

வரலாற்றை மீள் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளரான ரொமிலா தாப்பர், லண்டனிலுள்ள அருங்காட்சியகத்தில் குழந்தைகளிடையே ஆற்றிய உரைகளிலிருந்த கதைகளின் தொகுப்பாக்கம் இந்நூல். சிறுவர்களும் படிக்கும் வகையில் இலகுவான மொழியில் தமிழாக்கம் செய்துள்ளார் டாக்டர் வெ.ஜீவானந்தம். இந்தியப் புராண, பழங்குடி, சரித்திர, மந்திரக் கதைகளின் வழியே இந்திய சமூகத்தின் தொன்மங்களை கதை வழியாக அறிமுகம் செய்துள்ளார்.
கதை சொல்லும் மிகத் தொன்மையான நெடிய மரபைக் கொண்டது நம் இந்திய சமூகம். அந்த சமூகத்தின் பிரதிகளாக, பன்னெடுங்காலத்திற்கு முன்வாழ்ந்த நம் மூதாதையர்களின் கற்பனையில் உருவான கதைகளில் வலம்வரும் மிருகங்களின் செயல்கள் கூட வாழ்வின் அறங்களையே போதிக்கின்றன. விக்ரமாதித்தன், பீர்பால், நளன் – தமயந்தி என பல சுவையான கதைகளை மறுவாசிப்பு செய்கையில், நம் வீட்டுத் திண்ணைகள் தாத்தா, பாட்டிகளின் கதைகளால் நிரம்பிய காலமொன்று இருந்ததே என்கிற ஏக்கம் எழத்தான் செய்கிறது.