Published : 15 Aug 2017 10:45 AM
Last Updated : 15 Aug 2017 10:45 AM

கடவுளின் நாக்கு 58: எதிர்காலம் எப்படியிருக்கும்?

ஷே

க்ஸ்பியரின் ‘மேக்பெத்’ நாடகத்தில் ஒரு காட்சி. போரில் வெற்றிபெற்றுவரும் மேக்பெத்தை சூனியக்காரிகள் எதிர்கொண்டு வாழ்த்துகிறார்கள். அதில், ஒரு சூனியக்காரி மேக்பெத்தைப் பார்த்து ‘‘வருங்கால மன்னனே வருக!’’ என வாழ்த்துகிறாள். போர்புரிவது மட்டுமே தனது கடமை என்றிருந்த மேக்பெத்தின் மனதில் இந்தப் புகழுரை ‘தான் எப்படி மன்னராக முடியும்?’ என்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

அப்போது அவனது நண்பன் பாங்கோ சூனியக்காரிகளைப் பார்த்து ‘‘காலத்தின் விதிகளை ஊடுருவிப் பார்த்து, உங்களால் வருவதை உரைக்க முடியும் என்றால் உண்மையைக் கூறுங்கள். எந்த விதை முளைக்கும்? எந்த விதை கருகும் என்று தெளிவாகச் சொல்லுங்கள்...’’ என்று கேட்கிறான்.

சூனியக்காரிகள் பதில் சொல்லாமல் புகைபோல காற்றில் மறைந்துவிடுகிறார்கள்.

1606-ல் நிகழ்த்தப்பட்ட ஷேக்ஸ்பியரின் இந்த நாடகம் இத்தனை நூற்றாண்டுகள் கடந்தும் இன்றைக்கும் பொருத்தமானதாகவே இருக்கிறது. எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதைத் தெரிந்துகொள்ள மனித மனம் எப்போதுமே ஆசைப்படுகிறது. அதற்காகத்தான் சாமியார்களைத் தேடி சிலர் போகிறார்கள். ஆருடம் கேட்கிறார்கள். மாய மந்திர வழிகளைக் கையாள்கிறார்கள். யாரோ, ஏதோ சக்தியால் சொல்லும் ஆருடங்களை நிஜம் என நம்புகிறார்கள். சாவு எப்படி வரும் என அறிந்துகொண்டவனால் நிம்ம தியாக வாழ முடியுமா? அது போலவே எதிர்காலம் எப்படி இருக்கும் என அறிந்துகொண்டுவிட்டால் நிகழ்காலம் நரகமாகிவிடும்.

எதிர்காலத்தைக் கண்டு நம் ஏன் பயப்படுகிறோம்? தனது தவறுகளுக்காக தண்டிக்கப்படுவோம் என்ற குற்ற மனப்பாங்கு பலருடைய மனதிலும் ஒளிந்திருக்கிறது. துணிந்து ஏமாற்று வேலைகளை, மோசடிகளைச் செய்யும் ஒருவன், ‘ஒருவேளை இதற்காகத்தான் எதிர்காலத்தில் தண்டிக்கப்படக்கூடுமோ?’ எனப் பயப்படுகிறான்.

‘சாமானிய மனிதர்கள் தனது கஷ்டங்கள் தீர்ந்து போய் விடாதா?’ என அறிந்து கொள்வதற்காகவே எதிர்காலம் பற்றிக் கவலைப்படுகிறார்கள். ஆனால் வசதி படைத்தவர்களும், அரசியல்வாதிகளும் அதிகாரமும், செல்வச் செழுமையும் தனக்கு கிட்டுமா என அறிந்துகொள்ளவே எதிர்காலத்தைப் பற்றி தெரிந்துகொள்ளத் துடிக்கிறார்கள்.

