Published : 19 Aug 2017 09:44 AM
Last Updated : 19 Aug 2017 09:44 AM

ஒற்றை வண்ணத்தின் தேசமா?

ன்றைய இந்திய அரசியல், சமூக, பொருளாதார நிலைமைக்கு நேரான உரைகல்போல் வந்திருக்கின்றது இந்த நாவல். வங்க மொழியின் ‘நீலகண்டப் பறவையைத் தேடி’ நாவலின் அசாமிய நீட்சிபோல! அசாமின் இந்திய சுதந்திரப் போராட்டக் காலம் எதிர்கொள்ளப்பட்டதை விவரித்துவிட்டு, அப்படியே விடுதலைக்குப் பிந்தைய காலத்துக்கும் நகர்ந்துவருகிறது. இந்து, முஸ்லிம் இணைந்த வாழ்க்கையின் வண்ண இழைகள் இவை.

சோனா ரூச்சுக் கிராமத்தின் சில மைல் தூரத்தில் புதிதாக அமைகிறது குரயீகுடி கிராமம். ஒரு கப்பல், தன் பயணத்தைத் தொடர முடியாமல் மணல்மேட்டில் சிக்கிக்கொள்கிறது. அதில் தொழிலாளியாகப் பயணிக்கிற மன்சூர் அலி, குரயீ நதிக்கு அப்பால் பசுமை போர்த்திய தீவுபோலக் கிடக்கும் விரிந்த பகுதியைத் தற்செயலாகப் பார்த்துவிடுகிறார். கப்பலிலிருந்து நதியில் குதித்து நீந்தி சேறும் தாவரங்களுமாய்க் கிடக்கும் பகுதியைக் கடந்து போய்க்கொண்டே இருக்கிறார். ஆளற்ற, இயற்கையின் வளம் செறிந்துகிடக்கிற அந்தப் பகுதியில் ஒரே ஒரு நேபாளிதான் இருக்கிறார். அவரோடு தப்பும் தவறுமாக உரையாடி நிலத்தின் உண்மைத்தன்மையை அறிந்து திரும்பும் மன்சூர் அலி, பின்னர் மீண்டுமொருமுறை காதிர்கான் என்பவரோடும் அதே நிலப் பகுதியைப் பார்வையிட வருகிறார். இதுதான் தங்களுக்கான வாழ்க்கை நிலம் என்பது மனத்தில் பதிய, தன் மனைவி, மகளுடன் அங்கு வருகிறார் மன்சூர் அலி. சில நாட்கள் கழித்து காதிர்கானும் அவரது குடும்பமும் வருகிறது. பின்னர், அப்பகுதி முஸ்லிம்களால் நிறைகிறது. அவர்கள் இரவு பகல் பாராமல், தம் சுக துக்கங்களை லட்சியம் செய்யாமல் அந்த நிலத்தைப் பண்படுத்தி உழுது, பசுமையான நிலமாக உருவாக்குகிறார்கள்.

சோனா ரூச்சுக் கிராமத்தின் ஹலதர்க்கும் அந்தக்கிராமத்தின் தலைவன் கிர்கீக்குக்கும் இடையில் நிலப் பிரச்சினை எழுகிறது ஹலதரின் நிலத்தை வல்லடியாகப் பறித்துத் தனக்குரியதாக ஆக்கும் கிர்கீயின் செயல்பாடுகள் ஹலதரைக் கண்காணாமல் ஓடச் செய்கிறது. இதனால் நிர்க்கதியாய் விடப்படும் மகன் கஜேன், கிர்கீயை எதிர்கொள்பவனாக மாறுகிறான். கஜேனின் காலடித் தடங்களைத் தொடர்ந்தே நாவல் பயணிக்கிறது. ஏராளமான கதாபாத்திரங்களின் மத்தியில் அப்பாவியாகவும் அதே சமயம் நியாயத்துக்காகப் போராடும் மனிதாபிமானியாகவும் கஜேன் இருப்பதால் அவனே நாவலின் இயக்கம்.

