சற்றே திறந்த கதவு: எமிலி டிக்கின்ஸனின் நினைவில்லத்தில்…

சற்றே திறந்த கதவு: எமிலி டிக்கின்ஸனின் நினைவில்லத்தில்…
Updated on
1 min read

மெரிக்காவின் மாஸசூஸட்ஸ் மாகாணம் ஆம்ஹர்ஸ்ட் நகரில் எமிலி டிக்கின்ஸனின் நினைவில்லத்தில் மாலைக் குளிரில் உறைந்து நிற்கிறான். அவனை உறைய வைத்தது குளிர் மட்டும் இல்லை. கவிதையைப் பிரசுரம் செய்வதையே மனித மனத்தை ஏலம் விடுவதற்குச் சமமானது என்று எண்ணியவளின் வீட்டின் கீழ்ப் பகுதியில் நினைவுப் பொருள் விற்பனை அங்காடி. எமிலி டீ-ஷர்ட்டை ஒதுக்கியபடி வீட்டுக்குள் அடி எடுத்து வைக்கிறான்.

வீட்டுக்குள்ளான சிறிய பயணத்தை நடத்திக் கொடுக்கும் பெண்மணி, உங்களுக்குப் பிடித்த எமிலி கவிதை ஒன்றைச் சொல்லுங்கள் என்கிறார்.

‘தன்னுடைய சமூகத்தைத் தானே தேர்ந்தெடுக்கிறது ஆன்மா, பிறகு அடைத்துவிடுகிறது கதவை’ என்ற கவிதையை மெள்ளச் சொல்கிறான்.

சிரித்துக்கொண்டே அந்தப் பெண்மணி, ‘ஆம், கதவை அடைத்துக்கொண்டவள்தான் அவள்’ என்று சொல்லியவாறு, கண்ணுக்குப் புலப்படாத கதவை அடைக்கிறார் சைகையால்.

‘நான் யாரும் இல்லை; நீ யார்’ என்ற எமிலியின் கவிதையைப் படித்துக்கொண்டே மேலே அழைத்துச் செல்கிறார்.

எமிலியின் வாசிப்பு அறை, எழுத்து அறை, படுக்கை அறை – மூன்றும் ஒன்றே ஆன அறை.

அவளது கச்சித வடிவக் கவிதையே போன்ற எழுது மேசை, நாற்காலி.

ஆயிரத்து எழுநூறுக்கும் மேற்பட்ட, தனிமைக்குள் அடைபட்ட கவிதைகள் இறகுகளாய் அறையில் மிதக்கின்றன அந்தக் கணத்தில்.

மாலைக் கிரணங்களின் துயர ஒளி.

எமிலியில் ஆழ்வார்களின் உடன் இருப்பை உணரும் நித்திய கணம்.

சிறிய பயணத்தை முடித்து விடைபெறுகிறார் வழிகாட்டி.

அசைக்கும் கையில் எமிலியின் தேர்ந்தெடுத்த கவிதைத் தொகுப்பு.

வீட்டுக்கு வெளியே, பிறர் பார்வைக்கு இல்லாத அவளுடைய கவிதையே போன்ற எமிலியின் தோட்டம் விரிந்து செல்கிறது.

இலக்கமிட்ட புள்ளிகளில் அவளுடைய கவிதை வரிகளை வாசிக்கும், விமர்சிக்கும் குரல் தாங்கிய அலைபேசிகள்.

சிலைகளின் ரகசிய உரையாடலை எமிலியுடன் கேட்டவாறு தோட்டத்தில் நடந்துகொண்டே இருக்கிறான் முடிவற்ற பயணமாய்.

பசுமை மேவிப் பரவுகிற புல்வெளிகளில் மெல்லப் புரள்கிறது ஆகா ஷாஹீத் அலியின் கஜல்.

சற்றுத் தள்ளிக் கல்லறைத் தோட்டம்.

எமிலியின் கடைசிக் கடித வாசகம் தாங்கிய கல் தூண்.

‘திரும்பி அழைக்கப்பட்டேன்’

சூழ்ந்து வருகிறது அந்தி இருள் குளிர்.

- ந. ஜயபாஸ்கரன், கவிஞர், ‘சிறுவெளி வியாபாரியின் ஒருவழிப்பயணம்’ முதலான கவிதைத் தொகுப்புகளின் ஆசிரியர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in