Published : 01 Jul 2017 09:51 AM
Last Updated : 01 Jul 2017 09:51 AM

வரலாற்றைப் பேசும் கல்வெட்டுப் பாடல்கள்

தமிழ்ச் சமூக வரலாற்றையும் அரசியல் வரலாற்றையும் எழுதுவதற்குத் தமிழ்க் கல்வெட்டுகள் புதிய ஒளியைப் பாய்ச்சின. தமிழ்க் கல்வெட்டுகள் பெரும்பாலானவை கோயில் சுற்றுச்சுவர்களிலும் கருவறைச் சுவர்களிலும் மண்டபச் சுவர்களிலும் வாயில்களிலும் தூண்களிலும் கதவுகளிலும் படிகளிலும்கூட பொறித்து வைக்கப்பட்டுள்ளன. கல்வெட்டுகள் உரைநடை வடிவில் மட்டுமல்லாமல் பாடல் வடிவிலும் காணப்படுகின்றன. இப்பாடல் வடிவம் உரைநடை இடையிலும் இறுதியிலும்கூட பொறிக்கப்பட்டுள்ளன.

கி.பி. 7-ம் நூற்றாண்டு முதல் பாடல் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. இவை தமிழ்நாட்டில் மட்டுமின்றி புதுச்சேரி, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற பகுதிகளிலும் இலங்கையிலும் கிடைக்கின்றன. கல்வெட்டுகளில் காணப்படும் பாடல்களைத் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்களில் ஆராய்ச்சிப் பேரறிஞர் மு. இராகவையங்கார், மயிலை. சீனி. வேங்கடசாமி, டி.ஏ. கோபிநாதராவ், கலாநிதி ஆ. வேலுப்பிள்ளை போன்றோர் குறிப்பிடத் தக்கவர்கள்.

கல்வெட்டுப் பயிற்சியும் தமிழ் யாப்பியல் அறிவும் நிறைந்த பேராசிரியர் செ. இராசு தொகுத்துள்ள தமிழ்க் கல்வெட்டுப் பாடல்கள் என்னும் இந்நூலில் முந்தைய அறிஞர்கள் தொகுத்துள்ள பாடல்கள், கல்வெட்டுத் துறையினர் வெளியிட்டுள்ள தொகுதிகளில் அவர்கள் பார்வையில் படாத சில பாடல்கள், வெளியிடப்படாத கல்வெட்டு மைப்படிகளில் உள்ள பல பாடல்கள் ஆகியவை முறையாகத் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

கல்வெட்டுப் பாடல்கள் மாவட்ட வாரியாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அரசர்கள் வாரியாக விளக்கப்பட்டுள்ளன. சோழர் குறித்து 16 மாவட்டங்களில் கல்வெட்டுப் பாடல்கள் கிடைத்துள்ளன. பாண்டியர் குறைவு, சேரர் மிகச் சிலவே, மேலும் பல்லவர், முத்தரையர், விஜயநாயகர், மாராத்தியர், கங்கர், சேதுபதி, அதியமான் மரபினர், வாணர், சம்புராயர், மலையமான் மரபு, தொண்டைமான், பாளையக்காரர்கள், தமிழ்ப் புலவர்கள் ஆகியோர் குறித்துக் கல்வெட்டுப் பாடல்கள் பதிவுசெய்துள்ளன.

கல்வெட்டுப் பாடல்களில் ஆசிரியர் பெயர்களும், சில இடங்களில் பொறிக்கப்பட்டுள்ளன. கி.பி. 7, 8-ம் நூற்றாண்டுக்குரிய பெரும் பிடுகு முத்தரையரையும், அவன் வழித் தோன்றலையும் பாடிய பாச்சிவேள் நம்பன், கோட்டாற்றிளம் பெருமகனார், குவாவங் காஞ்சன், அநிருத்தர் என்போர் பெயர்கள் சுட்டத்தக்கவை. இறைவனைப் போற்றிப் பல பாடல்கள் காணப்படுகின்றன.

இலக்கிய நயத்துடனும், நகைச் சுவையுணர்வுடனும் திகழும் இப்பாடல்கள் தமிழ் இலக்கிய வரலாற்றில் இடம்பெற வேண்டிய தேவையை உணர்த்துகிறது.

-கல்பனா சேக்கிழார்,

விரிவுரையாளர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.

தொடர்புக்கு: kalpanasekkizhar@gmail.com





மன்னும் கிணறு

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் வட்டம், வெள்ளூர் கண்மாய்க் கரையில் கிடக்கும் கல். இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் ( கி.பி. 1249) கருநிலக்குடி நாடு கிழவன் சாத்தன் கொற்றன் பஞ்ச காலத்தில் கால்நடைகள் குடிக்க ஆமன்னும் கிணறு முறை என்ற பெயரில் கிணறு எற்படுத்திய விவரம் கூறப்படுகிறது. முனைகலக்கி என்ற படைவீரர்கள் பெயரால் கிணறு அமைக்கப்பட்டுள்ளது.

பூமன்னும் புகட்சகரம் ஓராயிரத் தொருநூற் றெழுபத் தொன்றில்

பூழியன் சுந்தரபாண்டிய தேவர்க்கி யாண்டு பத்தோ டொன்றில்

காமன்னும் பொழில்புடைசூழ் கருநிலக்குடி நாட்டு வெள்ளூர் வாழும்

கற்பஞ்சாத்தன் சேய் கொற்றன் கருநிலக் குடிநாடு கிழவன்

தேமன்னும் மொழிவீரர் திகழும் செங்குடிநாடு சிறந்த மன்னர்

சீராரும் முனைகலக்கிகள் பேரால் சிறந்தூழி வாழ

ஆமன்னும் கிணறுகற்கால் படிபக்கல் மீகால்

அடைவுபடச் செய்வித்து அவனியின் மேல் நிலைநிற்க அருளினானேய்.

குரங்கு கைப் பூமாலை

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், மடவாளகம் பச்சோட்டு ஆவுடையார் கோயில் கருவறை வடப்புறச் சுவரில் உள்ள பாடல் கல்வெட்டு இது. உத்தம சோழக் காமிண்டன் பழையகோட்டைப் பட்டக்காரின் பெயர். அவர்பால் காதல் கொண்ட ஒரு பெண் கூற்றாக இப்பாடல் அமைந்துள்ளது.

சரங்கொண்டு இலங்கை சமைத்த பெற் றான்தரி

யார் இறைஞ்ச

உரங்கொண்ட காரைமான் உத்தம சோழன்

உபயபுயம்

இரங்கும் படிஅரு ளான்மட வீர்இனி

என்னுயிரை

குரங்கின்கை யிற்பட்ட பூமாலை ஆக்கும்

குளிர்தென்றலே

உத்தம சோழன் எனக்கு அருள் செய்யவில்லை; அதனால் தென்றல் காற்று என்னைக் குரங்கின் கைப்பட்ட பூமாலை போல ஆக்கும் என்று தலைவி வருந்திக் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x