

பெரும் பணக்காரர்கள் யாரும் பெரிய அறிவாளியாகஇல்லையே, பின்பு எப்படி அவர்களால் சம்பாதிக்க முடிந்தது? - என ஒருவாசகர் மின்னஞ்சலில் கேட்டிருந்தார். காலந்தோறும் இந்த கேள்விகேட்கப்பட்டே வருகிறது. எத்தனையோ பதில்கள் இதற்குஅளிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், எதுவும் திருப்திகரமாகவே இல்லை. ’100நாட்களில் பணக்காரன் ஆவது எப்படி?’ என்ற புத்தகத்தை நூலகத்தில்எடுப்பதற்கு பெரும்போட்டி நிலவும். அதன் அத்தனை பக்கங்களிலும்அடிக்கோடு போட்டிருப்பார்கள். அதைப் படித்தவர்களில் ஒருவர்கூடபணக்காரர் ஆகியிருப்பார் என்று தோன்றவில்லை. பணம் எல்லோருக்கும்தான்தேவையாக இருக்கிறது. அதை அடைய ஆயிரம் வழிகளும் இருக்கின்றன. ஆனால்,எல்லோரிடமும் பணம் சேர்வது இல்லை. சிலருக்கு பணம் கொட்டிக்கொண்டேஇருக்கிறது. பலரோ, வாழ்நாளெல்லாம் பணத்தைத் துரத்திக்கொண்டேஇருக்கிறார்கள். அவமானங்களும், வலிகளும்தான் அவர்களுக்கு மிச்சம்.
அறிவுத்திறன் கொண்டவர்கள் எல்லோரும் வாழ்வில் ஜெயித்துவிடுவது இல்லை.மாறாக, பெரிய திட்டம் ஒன்றை மனதில் உருவாக்கிக் கொண்டு, அதை நோக்கிமெல்ல செயல்பட்டு போராடி உழைப்பவர்களே வெல்கிறார்கள். உண்மையில்ஒருவர் எவ்வளவு அறிவுத்திறன் கொண்டிருக்கிறார் என்பது முக்கியமில்லை.அதை எப்படி பயன்படுத்துகிறார் என்பதே முக்கியம். எந்த எண்ணம் அறிவைவழிநடத்துகிறதோ, அதை நோக்கியே நாம் செல்கிறோம். நம் அறிவுத்திறனைஎப்போதுமே குறைவாக எடைபோடுவதுடன் அடுத்தவர் அறிவுத்திறனை மிகையாகமதிப்பிடுகிறோம். குறைந்த அறிவுத்திறன் கொண்டவர் என்பதால்தோற்றுப்போகிறவர்கள் மிக மிக குறைவு. அவநம்பிக்கையும், பயமும்,எதிர்மறை எண்ணங்களுமே தோல்விக்கு முக்கிய காரணங்கள்.
இதன் காரணமாகவேசிறார்களுக்கு சொல்லப்படும் கதைகள், எதிர்பாராத சூழலில் எப்படிநடந்துகொள்வது? பிரச்சினைகளை எப்படி சந்திப்பது? அதை மதியூகத்தின்வழியே எவ்வாறு வெல்வது என்பதை கற்றுத் தருகின்றன. ‘ஏழு கடல், ஏழு மலைதாண்டி அரக்கன் உயிர் இருக்கிறது’ என்று கதை சொல்வதற்கு காரணம்,செய்து முடிக்க முடியாத சவாலை ஒருவன் எப்படி எதிர்கொள்ள வேண்டும்என்பதற்காகவே!
சிறார் கதைகளில் வரும் நாயகர்கள் பெரிய ஆயுதங்கள்எதையும் கைக்கொள்வதில்லை. அரக்கனை முறியடிக்க நண்பர்களைத் துணைசேர்க்கிறார்கள். எறும்பு முதல் யானை வரை பேதமின்றி நண்பர்களாகஒன்றுசேர்ந்து உதவுகிறார்கள், முடிவில், எதிரியை தேடிச் சென்றுவீழ்த்துகிறார்கள். இதுதான் கதை கற்றுத் தரும் பாடம்.
வெற்றிக்குமுதல் தேவை நம்பிக்கை. இரண்டாவது தேவை நட்பு வட்டம். மூன்றாவதுஅச்சமின்றி நடந்துகொள்வது. இதை வலியுறுத்தவே கதைகளில் இளவரசன்காட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறான். வெல்லமுடியாத அரக்கனைக் கொல்லநல்ல நண்பர்களைத் துணைக்குக் கொள்கிறான். எதிரியின் இடத்துக்கே தேடிச்சென்று அவனை வீழ்த்துகிறான். சிறார்களுக்கு சொல்லப்படும் பெரும்பான்மைகதைகள் வெற்றியோடுதான் நிறைவு பெறுகின்றன. அது, எப்போதும் நன்மையேவெற்றியடையும் என்ற எண்ணத்தை சிறார் மனதில் ஆழமாக விதைத்துவிடுகிறது.
எந்தக் கதையிலும் கதாநாயகன் உடனடியாக ஜெயித்துவிடுவதில்லை. அவன்பல்வேறு விதமான பிரச்சினைகளை எதிர்கொள்கிறான். அவற்றில்சிக்கிக்கொண்டு சிரமங்களை அனுபவிக்கிறான். முடிவில்தான்வெற்றிபெறுகிறான். இது ஓர் அனுபவ பாடம். அசாத்தியமான திறமைகள்,மிகையான அறிவுத்திறன் எதுவும் வெற்றியாளனுக்குத் தேவையில்லை. அவன்சந்தர்ப்பத்துக்கு ஏற்றார்போல அறிவைப் பயன்படுத்தினால் போதும் என்றேகதைகள் கூறுகின்றன.
