

தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் சென்னை பல்கலைக்கழகமும் அதையடுத்து தொடங்கப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் மிகச் சிறந்த பதிப்புத் துறைகளைக் கொண்டிருந்தன. சென்னைப் பல்கலைக்கழகம், வரலாறு, பொருளாதாரம், அகராதி உள்ளிட்ட பல துறைகளில் முக்கியமான பங்களிப்புகளைச் செய்திருக்கிறது. வரலாறு, தத்துவம், இசைத் துறைகளில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பதிப்பித்த நூல்கள் மிகச் சிறந்தவையாக ஆய்வாளர்களால் மதிப்பிடப்படுகின்றன. மேற்கண்ட இரு பல்கலைக்கழகங்களின் பதிப்புத் துறைகளே முன்பிருந்த அளவுக்கு நூல்கள் தேர்விலும் வெளியீட்டிலும் முனைப்புக் காட்டவில்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பதிப்புத் துறை போன்றவற்றிலும் முக்கியமான வெளியீடுகள் வெளிவந்திருக்கின்றன என்றபோதும், அவற்றின் பரப்பு தமிழியல் என்ற வட்டத்துக்குள் மட்டும்தான். பாரதிதாசன் பல்கலைக்கழகம் சுற்றுச்சூழலியல் உள்ளிட்ட துறைகளில் சில தரமான பாடநூல்களை வெளியிட்டிருக்கிறது. சட்டப் பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்ட பாடநூல்கள் ஆசிரியர்களுக்கு உரிய கால அவகாசம் கொடுக்காமல் அவசர அவசரமாக எழுதி வெளியிடப்பட்டவை. மற்றபடி சமீப ஆண்டுகளில், கல்வி நிறுவனங்கள் சார்ந்த பதிப்பு முயற்சிகளில் ஆய்வு முக்கியத்துவம் கொண்டவை என்று பார்த்தால் ஒருசிலவே தட்டுப்படுகின்றன. அந்த வகையில் பாளையங்கோட்டை தூய சவேரியர் கல்லூரியின் நாட்டுப்புறவியல், அயோத்திதாசர் சிந்தனைகள், பண்பாட்டு மானுடவியல் சார்ந்த நூல்களைக் குறிப்பிடலாம். ஒருசில விதிவிலக்குகளைத் தவிர்த்து தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் பதிப்புத் துறை செயல்படும் விதம் பரிதாபத்துக்குரிய நிலையிலேயே உள்ளது.
பெரும்பாலான பேராசிரியர்கள், தாங்கள் சார்ந்திருக்கும் துறைகளில் ஆய்வுகள் மேற்கொள்வதில் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. கல்விப்புலத்துக்கு வெளியில் இருப்பவர்களே ஆய்வு நூல்களை எழுதுவதிலும் மொழிபெயர்ப்பதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள். பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், தங்களின் நீள்துயிலி லிருந்து விடுபட்டு, ஆய்வுகளில் ஆர்வம் காட்ட வேண்டும். அதற்கான வாய்ப்புகளைப் பல்கலைக்கழகங்கள் உருவாக்க வேண்டும். நினைவுக்கட்டளைச் சொற் பொழிவுகளின் தரமதிப்புகளை உயர்த்த வேண்டும். அவற்றையும் நூல்வடிவம் பெறச் செய்ய வேண்டும். பேராசிரியர்களும் ஆய்வு மாணவர்களும் பங்குபெறும் ஆய்விதழ்களையும் பல்கலைக்கழகங்கள் வெளியிட வேண்டும். வருங்காலங்களில் மாணவர்களை மிகச் சிறந்த ஆய்வாளர்களாக வளர்த்தெடுக்கவும் ஆய்வு விவாதங்களை உருவாக்கவும் இந்த ஆய்விதழ்கள் முக்கியப் பங்காற்றக்கூடியவை. இப்படி பதிப்புத் துறையோடு தொடர்புடைய பல்வேறு பணிகள் கண்டுகொள்ளப்படாமலேயே கிடக்கின்றன. தமிழில் பல முன்னோடி பதிப்பு முயற்சிகளைச் செய்த ‘தமிழ்நாடு பாடநூல் நிறுவனம்’ பள்ளிக்கூடங்களுக்குப் பாடப் புத்தகங்களை அச்சிட்டுக் கொடுக்கும் அமைப்பாக சுருங்கிக் கிடந்தது. மீண்டும் அது உயிர்பெற்றிருக்கிறது. அதைப் போல பல்கலைக்கழகங்களின் பதிப்புத் துறைகளும் புத்துயிர் பெற வேண்டியது காலத்தின் கட்டாயம்.