Published : 08 Jul 2017 10:04 AM
Last Updated : 08 Jul 2017 10:04 AM

த.ப. ராமசாமி பிள்ளை: வேத மொழிபெயர்ப்புகளின் முன்னோடிப் புரவலர்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வியாசர்பாடி கரபாத்திர சிவப்பிரகாச சுவாமி மடம், சூளை ஈசூர் சச்சிதானந்த சுவாமி மடம், பெரம்பூர் வீர சுப்பையா சுவாமி மடம், வண்ணை நாராயண தேசிகர் மடம் போன்ற பிராமணர் அல்லாத மடங்கள் தமிழ் குருகுல மரபு முறையில் செயல்பட்டு, பல்வேறு மொழிகளில் வெளியாகிய வேதாந்த நூல்களைத் தமிழில் மொழிபெயர்க்கச் செய்து, பல்கலைக்கழகம் போன்று செயல்பட்டுவந்தார்கள். இந்தச் செயல்பாட்டின் ஊடாக விளைந்த விளைச்சல்கள்தான் திருவொற்றியூரான் வேத மொழிபெயர்ப்பு காரியாலய வெளியீட்டின் முதன்மையான வேத மொழிபெயர்ப்புகள்.

மாக்ஸ்முல்லர் தொடங்கி கோல்புரூக், கிரிஃபித், மோரிஸ் புளும்பீல்டு, வில்லியம் ஜோன்ஸ் ஆகியோர் வேதங்களின் சில பகுதிகளை மொழிபெயர்த்து மேலைநாடுகளில் பரப்பினார்கள். தமிழ்ச் சூழலில் களத்தூர் வேதகிரி முதலியார் தொடங்கி, சேலம் பகடாலு நரசிம்மலு நாயுடு, பாரதியார், சிவத்தியானந்த மஹரிஷி, மற்றும் மணக்கால் ஆர். ஜம்புநாத ஐயர் வரை வேதங்களை மொழிபெயர்த்துப் பதிப்பிப்பதில் ஆர்வம் கொண்டவராக இருந்தவர்கள். குறிப்பாக திருவொற்றியூரான் அடிமை என அழைக்கப்படும் த.ப. ராமசாமி பிள்ளையின் சாமவேத, யஜுர் வேதப் பதிப்பு மிகவும் முக்கியத்துவமான பதிப்பு.

ஆறாத வடு

த.ப. ராமசாமி பிள்ளை 07.07.1889 அன்று தஞ்சை கரந்தை நகரில் பிறந்தவர். சிறு வயதில் கரந்தை நகரில் உள்ள கருவேலநாதர் சன்னிதியில் மறையொலி ஓதும் அந்தணர்களின் ஓசையைப் பின்தொடர்ந்து மந்திரங்களைக் கேட்க ஆவலுடன் செல்வார். அங்குள்ளவர்கள் இந்த மந்திரங்களை நீ கேட்கக் கூடாது என்று திட்டி விரட்டிவிடுவார்கள். இந்த நிகழ்வு ராமசாமி பிள்ளையின் மனதில் ஆறாத வடுவாகத் தங்கிவிட்டது.

பிற்காலத்தில், ஒருமுறை வியாசர்பாடி கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகளின் ஆசிரமத்துக்கு காசிவாசி சிவானந்த யதீந்திர சுவாமிகள் வருகைபுரிந்தார். மடத்தின் காரியஸ்தர் முக்தானந்த சுவாமிகள் த.ப. ராமசாமி பிள்ளையிடம் சிவானந்த யதீந்திர சுவாமிகளை அறிமுகப்படுத்தி, இருவரும் இணைந்து வேதங்களை மொழிபெயர்த்து வெளியிட்டால் தமிழுலகுக்குப் பெரும் நன்மை பயக்கும் என்று அறிவுறுத்தினார். சிவானந்த யதீந்திர சுவாமிகள் மொழிபெயர்ப்புப் பணியை ஆரம்பிக்க உறுதியளித்தார்.

அத்தனையும் நன்கொடையாக...

1930 வாக்கில் தொடங்கிய இந்த மொழிபெயர்ப்புப் பணிக்காக ராமசாமி பிள்ளை அன்றைய நாளில் பல லட்சக் கணக்கான ரூபாய்களைச் செலவிட்டு வேத மொழிபெயர்ப்புக்குத் தேவையான, அனைத்து மொழிகளிலும் வெளிவந்த வேத உரைகளையும், நிருத்தம், நிகண்டு, வேதாகமங்களையும் வரவழைத்து மிகப் பெரிய நூலகத்தை உருவாக்கி, திருவொற்றியூரான் வேத மொழிபெயர்ப்புக் காரியாலய வெளியீடு என்ற பெயரில் வடமொழிக் கல்லூரி ஒன்றைத் தொடங்கினார். முதலில், சாம வேத மொழிபெயர்ப்பை சிவாநந்த யதீந்திர சுவாமிகள் தொடங்கினார். இவரது மொழி பெயர்ப்புக்குத் துணையாக வடமொழியும் தமிழும் அறிந்த பல பண்டிதர்களை நியமித்து அவர்களுக்கு வேண்டிய அனைத்துப் பொருளாதார உதவிகளையும் ராமசாமி பிள்ளையே கவனித்துக்கொண்டார்.மொழிபெயர்ப்பு முடிவுற்றதும் நாகரம், கிரந்தம், தமிழ் என மூன்று வடிவங்களில் இரண்டு தொகுதிகளாக, உயர் ரகத் தாளில், அழகான அச்சுருவில் ரெக்சின் காலிக்கோ பைண்டிங் செய்து ஆயிரம் பிரதிகள் அச்சிட்டு நன்கொடையாக அளித்தார் ராமசாமி பிள்ளை.

