Last Updated : 22 Jul, 2017 11:28 AM

 

Published : 22 Jul 2017 11:28 AM
Last Updated : 22 Jul 2017 11:28 AM

சென்னை வாசிக்கிறது…

பல நூற்றாண்டுகளாகத் தமிழர்கள் கதைகள் சொல்லிக் கொண்டும்,கதைகள் கேட்டுக்கொண்டும், கதைகள் படித்துக்கொண்டும் இருக்கிறார்கள்.அவர்களின் கதைகளெல்லாம் பார்த்தது, கேட்டது, கற்பனையில் உருவானது, இன்னொருவர் சொன்னதிலிருந்து வந்தது என்று பல இழைகள் கொண்டதாக இருந்தன.

கதைகள் மொழிவழியாகத்தான் சொல்லப்படுகின்றன. ஆனால், மொழியே கதை கிடையாது.மொழி தோன்றுவதற்கு முன்னாலேயே மனிதர்களிடம் கதைகள் இருந்தன. தாங்கள் கண்டுபிடித்த மகத்தான கருவியான மொழி வழியாகவும் கதைகள் சொன்னார்கள். எத்தனைதான் சிறப்பாக வாயொலி வழியாகக் கதைகள் சொல்லிவந்தாலும் அது அவர்களுக்கு நிறைவளிக்கவில்லை. கதைகளை நிரந்தரப்படுத்த எழுத்துக்களைக் கண்டுபிடித்து எழுத ஆரம்பித்தார்கள்.

பேசும் மொழியும், எழுதும் எழுத்தும் படிப்பு என்பதற்கு ஆதாரமாகிவிட்டது. காலம் செல்லச் செல்லப் படிப்பு-வாசிப்பு என்பதெல்லாம் மெளன வாசிப்பாகிவிட்டது. அதனால் செவி இன்பம் போய்விட்டது. ஆனாலும், கலைஞர்கள், எழுத்தாளர்கள் மகத்தான படைப்புகளை மக்கள் முன்னே வாசித்தார்கள். கோபால கிருஷ்ண பாரதியார் தான் எழுதிய நந்தன் சரித்திரக் கீர்த்தனைகளைப் பல இடங்களில் வாசித்தும் பாடியும் காண்பித்தார். இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால், ஐரோப்பிய நாடுகளில் புத்தக வாசிப்பு என்பது பெரும் இயக்கமாக இருந்தது. பல எழுத்தாளர்கள் ஊர்ஊராகச் சென்று கதைகள் வாசித்தார்கள். அதில், பிரபலமானவர் சார்லஸ் டிக்கன்ஸ். அவரின் கதை வாசிப்பை, மகாராணி அலெக்ஸாண்டரியா விக்டோரியா வந்து கேட்டார். எழுத்தாளர்கள் கதைகள் வாசிப்பதும், வாசகர்கள் கூடிக் கேட்பதும் இழையறாத மரபாகவே இருந்துவருகிறது.

சென்னையில்,1968-ம் ஆண்டில் இலக்கியச் சங்கம் ஒன்றைத் தொடங்கி கவிதை, கதை வாசிப்பு நடத்திவந்தோம். புத்தக விமர்சனங்கள், கட்டுரை வாசிப்பும் அதில் உண்டு. நகரத்தின் மத்தியில் இருக்கும் நூலகத்தில் அது நடந்தது. சில நாட்கள் டிரைவ் இன் ஓட்டல் மரத்தடியில் புல்வெளியில் அமர்ந்து கதைகள் வாசித்தோம். அசோகமித்திரன் ‘வாழ்விலே ஒருமுறை’ கதையை வாசித்தார். நான் ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’ கதையை வாசித்தேன். ஞானக்கூத்தன், ராஜகோபால் கவிதைகள் வாசித்தார்கள். சிங்கப்பூர் தேசிய நூலகம் ‘வாசிப்போம் சிங்கப்பூர்’ என்ற நிகழ்ச்சியை நடத்திவருகிறது, தமிழ் மொழிக்காக எனது ‘சூரிய வம்சம்’ நாவல் தேர்ந்தெடுக்கப்பட்டது. பல பள்ளிக்கூடங்களில் நாவல் படிக்கப்பட்டது. பொது அரங்குகளில் வாசித்தார்கள். அதன் நாவலாசிரியர் என்ற முறையில் 2007-ல் என்னை அழைத்தார்கள். நாவலின் சில பகுதிகளை நான் வாசித்தேன். இந்தியா ஒரு நாடு என்றாலும், ஒரே ஒரு மொழி பேசப்படும் நாடில்லை. பன்மொழிகள் பேசப்படும் நாடு. எனவே, சாகித்ய அகாதெமி, பல மொழிகளிலும் கவிதை, கதை வாசிப்புகளை நடத்திவருகிறது.

ஆகஸ்டு மத்தியில் வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, மிசோராம், மணிப்பூர், மேகாலயா, திரிபுரா ஆகியவற்றைச் சேர்ந்த எழுத்தாளர்களும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளின் எழுத்தாளர்களும் பங்கேற்கும் சிறுகதை வாசிப்பு விஜயவாடாவில் நடைபெறுகிறது. அதற்கு தலைமை தாங்க ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறேன். சென்னை வாசிப்பு - என்பது சென்னையைப் பற்றியோ தமிழ்நாட்டைப் பற்றியோ ஆனதில்லை. அது சென்னையில் வாசிக்கப்படும் சர்வதேச வாசிப்பு.

- சா. கந்தசாமி, மூத்த எழுத்தாளர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x