ஆச்சாரங்களில் ஊறிய பாபுதேவ் அர்ச்சகர், சுரண்டலாளர்கள், தீண்டாமை அனுசரிக்கிற தர்மானந்த வைத்தியர், முஸ்லிம்கள் என நான்குபுறமும் பழைமை இந்தியா நகர முடியாமல் தத்தளிக்கிறது. எல்லாமும் உடைபட வேண்டும் என்பது படைப்பாளியின் கனவு.

உண்மையில், ஜவாவின் மூலம் நாவல் பெரிய பாய்ச்சலை நிகழ்த்துகிறது. பழைமையின் மீது அமில வீச்சுபோன்றது அது. கணவனை இழந்த பின் அங்கு வந்த ஜவா, மதனைத் தான் திருமணம் செய்துகொள்ள வாய்ப்பில்லை என்றுதான் கருதுகிறாள். ஆனாலும், அவனைத் தன் சொந்த வீட்டுக்கு வரவழைக்கிறாள்; உறவுகொள்கிறாள். தன் சமூகத்தில் கணவனை இழந்த பெண்களின் திருமணம் சாத்தியமற்றது என்று தெரிந்தே மதனோடு உறவு கொண்டாடும் ஜவாவின் ஆசை என்பது அவன் நினைவோடு அவள் இனி வாழ வேண்டும் என்பதாகவே இருக்கிறது.

இந்த நாவலின் ஒரு கூறுதான் இது. மறு கூறு, இந்து - முஸ்லிம் சமூக உறவுக்கான நியாயத்தைப் பேசுகிறது. பாகிஸ்தான் பிரிந்து இந்தியா விடுதலையானபோது நாடெங்கும் பற்றியெரிந்த வகுப்புவாத நெருப்பு இங்கும் எரிய வேண்டும் என்கிறான் யாதவ் பௌரா. இதற்குப் பின் நாவலின் நகர்வு அந்தக் காலத்திலேயே இன்றைய இந்தியாவைக் கண்டுபிடித்துவிடுகிறது. உண்மையில், இந்த நாடு எவ்வளவு சுபிட்சங்களைப் பெற்றிருந்தாலும் சுபிட்சமற்றதாகத்தான் இருக்குமா? இந்தக் கேள்விக்கான பதிலையே அது தன் அடுத்த கட்டத்தில் தேடுகிறது. ஒவ்வொருவரின் மனச்சாட்சியையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி விசாரணை செய்வதே இந்த நாவல் இந்தியாவை எதிர்கொள்ளும் விதம்.

எத்தனை எத்தனை கதாபாத்திரங்கள். அடுத்தடுத்த கிராமங்களின் இந்த ஆளுமைகள் அசலான அசாமியர்களல்ல, அவர்களில் நேபாளிகள், பிஹாரிகள், அயலூரார்கள், உடல் உழைப்பாளர்கள், வெள்ளந்திகள், உறவுக்காக உயிரைக் கொடுக்க முனைகிற மனிதர்கள். சுற்றிச் சூழவும் நதிகள், வற்றாத வெள்ளம், மனுஷக் கையும் காலும் பட்டவுடனே தம்மைப் பொன் விளையும் பூமியாக மாற்றிக்கொண்ட சதுப்புநிலப் பகுதிகள் என இத்தனை இத்தனை இருந்திருக்கும்போது, அதெல்லாம் ஆசீர்வாதத்தின் வண்ணங்களாகத்தானே இருக்க வேண்டும்? ஏன் ஆசீர்வாதத்தின் வண்ணம் என்று ஒற்றைப்படையாகி நிற்கிறது?

அருண் சர்மாவின் அசாமிய நாவலை இந்தி வழியாகத் தமிழாக்கித் தந்திருக்கிறார் எம்.சுசீலா. இன்று நம் இதயங்களின் துடிதுடிப்பு என்னவாக இருக்கிறதோ அது இந்தநாவலின் பக்கங்கள்தோறும் நம் மனத்தோடு இயைந்தபடியே வருவதால், நாவல் சரியாகத்தான் நம்மை அடைந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தருகிறது.

- களந்தை பீர்முகம்மது, ‘பிறைக் கூத்து’

முதலான நூல்களின் ஆசிரியர்,

தொடர்புக்கு: kalanthaipeermohamed@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x