நகை வணிகம் செய்யும் ஒரு நண்பர் தனது கடையில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார். ‘புதிய ஜிஎஸ்டி வரிவிதிப்பின் காரணமாக, தங்க நகைகளின் விலை இனிமேல் குறைய வாய்ப்பு இல்லை’ என வாடிக்கையாளர் பெண்மணியிடம் சொன்னாராம். உடனே அந்தப் பெண்மணியின் முகம் வாடிப்போக, ‘‘நிஜமாகவே நீங்கள் சொன்னதுபோல விலை குறையாமலே போகட்டுமே, ஆனால் விலை குறையும் என்று ஒரு பொய்யாவது சொல்லுங்களேன். அந்த நம்பிக்கை என்னை ஆறுதல் படுத்தும். நிதர்சனமாக உண்மையைச் சொல்லாதீர்கள். அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை’’ என்றாராம்.

இதுதான் பொதுமக்களின் மனநிலை. அவர்கள் சில உண்மைகளை ஏற்றுக்கொள்ள தயாராகவே இல்லை. ‘பொய்யாக ஒரு நம்பிக்கையைக் கொடுங்கள்’ என்றுதான் கேட்கிறார்கள். எதிர்காலம் பற்றிய பல ஆருடங்கள் இதுபோன்ற பொய் நம்பிக்கையைத்தான் தருகின்றன.

தனது வாழ்வில் மேன்மைகள் வந்துவிடும் என யார் சொன்னாலும் மனிதர்கள் நம்பத் தொடங்கிவிடுகிறார்கள். எப்படி உருவாகும்? அதற்காக தான் எவ்வளவு உழைக்க வேண்டும் என எதைப் பற்றியும் கவலைப் படுவதில்லை. மரத்தில் இருந்து பழம் தானே விழுந்துவிடுவதைப் போல, ஏதாவது நடந்து தனது வாழ்க்கை உயர்ந்துவிடும் என நினைக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அப்படி நடக்காதபோது எதிர்காலக் கணிப்பு தவறானது என நினைப்பதில்லை. இந்தமுறை கணிப்பு தவறிவிட்டது என்று மட்டுமே முடிவு செய்கிறார்கள்.

திபெத் கதை ஒன்று எதிர்காலத்தை அறிந்த மனிதனின் துயரைப் பற்றி பேசுகிறது. ஆறு குழந்தைகளுடன் வறுமையில் வாடிக் கொண்டிருந்த ஒரு விவசாயி இருந்தான். அவனால் குடும்பத்தின் கஷ்டங்களைத் தீர்க்க முடியவில்லை. தனது எதிர்காலம் எப்படியிருக்கும் என அறிந்துகொள்ள மந்திரவாதிகள். ஆருடம் சொல்பவர்கள் எனப் பலரையும் தேடிச் சென்றான். எவரது கணிப்பும் பலிக்கவில்லை.

ஒருநாள் இரவு அவன் வீட்டுக்கு ஒரு துறவி வந்து கதவை தட்டினார். குளிரில் நடந்து வந்த களைப்பு, கடும்பசி. ஏதாவது உணவு கிடைக்குமா எனக் கேட்டார். அவன் தன்னிடம் சமைத்த உணவு எதுவுமில்லை. ஆனால் ஆட்டுபால் தரமுடியும் எனச் சொல்லி கொஞ்சம் பாலை கொண்டுவந்து கொடுத்தான். அதை குடித்துவிட்டு அவர் நன்றியுணர்ச்சியோடு வீட்டில் தங்கிக் கொண்டார்.

இரவில் அந்த விவசாயிக்கும் அவன் மனைவிக்கும் இடையில் சண்டை வந்தது. ‘‘குடும்பத்தின் நிலைமை இப்படியே இருந்தால் மாறவே மாறாது. பிழைப்புத் தேடி வேறு ஊர் போகத்தான் வேண்டும்!’’ என மனைவி அந்த விவசாயியைத் திட்டிக் கொண்டிருந்தாள். விவசாயி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அந்தச் சண்டை இரவெல்லாம் நீடித்தது.

