

ஒவ்வொரு கவிஞரும் ஒரு தனி உலகத்தில் வாழ்கிறார். அந்த உலகத்தைப் புரிந்துகொள்வதன் மூலமே கவிஞர்களை, அவர்களின் கவிதைகளை உணர்ந்துகொள்ள முடியும். அப்படியொரு கவிஞரின் உலகைப் புரிய வைக்கும் முயற்சியே ‘டார்க் ஹார்ஸ்’ நாடகம்.
‘ஜஸ்ட்அஸ் ரெப்பர்டரி’ நாடகக் குழு தொடங்கிப் பத்தாண்டுகள் நிறைவைக் கொண்டாடும் விதமாக, ‘ஜஸ்ட் ஃபெஸ்ட் - 2017’ நாடக விழா நடைபெற்றது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ‘அலையன்ஸ் ஃப்ரான்சைஸ் ஆஃப் மெட்ராஸ்’ கலையரங்கத்தில் இந்த நாடக விழா கடந்த வாரம் நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாகத் தமிழ் நாடக ஆசிரியர்கள் நா. முத்துசாமி, இந்திரா பார்த்தசாரதி இருவரையும் சிறப்பிக்கும் விதமாக அவர்களின் கேலிச்சித்திரங்கள் வெளியிடப்பட்டன.
இந்த விழாவில் மேடையேற்றப்பட்ட ‘டார்க் ஹார்ஸ்’ என்ற நாடகம், மராத்தியக் கவிஞர் அருண் கோலட்கருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கௌரி ராம்நாராயண் எழுதியது. கவிஞர் அருண் கோலட்கர் இறந்த செய்தியைக் கேட்டு, அவரது நினைவுகளில் மூழ்கும் ஒரு தமிழ்ப் பத்திரிகையாளரின் பார்வையிலிருந்து நாடகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அருண் கோலட்கரின் கவிதைகள் இந்த நாடகத்தில் பாடல்களாக இடம்பெற்றிருந்தன. இந்த நாடகத்தின் சிறப்பம்சம் கவிதைப் பாடல்களும், அவற்றுக்கான நடனங்களும்தான். கோலட்கராக நடித்திருந்த யோஹன் சக்கோ, பத்திரிகையாளராக நடித்திருந்த அகிலா ராமநாராயண் இருவரும் கவிதை உலகவாசிகளின் உணர்வுகளை மேடையில் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார்கள். சார்லஸின் ஒளியமைப்பு நாடகத்தைக் கவித்துவமான அனுபவமாக மாற்ற உதவியது. அருண் கோலட்கர் என்ற கவிஞரின் விசித்திரமான கவிதை உலகத்தின் மீது இந்த நாடகம் புது வெளிச்சத்தைப் பாய்ச்சியது.
- என். கௌரி
படம்: விஷ்வஜித் சந்திரசேகர்