

டொமினிக் ஜீவா-90
ஜூன் 27 அன்று தனது 90-வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார் இலங்கைத் தமிழ்ச் சிற்றிதழ் சாதனையாளரான டொமினிக் ஜீவா. 1966-லிருந்து ‘மல்லிகை’ இதழை நடத்திவரும் இவர் தமிழ், முஸ்லிம், சிங்கள எழுத்தாளர்களின் உறவுப் பாலமாக விளங்குபவர்.
1960-ல் வெளிவந்த அவரது ‘தண்ணீரும் கண்ணீரும்’ சிறுகதைத் தொகுப்பு, இலங்கை சாகித்ய மண்டலத்தின் விருது பெற்றது. தொடர்ந்து சிறுகதைகள், கட்டுரைகளை எழுதிவரும் டொமினிக் ஜீவாவின் சுயசரிதையான ‘எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்’ வாசகர்களின் கவனத்தைப் பெற்ற நூல்!
சென்னையில் ஒரு கதைக் காலம்!
சென்னை தினத்தை முன்னிட்டு சிறுகதைப் போட்டியென்றை கிழக்கு பதிப்பகம் அறிவித்துள்ளது. சென்னையில் நடக்கும் கதையாகவோ, சென்னையைப் பற்றிய கதையாகவோ இருக்கலாம். கதைகளை அனுப்ப கடைசி நாள் ஜூலை 20, 2017. மின்னஞ்சல்: kizhakkupathippagam@gmail.com
எழுத்தாளரின் ‘கோரி’க்கை!
தன்னுடைய காரின் பின்புறத்தில், “இந்த வண்டி பாதசாரிகள் மீது கரிசனம் கொண்டது. யாரேனும் சாலையைக் கடக்கையில் வண்டி தானாகவே நின்றுவிடும். பின்னிருந்து யாரும் ஒலிஎழுப்ப வேண்டாம்” என்று காரில் எழுதி வைத்திருக்கிறார் எழுத்தாளர் ஏ.ஏ.ஹெச்.கே. கோரி.
‘‘அதென்ன, கார் பின்னாடி இப்படி எழுதியிருக்கீங்க?’’ என்று கேட்டால், “நம்ம நாட்டிலே வண்டியில போறவங்களுக்குத்தான் சாலையில முன்னுரிமைனு நெனைச்சுக்குறாங்க பலர். நடக்குறவங்களுக்குத்தான் எப்போதும் முன்னுரிமை. இதையெல்லாம் எழுதி வலியுறுத்த வேண்டிய காலமால்ல இது இருக்கு!” என்கிறார்.
பாடநூல் கழகத்தின் புத்துயிர்ப்பு!
உயர்கல்விக்கான தமிழ் நூல்களின் தேவைகளை அறிந்து மீண்டும் வெளியீட்டுப் பிரிவைத் தொடங்கியுள்ளது தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம். ஏற்கெனவே கழகம் வெளியிட்ட அரிய நூல்கள், நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள், ஏனைய அரிய நூல்கள் ஆகியவற்றை மறுபதிப்புசெய்து குறைந்த விலையில் நூலகங்களுக்கும் மக்களுக்கும் வழங்க முடிவெடுத்திருக்கிறார்கள். இதேபோல தமிழில் அவசியம் வாசிக்க வேண்டிய ஆங்கிலம் மற்றும் பிற மொழி நூல்களை மொழியாக்கம் செய்வதற்கான உரிமையும் பெற்றிருக்கிறது. மொழிபெயர்ப்பாளர்கள், பதிப்பாசிரியர்கள், வடிவமைப்பாளர்கள், பிழைதிருத்துநர்கள் என்று நிறைய வேலைகளுக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள். இதற்கான அறிவிப்பு ‘www.textbookcorp.nic.in’ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளோர் 05.07.2017-க்குள் விண்ணப்பிக்கலாம்.