தேவதை கதையில் அரக்கனைக் கொல்ல செல்லும் கதாநாயகன்வழியில் பலருக்கும் உதவிகள் செய்கிறான். அவன் செய்த நன்மைகளே அவனதுசவாலுக்கான விடையை அறிய உதவுகின்றன. நானே பிரச்சினையில் இருக்கிறேன்என ஒதுங்கிப் போகக் கூடாது. அதைத் தாண்டி அடுத்தவருக்கு உதவி செய்யவேண்டும் என்பதைத்தானே இது சுட்டிக்காட்டுகிறது. வாழ்வில் மனிதர்கள்கடைபிடிக்க வேண்டிய நல்லொழுக்கங்களை, அறத்தை கதைகள் நமக்குபோதிக்கின்றன. அது, தேன் கலந்து மாத்திரைகளை சாப்பிடத் தருவதை போன்றவழி.
மாலத்தீவு பழங்குடியினரிடம் ஒரு கதை காணப்படுகிறது. மீன்களுக்குஏன் செவுள் கிழிந்துபோய் காணப்படுகிறது என்பதற்கு சொல்லப்படும் கதைஅது. கடலில் நண்டு, ஆமை, கடல்குதிரை, ஆக்டோபஸ் என ஒவ்வோர்உயிரினத்துக்கும் கடவுள் ஒரு வேலையைக் கொடுத்திருந்தார்.
கடலைசுத்தப்படுத்த வேண்டிய வேலை மீன்களுடையது. மற்ற மீன்கள் ஓடியோடிகுப்பைகளை அகற்றிக்கொண்டே இருக்கும்போது குகை மீன்கள் மட்டும்தங்களுக்குள் அரட்டை அடித்துக்கொண்டு இருந்தன. தினமும் இதைபார்த்துக்கொண்டே இருந்த மீன்கள், கடவுள் நம்மை மட்டும் ஏன் வேலைசெய்ய வைக்கிறார்? வேலை செய்யாத இந்தக் குகை மீனை தண்டிக்கவில்லையே எனநினைத்து குமுறினார்கள். முடிவில் ஒருநாள் நாங்களும் வேலை செய்யமாட்டோம் என கடலை சுத்தம் செய்யாமல் விளையாடத் தொடங்கினார்கள். இதனால்கடல் முழுவதும் குப்பை சேர்ந்து துர்நாற்றம் பரவத் தொடங்கியது. விஷயம்அறிந்த கடவுள், மீன்களை அழைத்து ஏன் வேலை செய்யவில்லை எனக்கோபித்துக்கொண்டார்
மீன்களைத் தவறாக வழிநடத்தியது குகை மீன்களின்செயல் என்ற உண்மை வெளிப்பட்டது. இதனால் ஆத்திரமான கடவுள், ‘குகைமீன்களுக்கு இனி கண்கள் கிடையாது. இரை தேடக்கூட சிரமப்படட்டும்’ எனஅதன் கண்களைப் பறித்துவிட்டாராம். அதுபோலவே, அடுத்தவரைப் பார்த்துதவறாக நடந்துகொண்ட மீன்களுக்கு தண்டனையாக, தனது கத்தியால் மீனின்வாயைக் கிழித்துவிட்டார். அன்று முதலே மீன்கள் கிழிந்த செவுளோடுவாழ்கின்றன என முடிகிறது அந்த மீன் கதை.
தான் வேலை செய்யாததுமட்டுமின்றி, வேலை செய்கிற மற்றவரைக் கெடுப்பதும் சிலரது இயல்பு.அதற்கு நாம் பலியாகிவிடக்கூடாது என்பதை இக்கதை வலியுறுத்துகிறது.
அரசுசம்பளம் வாங்கிக் கொண்டு, தன் வேலையைக் கண்டுகொள்ளாமல், வெளிவேலைகள்செய்து சம்பாதிக்கும் பலரை எனக்குத் தெரியும். சிலர் வெறுமனேகையெழுத்து போட்டுவிட்டு தங்களுக்குப் பிடித்தமான விஷயங்களை செய்யவெளியே கிளம்பிவிடுகிறார்கள். சம்பளம் தர ஒருவர் வேண்டும். ஆனால்,வேலை செய்யமாட்டேன் என்பது என்னவிதமான மனநிலை? தனியார் நிறுவனங்களில்இப்படி செய்ய முடியுமா? அரசு அலுவலகங்களில் கறாரான கண்காணிப்புமுறைகள் இல்லாத காரணத்தால் வேலை கெடுகிறது என்பதே உண்மை.
இன்றுபெருநகரங்களில் ஆணும் பெண்ணும் இணையாக சம்பாதிக்கிறார்கள், ஆனால்,இணையான சுதந்திரம் இல்லை. பணத்தின் மதிப்பு தெரியாத தலைமுறைஉருவாகிவிட்டது. லட்சம், கோடி என்பதெல்லாம் இவர்களுக்கு வெறும்எண்களே. பணம் இல்லாதவன் சந்திக்கும் பிரச்சினைகளைவிட பணம் உள்ளவன்சந்திக்கும் பிரச்சினைகள் அதிகம். ஆனால், உலகின் கண்களுக்கு அதுதெரியாது. உறவுகளையும் நட்பையும் பணம் எளிதாகப் பிரித்துவிடுகிறது.இந்த உலகில் மிக பயங்கரமான ஆயுதம் காகிதத்தில் செய்யப்பட்ட பணமே. அதைஎளிதாகக் கையாளுகிறோம் என்பதாலேயே அதன் முழு வலிமையையும் நாம் உணரவேஇல்லை.
- கதைகள் பேசும்… எண்ணங்களைப் பகிர: writerramki@gmail.com