Published : 05 Aug 2017 10:50 AM
Last Updated : 05 Aug 2017 10:50 AM

வாசிப்பு குறித்த விழிப்புணர்வைப் பள்ளி, கல்லூரிகளிலேயே ஏற்படுத்த வேண்டும்!- த. ஸ்டாலின் குணசேகரன் நேர்காணல்

னைவரிடமும் புத்தகங்களைக் கொண்டுசெல்ல வேண்டுமென்ற உத்வேகத்துடன் ஈரோட்டின் ‘மக்கள் சிந்தனைப் பேரவை’ 2005 முதல் ஈரோட்டில் புத்தகத் திருவிழாவை நடத்திவருகிறது. தலைநகர் சென்னை, நகரியம் நெய்வேலி ஆகிய இடங்களில் மட்டுமே நடந்த புத்தகத் திருவிழாவை, தமிழகம் முழுவதும் நடத்தும் தைரியத் தைக் கொடுத்த நகரம் ஈரோடு. 12 நாள் நடக்கும் புத்தகத் திருவிழாவுக்காக 12 மாதங்கள் இடைவிடாது உழைக்கும் மக்கள் சிந்தனைப் பேரவையின் நிறுவனர் மற்றும் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரனுடன் ஒரு நேர்காணல்.

மற்ற ஊர்களில் நடக்கும் புத்தகத் திருவிழாக்களிலிருந்து ஈரோடு புத்தகத் திருவிழா எப்படி மாறுபடுகிறது?

ஈரோடு புத்தகத் திருவிழாவில் அரங்குகளை அமைக்க முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற விதிமுறை பின்பற்றப்படுவதில்லை. அரங்கு அமைக்க விண்ணப்பித்த பதிப்பகங்களில், சிறந்த நிறுவனங்களை ஒரு குழு அமைத்துத் தேர்வுசெய்கிறோம். ஆக்ராவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான நூல்களை மட்டும் வெளியிட்டுவருகிறது. இந்த நிறுவனத்தாரிடம் நேரில் சென்று பேசி, அவர்களைப் பங்கேற்கச் செய்துள்ளோம். இதன்மூலம் இத்தனை போட்டித் தேர்வுகள் உள்ளனவா என்று மாணவர்கள் வியந்து பார்க்கும்போது, எங்களின் முயற்சிக்கு வெற்றி கிடைத்துவிடுகிறது.

ஈரோடு புத்தகத் திருவிழாவின் சாதனையாக

எதைக் கருதுகிறீர்கள்?

இந்த ஆண்டுடன் சேர்த்து 13 ஆண்டுகளாகப் புத்தகத் திருவிழாக்கள் நடத்துவதன் மூலம் ஆயிரக்கணக்கான வீடுகளில் நூலகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எழுத்துக் கூட்டி மட்டுமே படிக்கத் தெரிந்த ஏராளமானவர்கள் ஈரோடு புத்தகத் திருவிழாவுக்குத் தொடர்ந்து வருவதையும், சிறு சிறு புத்தகங்கள் வாங்கிச் செல்வதையும் நான் பார்க்கிறேன். காலப்போக்கில் அவர்களில் சிலர் தீவிர வாசகர்கள் ஆனதையும் கண்டுள்ளேன்.

ஈரோடு புத்தகத் திருவிழாவில் நாள்தோறும் நடக்கும் சிந்தனை அரங்கில் சொற்பொழிவாளர்களின் உரை அனைத்தும் உயரிய தொழில்நுட்பத்தால் பதிவுசெய்யப்பட்டு, புத்தகத் திருவிழாவில் தனி அரங்கு அமைத்து விற்பனை செய்யப்படுகிறது. ‘யூடியூப்’ மூலமும் இந்த உரைகள் பதிவிடப்பட்டுள்ளன.

ஈரோட்டில் நேற்று நடந்த ‘தமிழகம் வாசிக்கிறது’ என்ற வாசிப்பு விழிப்புணர்வுப் பேரணியில், 15 ஆயிரம் கல்லூரி மாணவர்கள் எழுச்சியுடன் பங்கேற்றனர். கடந்த 12 ஆண்டுகளில் புத்தகத் திருவிழாவின் தாக்கம்தான் இது. மாணவர்கள் மட்டுமல்லாது, கல்வி நிறுவனங்களின் தாளாளர்கள், தலைவர்கள் அனைவரும் பேரணியில் பங்கேற்றது கூடுதல் சிறப்பு. மக்கள் சிந்தனைப் பேரவையில் 20 ஆயிரம் கல்லூரி மாணவர்கள் உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளனர். ஈரோடு புத்தகத் திருவிழாவின் விளைவாக, கல்லூரிகள் தோறும் வாசகர் வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு புத்தகத் திருவிழா நடத்துவதில் உள்ள சிரமங்கள் என்னென்ன?

நுழைவுக் கட்டணம் இல்லாமல் நடத்தும்போது, பொருளாதாரச் சுமை அதிகமாகவே இருக்கும். ஆனால், அதனைப் பொருட்படுத்தாமல், மனப்பூர்வமாக, நம்பிக் கையாக நடத்துவதால் எங்களுக்கு மகிழ்ச்சியே! ஒவ்வொரு ஆண்டும் புத்தகத் திருவிழாவின் நிறைவு நாள், அடுத்த புத்தகத் திருவிழாவின் முதல் நாள் என்று சொல்கிறோம். அடுத்த ஆண்டு புத்தகத் திருவிழா நடக்கும் தேதியை, நிறைவு விழாவிலேயே அறிவிக்கிறோம். ஆண்டு முழுவதும் புத்தகத் திருவிழாவுக்கு நாங்களும் தயாராகிறோம்; வாசகர்களையும் நம்பிக்கையோடு தயார்படுத்துகிறோம்.

புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்தவும், நூல்கள் விற்பனையை அதிகரிக்கவும் தமிழக அரசு என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்?

மாவட்டவாரியாகப் புத்தகக் காட்சிகளை நடத்தலாம் என்று அரசு முடிவுசெய்துள்ளது வரவேற்கத்தக்கது. புத்தகக் காட்சி நடத்துபவர்களை அரசு ஊக்குவிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி அளவிலேயே புத்தக வாசிப்பு குறித்த விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும். வாசிப்பு, நூலகம் சார்ந்த புதிய கண்ணோட்டம் அரசுக்கு வேண்டும். அப்படி இருந்தால்தான், பள்ளி, கல்லூரி நூலகங்கள் முறையாகப் பயன்படுத்தச் செய்ய முடியும். அதற்காக வித்தியாசமான முயற்சிகளை அரசு முன்னெடுக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x