விடிகாலையில் துறவி அந்த விவசாயியை அழைத்துச் சொன்னார். ‘‘உன் பிரச்சினையை அறிந்துகொண்டேன். இந்த மந்திரப் பொடியைத் தண்ணீரில் போடு. அது உன் எதிர்காலத்தை காட்டும். ஆனால், நீ அறிந்துகொண்ட உனது எதிர்காலத்தைப் பற்றி எவரிடமாவது வாய்திறந்து சொன்னால், மறு நிமிடமே நீ இறந்துவிடுவாய்..’’ என்றார்.

விவசாயி அதை ஏற்றுக்கொண்டு அந்த மந்திரப் பொடியைக் கொண்டு போய் தண்ணீரில் போட்டான். மறு நிமிடம் எதிர்கால காட்சிகள் கண்முன்னே அவனுக்குத் தெரிய ஆரம்பித்தன. திருவிழாவுக்குச் சென்ற அவன் மனைவி, வழியில் பாம்பு கடித்து செத்துப்போகிறாள். மூத்தமகன் ஒருவனோடு சண்டையிட்டு சிறைக்குப் போகிறான். மகள் பிரவசத்தில் இறந்து போகிறாள். கடனை அடைக்க முடியாததால் அவர்களுடைய சொந்த நிலம் பறிபோகிறது. பிச்சைக்காரனைப் போல தாடி, மீசை வளர்ந்து அந்த விவசாயி தெருவில் யாசகம் கேட்கிறான்.

தனது எதிர்கால நிலைமையைப் பார்த்தமாத்திரத்தில் அந்த விவசாயியின் உடம்பு நடுங்கிப் போய்விடுகிறது. ‘இதுதானா நம் என் எதிர்கால வாழ்க்கை? என் மனைவியை நான் எப்படி காப்பாற்றுவேன்? மகனை எப்படி தடுப்பேன்? நிலத்தை எப்படி பாதுகாப்பேன்…’ எனப் புரியாமல் புலம்பினான். தான் கண்ட எதிர்காலத்தைப் பற்றி மனைவியிடம் சொல்ல முடியவில்லை. ‘எதிர்காலத்தைப் பற்றி ஏன் நாம் தெரிந்துகொண்டோமோ?’ என நினைத்து நினைத்து அழுதான். அவன் மனைவிக்கு எதுவும் புரியவில்லை.

நடக்கப் போவதைத் தன்னால் தடுக்க முடியாதபோது, எதற்காக அதை அறிந்து கொண்டோம் எனப் புலம்பினான். அழுதான். அவனால் சாப்பிடவும் உறங்கவும் முடியவில்லை.

சில நாட்களுக்குப் பிறகு அதே துறவி அவர்கள்

வீட்டுக்கு வந்தார். அவரிடம் தனது துயரை சொல்லிப் புலம்பினான்.

அவர் சொன்னார்: ‘‘நீ கண்டது உண்மையில்லை. வெறும் பொய்தோற்றம். உண்மையாக என்ன நடக்கும் என யாராலும் சொல்ல முடியாது. எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் நிகழ்காலத்தில் உன்னால் முடிந்த நல்லதை பிறருக்குச் செய். நல்லதை நினை. நல்லவனாக நடந்துகொள். இந்த மூன்றையும் செய்தால் எதிர்காலம் நிச்சயம் சிறப்பாகவே இருக்கும். அதன் பிறகு அந்த விவசாயி எதிர்காலத்தைப் பற்றி கவலையேபடவில்லை என அந்தக் கதை முடிகிறது.

துறவி சொன்ன விதிகள் திபெத்திய விவசாயிக்கு மட்டுமில்லை; நம் எல்லோருக்கும் பொருந்தக்கூடியதே. நீங்கள் பிறரை நேசிப்பவராக, நன்மைகள் செய்பவராக, அன்பு செலுத்துபவராக இருந்தால் நிச்சயம் உங்கள் எதிர்காலம் நல்லதாகவே அமையும். நிகழ்காலத்தின் விதைகள்தானே எதிர்காலத்தின் விருட்சங்களாக மாறுகின்றன!

- கதைகள் பேசும்…

எண்ணங்களைப் பகிர: writerramki@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x