

சில புத்தகங்களின் தலைப்புகளே நம்மை வாங்கத் தூண்டிவிடும். அப்படித்தான் அண்ணா சாலையில் சாந்தி தியேட்டர் எதிரில் உள்ள பழைய புத்தகக் கடையில் மோனிஷா ராஜேஷ் எழுதிய ‘அரவுண்ட் இந்தியா இன் 80 டிரைன்ஸ்’ (Around India in 80 Trains) என்ற புத்தகத்தை வாங்கினேன்.
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாகப் பல்வேறு ரயில்களில் பயணம் செய்பவன் என்பதால் மோனிஷா ராஜேஷின் புத்தகத்தை வாசிக்கும் ஆவல் உருவானது.
மேற்குலகில் பயண எழுத்தாளர்கள் புத்தகம் எழுதுவதற்காகவே பயணம் செய்கிறார்கள். தமிழில் ஏ.கே.செட்டியார் தான் முன்னோடிப் பயண எழுத்தாளர். அது போலவே தி.ஜானகிராமனின் ‘ஜப்பானியப் பயணம்’, சாமிநாத சர்மாவின் ‘பர்மா நடைப் பயணம்’, பிலோ இருதயநாத்தின் ‘காட்டில் என் பிரயாணம்’ போன்றவை தமிழில் முக்கியமானப் பயண நூல்கள்.
இதில் பிலோ இருதயநாத் என் விருப்பத்துக்குரியவர். ஆதிவாசிகளைத் தேடியே இந்தியக் காடுகளுக்குள் நிறையப் பயணம் செய்திருக்கிறார். சைக்கிள், தலையில் தொப்பி, கறுப்பு கண்ணாடி, பாக்ஸ் டைப் கேமராவை அணிந்த பிலோ இருதயநாத்தின் தோற்றமே தனித்துவமானது.
இது போலவே பயண எழுத்தாளரான பால்தெரோ, பிகோ ஐயர் இருவரும் சுவாரஸ்யமாக எழுதக்கூடியவர்கள். இதில் பாதெரோ 1973-ல் லண்டன் முதல் பெய்ஜிங் வரை ரயிலில் போய்ப் பரபரப்பை ஏற்படுத்தியவர். அவரது ‘தி கிரேட் ரயில்வே பஜார்’ எனும் பயண நூல் ஒரு கிளாசிக்.
ஜுல்ஸ் வெர்ன் எழுதிய ‘அரவுண்ட் தி வேர்ல்டு இன் எய்ட்டி டேஸ்’ புத்தகம் ஏற்படுத்திய பாதிப்பில், ஒரு புகைப்படக் கலைஞரைத் துணைக்கு அழைத்துக் கொண்டு, தனது பயணத்தைத் தொடங்கி யிருக்கிறார் மோனிஷா. இவரது பூர்வீகம் சென்னை. ஆனால், லண்டனில் படித்து வளர்ந்தவர்.
‘அரவுண்ட் இந்தியா இன் 80 டிரைன்ஸ்’ இந்திய ரயில்களைப் பற்றிய பயண நூல் மட்டுமில்லை. வெளிநாட்டு பயணிகளை நாம் எப்படி நடத்துகிறோம், எவ்வாறு புரிந்து வைத்திருக்கிறோம், எப்படி ஏமாற்றுகிறோம் என்பதையும் சொல்லும் புத்தகம். இந்தியாவில் ஒரு நாளைக்கு 20 மில்லியன் மக்கள் ரயிலைப் பயன்படுத்துகிறார்கள். இந்தியாவின் நான்கு திசைகளிலும் 64 ஆயிரம் கிலோ மீட்டர் பின்னிப் படர்ந்துள்ள ரயில் பாதைகளில் பயணிக்கின்றன இந்திய ரயில்கள்.
இப்படி ஓர் இந்தியப் பயணம் தொடங்க வேண்டும் என நினைத்தவுடனே, இந்திய ரயில்வேயின் பிரிட்டிஷ் பிரதிநிதியாகப் பணியாற்றும் சங்கர் தண்டபாணியோடு கலந்து ஆலோசனை செய்து, 80 ரயில்களில் பயணம் மேற்கொள்ளத் திட்டமிடுகிறார் மோனிஷா.
இந்தப் பயணத்துக்காக 300 பவுண்ட் செலுத்தி, ‘இந்தியாவுக்குள் எந்த ரயிலிலும் 2-ம் வகுப்புக் கட்டணத்தில் பயணம் செய்துகொள்ளலாம்’ என்ற ரயில் பாஸை வாங்கிக்கொள்கிறார் மோனிஷா. இந்த வசதி வெளிநாட்டுக்காரர்களுக்கு மட்டுமேயானது.
இந்திய ரயிலில் ஓர் இளம் பெண் குடும்பத்தோடு பயணம் செய்வது ஒரு போராட்டம். இதில் தனியாகப் பயணம் செய்கிறார் என்றால் கேட்கவா வேண்டும்? ஒவ்வோர் இடத்திலும் விசாரிக்கப்படுகிறார். ‘எப்படி உனது பெற்றோர் உன்னை ஊர்ச் சுற்ற அனுமதிக்கிறார்கள்’ எனக் கேள்வி கேட்கிறார்கள். உடன் பயணிக்கும் புகைப்படக் கலைஞனுக்கும் உனக்கும் என்ன உறவு? இப்படி ஆயிரம் கேள்விகள்.
சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்குப் பயணிப்பதற்காக அனந்தபுரி ரயிலில் ஏறுவதே மோனிஷாவின் முதல் பயணம். அங்கிருந்து பாசஞ்சர் ரயிலில் கன்னியாகுமரிக்குப் பயணம். அங்கே முக்கடல் சங்கமத்தையும் சூர்ய அஸ்தமனத்தையும் காண்கிறார். பிறகு, கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம். அங்கிருந்து மங்களுருக்கு இன்னொரு ரயில். இப்படி பல ரயில்களில் மாறி மாறி டெல்லி வரை போகிறார்.
பின்பு, டெல்லியில் இருந்து ரயில் பிடித்து கோட்டயம் வந்து சேர்கிறார். அங்கிருந்து கோவை, பின்பு மதுரை.இன்னொரு லோக்கல் ரயில் ஏறி திருச்சி, பின்பு பாசஞ்சர் ரயிலில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், சென்னை வந்து சேர்கிறார்.
சென்னையில் இருந்து அடுத்தப் பயணம் ஹைதராபாத் நோக்கியது. அங்கிருந்து மும்பை, புனே என நீண்டு மறுபடி டெல்லிக்குப் போய்ச் சேர்கிறார். பின்பு ஜோத்பூர், ஜெய்சால்மர் பிகானீர், சண்டிகர் என நீண்டு, அங்கிருந்து சிம்லா நோக்கிப் பயணம். இப்படியாக 80 ரயில்களில் அவர் மேற்கொண்ட பயணங்களும், அதில் சந்தித்த மாறுபட்ட மனிதர்களும், அவர்களுடன் நடைபெற்ற உரையாடலும், நிகழ்வுகளும் சுவாரஸ்யமாக எழுதப்பட்டுள்ளன இந்தப் புத்தகத்தில்.
ஒருமுறை ரயில் பெர்த்தில் படுத்து உறங்கும் அவரின் காலை யாரோ இருட்டில் தடவுகிறார்கள். திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தவுடன் பாத்ரூம் போவது போல நழுவிவிடுகிறார்கள். இந்தியப் பெண்கள் இதை எல்லாம் சகித்துக் கொண்டுதான் பயணம் செய்கிறார்கள் என்பதை மோனிஷா சுட்டிக் காட்டுகிறார். இது போலவே, கொங்கன் ரயில்வே யின் 92 குகை வழிகளையும், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பாலங்களையும், இயற்கை கொஞ்சும் நில வெளியினையும் பிடித்தமான வழித்தடமாகச் சுட்டிக் காட்டுகிறார்.
இந்தியன் மகாராஜா எனப்படும் ஆடம்பர ரயிலில் பயணம் செய்தது, சதாப்தி எக்ஸ்பிரஸ் பயணம், வழியில் ரயிலில் கண்ட திருநங்கைகளைப் பற்றிய குறிப்பு, ரயில்வே முன்பதிவு அதிகாரிகள் நடந்துகொள்வது, மதுரை லாட்ஜில் உள்ள இருட்டு அறை போன்ற பார், ஸ்ரீரங்கத்தில் 6 மொழிகள் பேசும் ஹோட்டல் சர்வர் எனப் பயணத்தின் ஊடாகத் தன் அனுபவங்களைச் சரளமாக எழுதியுள்ளார்.
புத்தகத்தின் முக்கியக் குறை எந்த அனுபவமும் மோனிஷாவைப் பாதிக்காததும், எதையும் தேடி அறிந்து கொள்ளும் நாட்டமும் அவருக்கு இல்லாமல் இருந்ததுதான்.
இதை வாசிக்கும்போது, ஒரு கிராமத்தை ரயிலில் ஏற்றிக்கொண்டு இந்தியாவைச் சுற்றி வந்த அனுபவத்தை ஹீதர் வுட் எழுதியிருந்த விதத்தில் ‘தேர்ட் கிளாஸ் டிக்கெட்’ சிறந்த புத்தகம் என்றே தோன்றியது. ஆனாலும், ரயில்களின் வழியாகவே இந்தியாவைச் சுற்றிவந்த உணர்வு ஏற்படுகிறது என்பதற்காகவே ‘அரவுண்ட் இந்தியா இன் 80 டிரைன்ஸ்’ புத்தகத்தை ஒரு முறை வாசிக்கலாம்.
வாசிப்பதோடு நின்றுவிடாமல் நாமும் விருப்பமான பல்வேறு ரயில்களில் ஏறி இந்தியாவைச் சுற்றி வரலாம். அப்போதுதான் இந்தியா எப்படிபட்டது என்பதை நாம் நேரடியாக உணரமுடியும்.
- இன்னும் வாசிப்போம்...
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள…
writerramki@gmail.com