

சாதனைச் செம்மல் ச.வே.சு – கமலவேலன்
விலை: ரூ.75/-
மணிவாசகர் பதிப்பகம், சென்னை-600108
பேசி: 044-25361039
'தமிழ்நூல் பதிப்புக்கு உ.வே.சா., தேசியத்திற்கு வ.உ.சி., தமிழ் தேசியத்திற்கு ம.பொ.சி., ரசனைக்கு டி.கே.சி., திறனாய்வுக்கு வ.வே.சு., ஆராய்ச்சிக்கு ச.வே.சு' என திறனாய்வாளர்களால் பாராட்டப்பெற்ற மூத்த தமிழறிஞர் ச.வே.சுப்பிரமணியனின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல். உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநராக இருந்து ஏராளமான மொழியாராய்ச்சிக்கு வித்திட்ட ச.வே.சு. அவர்களோடு 15 ஆண்டுகாலம் நெருங்கிப் பழகிய நூலாசிரியர், சிறுதகவலும் விடுபடாத வண்ணம் அனைத்தையும் தொகுத்து தந்துள்ளார். இன்னும் கொஞ்சம் நல்ல தாளில் பதிப்பித்திருக்கலாம்.
ஊடகம் - அறமும்… அரசியலும்… – பைந்தமிழ்
விலை: ரூ.120/-
புதிய அரசியல் பதிப்பகம், சென்னை-600034
பேசி: 044-23721594
சமூகத்திற்கு வழி காட்டும் ஒளிவிளக்குகள் ஊடகங்கள் என்றால் மிகையில்லை. ஜனநாயகத்தின் நான்காவது தூணெனப் போற்றப்படும் ஊடகங்களின் செயல்பாடுகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளன. அறிவியல் தொழில்நுட்பம் அசூர வளர்ச்சியை அடைந்துள்ள இன்றைய சூழலில் ஊடகங்களின் அறம், அரசியல் சார்ந்த செயல்களை 14 தலைப்புகளின் கீழ் எழுதியுள்ளார் பைந்தமிழ். ஊடகங்களின் நடுநிலை, தொலைக்காட்சி விவாதங்கள் ஆகிய தலைப்பிலான கட்டுரைகள் இன்னும் ஆழ்ந்து விவாதிக்க வேண்டியவை.
திருவாங்கூர் தமிழர் உரிமைப் போராட்டம் – டி.டேனியல்
தமிழில்: க.விசயகுமார்
விலை:ரூ.210/-
தமிழோசை பதிப்பகம், கோவை-641006
செல்: 9788459063
1938 முதல் 1956 காலகட்டத்தில் திருவாங்கூர் தமிழர்கள் தங்களது தனி அடையாளத்துக்காக ஒன்றுதிரண்டு போராடிய வரலாற்றை நூலாக ஆவணப்படுத்தியுள்ளார் பேராசிரியர் டி.டேனியல். இருபதாம் நூற்றாண்டில் தமிழின மீட்சிக்காக நடைபெற்ற முதல் இன அடையாள எழுச்சிப் போராட்டமாக அறியப்படும் திருவாங்கூர் தமிழர் உரிமை போராட்டத்தின் முழு நிகழ்வுகளும் 6 அத்தியாயங்களாக தரப்பட்டுள்ளன. மொழி, பண்பாட்டின் அடிப்படையில் தமிழர்கள் திரண்டெழுந்த முதல் போராட்டம் எனும் வகையில் முக்கியத்துவம் பெறும் நூலிது.
ஓவிய ஃபிரேமிலிருந்து வெளியேறும் பறவைகள்
அமிர்தம் சூர்யா
விலை: ரூ.100/-
மேகா பதிப்பகம், மதுரை-625012
செல்: 7010199425
அமிர்தம் சூர்யா ஃபேஸ்புக்கில் எழுதிய காதல் கவிதைககளின் தொகுப்பு. உரத்துப் பேசும் தொனியிலான கவிதைகளைத் தொடர்ந்து படைத்துவரும் கவிஞரின் உள்ளத்து உணர்வுகள் காதல் கவிதைகளாக மலர்ந்துள்ளன. அன்பின் போதாமையை, பிரிதலின் உள் வலியை, ஊடல் தருணங்களை என ஒவ்வொன்றையும் தனது கவிதை சட்டகத்திற்குள் கொண்டுவந்துள்ளார். ‘மேகம் என்பது மிதக்கும் நீர் / கடல் என்பது திரவமேகம்’ எனும் வரிகளில் வசீகரிக்கிறார்.
தொகுப்பு: முருகு