

மதுக்கடைகளை மூடுவதற்கான பெண்களின் எழுச்சிமிகு போராட்டம் நாள்தோறும் தமிழகத்தின் எங்காவது ஒரு மூலையில் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது. மதுக்கடைகள் தொடங்கிய போதே, மதுவுக்கு எதிரான போராட்டங்களும் தொடங்கிவிட்டன. இந்த மதுவிலக்குப் போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு, அந்தப் போராட்டக் களத்திலேயே தன்னுயிரையும் நீத்தவர் மது ஒழிப்புப் போராளி அய்யா சசிபெருமாள். அவர் ஒரு காந்தியவாதி, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதைத் தவிர பலரும் அவரைப் பற்றி பெரிதாக அறிந்ததில்லை.
மதுவால் விளையும் தீமைகளைச் சொல்லி, மதுவுக்கு எதிரான பல்வேறு போராட்டங்களைத் தன் வாழ்நாள் பணியெனத் தொடர்ந்து ஆற்றிவந்த அய்யா சசிபெருமாளின் வாழ்க்கை வரலாற்றை மிக விரிவாக எழுதியுள்ளார் யா. அருள்தாஸ். சசிபெருமாளின் தலைமையில் மதுவிலக்குக் கோரி 2014-ல் கன்னியாகுமரி முதல் சென்னை வரை 100 நாட்கள் நடைபெற்ற நடைப்பயணத்தை ஒருங்கிணைப்பு செய்தவர், மது ஒழிப்புக்கான பல விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மேற்கொண்டவர், சசிபெருமாளின் நெருங்கிய நண்பரென அறியப்பட்ட அருள்தாஸ், பல்வேறு வரலாற்றுத் தரவுகளைத் தொகுத்து இந்நூலை எழுதியுள்ளார்.
‘யார் இந்த சசிபெருமாள்?’ எனும் கேள்வியோடு தொடங்கும் இந்நூல், 21 தலைப்புகளின் கீழ் சசிபெருமாளின் போராட்ட வாழ்வை ரத்தமும் சதையுமாக நம் கண்முன்னே காட்டுவதாய் உள்ளது. நேர்த்தியான வடிவமைப்பும் பொருத்தமான புகைப்படங்களும் நூலுக்குக் கூடுதல் அழகு.
- மு.முருகேஷ்