பதிப்புரையில் எந்தப் பீடிகையும் இல்லாமல் இப்படிக் குறிப்பிடப்பட்டிருந்தது: “நாம் எண்ணில் காலம் வேதம் வேதம் என்னும் சொல்லை மாத்திரம் கேட்டு அது இன்னதென்றுணர முடியாமல் அறியாமையிற் கட்டுண்டு கிடந்தோமல்லவா? அதையுணர்ந்த திருவொற்றியூர் எழுத்தறியும் பெருமானார் தண்ணருள் சுரந்து எழுதாக் கிளவியாகிய வேதங்களையும் தமிழிலும் எழுதுமாறு பணித்தருள, அப்பணியை தலைமேற்கொண்டு, செயற்கரிய செய்யும் பெரியாரைக் கொண்டு தமிழில் மொழிபெயர்ப்பித்து முதலில் சாமவேதத்தைப் பதிப்பித்து உலகம் உய்யுமாறு நன்கொடையாக அளித்தனம். இனி கிருஷ்ண யஜுர் வேதத்தையும், அதர்வண வேதத்தையும் அளிக்க எண்ணியுள்ளோம். ‘தானே வந்தது வீணே போனது’ என்றபடி இதை வாங்கி வீணாக்காமல் அதன் பொருளை உணர்ந்து உய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.”

வருணாசிரமத்தால் சூத்திரர் என்று வரையறுக்கப்பட்ட இருவர் (சிவானந்த யதீந்திர சுவாமிகள், ராமசாமி பிள்ளை) முயற்சியில் விளைந்த விளைச்சல்தான் சாமவேத சம்ஹிதை (இரண்டு தொகுதிகள்), கிருஷ்ண யஜுர் வேதம் (பத்து தொகுதிகள்). இவை அனைத்தும் இலவசமாகவே வழங்கப்பட்டன. தனிமனிதராக 1934-ல் திருவொற்றியூர் தியாகராஜர் கோயிலின் உள்ளே எழுத்தறியும் பெருமானுக்காக அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கற்கோயிலைக் கட்டுவித்து, அந்தக் கோயிலுக்கு கும்பாபிஷேகமும் செய்து, அந்த நிகழ்வில் வேத மொழிபெயர்ப்புகளை வெளியிட்டார் ராமசாமி பிள்ளை.

தமிழ்ச் சமூகத்தின் மறதி

அரும்பாடுபட்டு, மொழிபெயர்ப்புப் பணியைத் துரிதப்படுத்தி ராமசாமி பிள்ளை பதிப்பித்த அனைத்து நூல்களும் நன்கொடையாக மட்டுமே தமிழ் உலகுக்கு அளிக்கப்பட்டாலும் இந்தப் பதிப்பு தமிழ் ஆய்வுப் பெருமக்களிடையே ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது மிகப் பெரிய சோக வரலாறு. இந்த வேத மொழிபெயர்ப்பு தவிர, நூல்கள் வெளியிட வசதியில்லாத எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் பலருக்கும் மிகப் பெரிய அளவில் உதவிபுரிந்து அவர்களின் நூல்கள் வெளிவர உதவியுள்ளார். அவர் வெளியிட்ட வேதங்களின் மொழிபெயர்ப்பை இன்று வரை மீள்பதிப்பு செய்ய யாரும் முயற்சி செய்யவில்லை.

இந்த வேத மொழிபெயர்ப்பு நூலைத் தவிர பொது மக்களின் நன்மை கருதி பல சமூக சேவைகளையும் செய்துள்ளார் ராமசாமி பிள்ளை. இந்த மொழி பெயர்ப்பு நடந்த காரியாலயமே இன்று வேப்பேரியில் திருவொற்றீசுவரர் இலவச உயர்நிலைப் பள்ளியாக இயங்கிவருகிறது. இந்தப் பள்ளிக்கூடம் 1947-ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. இன்று வரை இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குக் கல்வி, உடை, உணவு எல்லாமே ராமசாமி பிள்ளையின் குடும்பத்தினர் சார்பாக இலவசமாக அளிக்கப்படுகிறது. தற்போது ஓட்டேரி பகுதியில் இயங்கிவரும் திருவொற்றியூரான் அரசு நெஞ்சக மருத்துவமனை அந்தக் காலத்தில் ராமசாமி பிள்ளையால் தானமாக அளிக்கப்பட்ட இடமே. சுயலாபம் சிறிதும் பாராமல் பணியாற்றியவர் ‘திருவொற்றியூரானடிமை’ என்று அழைக்கப்படும் த.ப. ராமசாமி பிள்ளை. அவரது வரலாற்றையும் அவரது பணிகளையும் தமிழர்களின் மறதியெனும் புதைமணலிலிருந்து மீட்டெடுக்க வேண்டியது இனி ஆய்வாளர்களின் பணி!

- ரெங்கையா முருகன்,

‘அனுபவங்களின் நிழல் பாதை’ என்ற நூலின் ஆசிரியர். தொடர்புக்கு: murugan_kani@yahoo.com

(ஜூலை 7 த.ப. ராமசாமி பிள்ளையின் பிறந்த நாள்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x