

கடந்த சில மாதங்களாக ‘கதை கேளு... கதை கேளு... கழகத்தின் கதை கேளு’ என்கிற பெயரில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அதிமுகவைப் பற்றி எழுதியவற்றைத் தொகுத்து இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது.
அதிமுகவின் தொடக்கம் முதல் அந்தக் கட்சி ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தற்போது இருக்கும் நிலை வரை மிகக் கடுமையான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து எழுதியிருக்கிறார் இராமதாசு . கருணாநிதிக்கும் எம்ஜிஆருக்கும் ஏற்பட்ட நட்பு, கருத்து வேறுபாடு, இருவரும் பிரிந்தது, கழகம் உருவானது போன்றவையெல்லாம் விலாவாரியாக எழுதப்பட்டிருக்கின்றன.
கடந்த 45 ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத சக்தி அதிமுக. அந்த வகையில் தமிழகத்தின் மொத்த அரசியல் வரலாற்றையும் தனது நினைவின் அடுக்குகளிலிருந்து எடுத்துக் கையாண்டிருக்கிறார்
இராமதாசு . கூடுதலாக, திமுகவில் நடந்த சம்பவங்களையும் அந்தக் கட்சி செய்த ஊழல்களையும் பட்டிலிடுகிறார் இராமதாசு .
நூலில் ‘நால்வர் அணியும் உதிர்ந்த ரோமங்களும்’ என்கிற தலைப்பிடப்பட்ட அத்தியாயத்தில் எம்ஜிஆருக்குப் பிறகு அதிமுகவைக் கைப்பற்ற அதிமுகவின் கோஷ்டிகளுக்கு இடையே நடந்த மோதல்களைப் படிக்கும்போது இன்றைய அதிமுக கோஷ்டி மோதலுக்கும் அன்றைய கோஷ்டி மோதலுக்கும் பண பேரங்களுக்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை.
‘எம்.ஜி.ஆர். என்ற திரைப்பட நடிகரின் சினிமா கவர்ச்சியை முதலீடாக வைத்து தொடங்கப்பட்ட அதிமுக, அவரது மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா என்ற நடிகையின் சினிமா கவர்ச்சியால் புத்துயிருட்டிக்கொண்டது. ஊழல் என்றால் அதிமுக, அதிமுக என்றால் ஊழல்...” என்பது உட்பட பல்வேறு நேரடி குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறது இந்த நூல்.
- டி.எல். சஞ்சீவிகுமார்