

ஒசாமு டெசுகா எழுதிய ‘புத்தா’ என்கிற நூலை இப்போது வாசித்துவருகிறேன். 8 தொகுதிகளைக் கொண்ட இந்தப் புத்தகம் ஜப்பானில் புகழ்பெற்ற மாங்கா சீரியஸ் வகை கிராபிக் (காமிக்ஸ்) நாவல். புத்தர் பிறந்தது முதல் ஒவ்வொரு படிநிலையாக சொல்லும் நாவல் இது. திரைப்படப் படைப்பாளிகள் திரைமொழியில் ஒரு காட்சியை எப்படிப் பதிவுசெய்ய விரும்புவோமோ, அதுபோல புத்தருடைய வாழ்க்கை முழுக்க காட்சியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள நூல். ஒவ்வொரு பக்கமும் அவ்வளவு நேர்த்தியாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுக்க பிரபலமான இந்த நாவலில் உள்ள கிராபிக் படங்களை ஒசாமு டெசுகா 12 ஆண்டுகள் தொடர்ச்சியாக வரைந்து உருவாக்கியுள்ளார். ஒரு கதை சொல்லும்போதோ படிக்கும்போதோ அதைக் காட்சியாக்கி உணர்வது இயல்பு. ‘புத்தா’ நூலை படிக்கும்போது காட்சிகளே பல படிநிலைகளில் கதை சொல்லும் விதமாக உள்ளது. மிக எளிமையான ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள இந்த நாவல், தமிழில் அவசியம் மொழிபெயர்க்க வேண்டிய நூல்.