றன என்று சொல்ல ஆரம்பித்தேன். இவ்வளவு அற்புதமாகச் சித்திரம் எழுத எப்போது கற்றுக்கொண்டீர்கள்? நமது சித்திர மண்டபத்தில்கூட இவ்வளவு அழகான சித்திரங்கள் இல்லையே!” என்றான் விக்கிரமன்.

மகாராஜா மைந்தனைக் கட்டி அணைத்துக் கொண்டார். “என் கண்ணே! என்னுடைய சித்திரத் திறமையை நீ ஒருவன் வியந்து பாராட்டியதே எனக்குப் போதும். வேறு யாரும் பார்த்துப் பாராட்ட வேண்டியதில்லை. என் மனத்திலிருந்த ஏக்கம் இன்று தீர்ந்தது” என்றார். “ஆனால் அப்பா! எதற்காக உங்கள் வித்தையை நீங்கள் இவ்விதம் ஒளித்து வைத்திருக்க வேண்டும்? ஆச்சரியமான சித்திரங்களைப் பற்றி வெட்கப்பட வேண்டிய அவசியம் என்ன? ஆகா! இந்த உருவ முகங்களிலேதான் எத்தனை ஜீவக் களை! இவ்வளவு ஆச்சரியமான சித்திரங்களை வேறு யார் எழுத முடியும்?

ஏன் இந்த இருட்டு மண்டபத்தில் இவற்றைப் பூட்டி வைத்திருக்க வேண்டும்? எல்லோரும் பார்த்து சந்தோஷப்பட்டால் என்ன!” என்று விக்கிரமன் ஆத்திரமாகப் பேசினான். அப்போது பார்த்திப மகாராஜா சொன்னார்: “கேள், விக்கிரமா! இந்த உலகத்தில் எவன் அதிகாரமும், சக்தியும் பெற்றிருக்கிறானோ, அவனிடம் உள்ள வித்தையைத்தான் உலகம் பாராட்டும். காஞ்சியில் மகேந்திர சக்கரவர்த்தி இருந்தாரல்லவா? ஒரு தடவை பெரிய வித்வத் சபை கூடி அவருக்குச் ‘சித்திரக்காரப் புலி' என்ற பட்டம் அளித்தார்கள்.

மகேந்திரவர்மருடைய சித்திரங்கள் மிகவும் சாமானியமானவை; ஆனாலும் அவற்றைப் புகழாதவர் கிடையாது. இப்போதுள்ள நரசிம்ம சக்கரவர்த்திக்கு இது மாதிரி எத்தனையோ பட்டப் பெயர்கள் உண்டு. சித்திரக் கலையில் சிங்கம்! கான வித்தையில் நாரதர்! சிற்பத்தில் விசுவகர்மா! - உலகம் இப்படியெல்லாம் அவரைப் போற்றுகிறது. ஏன்? அவரிடம் பெரிய சைன்யம் இருப்பதினாலேதான்; அவருடைய சாம்ராஜ்யம் பெரியதாக இருப்பதனால்தான். குழந்தாய்! தெய்வத்துக்கு ஏழை, செல்வன் என்ற வித்தியாசம் இல்லை. இறைவனுக்குச் சக்கரவர்த்தியும் ஒன்றுதான். செருப்பு தைப்பவரும் ஒன்றுதான்.

ஆனாலும், இந்த உலகத்தில் தெய்வத்தின் பிரதிநிதிகளாக் இருப்பவர்கள் கூட, பெரிய படை பலம் உள்ளவர் பக்கமே தெய்வமும் இருப்பதாகக் கருதுகிறார்கள். மகேந்திரன் வெகுகாலம் ஜைன மதத்தில் இருந்தான். சிவனடியார்களை எவ்வளவோ துன்பங்களுக்கு உள்ளாக்கினான். பிறகு, அவனுக்குத் திடீரென்று ஞானோதயம் உண்டாயிற்று. சிவபக்தன் என்று வேஷம் போட்டு நடித்தான் விக்கிரமா! மகேந்திரனும் சரி, அவன் மகன் நரசிம்மனும் சரி, நடிப்புக் கலையில் தேர்ந்து, விதவிதமான வேஷங்கள் போட்டுக் கொள்வார்கள்; நம்பினவர்களை ஏமாற்றுவார்கள்.

இவர்களுடைய சிவபக்தி நடிப்பு உலகத்தை ஏமாற்றிவிட்டது. புராதன காலத்திலிருந்து சோழ வம்சத்தினர்தான் சைவத்தையும், வைஷ்ணவத்தையும் வளர்த்து வந்தார்கள். சிராப்பள்ளிப் பெருமானையும், ரங்கநாதனையும், குல தெய்வங்களாகப் போற்றி வந்தார்கள். ஆனால் இன்றைய தினம் சிவனடியார்களும், வைஷ்ணவப் பெரியார்களும் யாருடைய சபா மண்டபத்துக்குப் போகிறார்கள்? திரிலோகாதிபதியான காஞ்சி நரசிம்ம சக்கரவர்த்தியின் ஆஸ்தான மண்டபத்துக்குத்தான்.

என்னுடைய சித்திரங்களைப் பிறர் பார்ப்பதை நான் ஏன் விரும்பவில்லை என்று இப்போது தெரிகிறதா? சோழ நாடு சிற்றரசாயிருக்கும் வரையில் ‘பார்த்திபன் சித்திரம் வேறு எழுத ஆரம்பித்துவிட்டானா' என்று உலகம் பரிகசிக்கும். விக்கிரமா! இன்னொரு விஷயம் நீ மறந்துவிட்டாய்...” என்று நிறுத்தினார் மகாராஜா. “என்ன அப்பா?” என்று விக்கிரமன் கேட்டான்.

- அடுத்த வெள்ளியன்று மீண்டும்

கனவு விரியும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x