

புது வீடு புது உலகம்
தமிழின் நவீன இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான கு.அழகிரிசாமி சிறுகதை எழுத்தாளராகவே பெரிதும் அறியப்படுகிறார். நாவல், குழந்தைக் கதைகள், நாடகம், மொழிபெயர்ப்பு, இலக்கியக் கட்டுரைகள் என்று பல தளங்களிலும் பங்களித்தவர் அவர். கு.அழகிரிசாமி எழுதி சுதேசமித்திரனில் தொடராக வெளிவந்த நாவல் ‘புது வீடு புது உலகம்’. பல ஆண்டுகளாக மறுபதிப்பு செய்யப்படாமலே இருந்த இந்நாவலை, முன்வெளியீட்டுத் திட்டத்தின்கீழ் புலம் பதிப்பகம் வெளியிட உள்ளது. ராயல் சைஸ் அளவில், 600 பக்கங்கள் கொண்ட புத்தகத்தின் விலை முன்வெளியீட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.325. முன்பதிவு செய்ய கடைசித் தேதி ஆகஸ்ட் 5.
நடைபாதைக் கடையில் ஒரு புத்தகக் காதலர்
சென்னை கே.கே. நகர் லெட்சுமணசாமி சாலையின் நடைபாதையோரமாக நடந்துசெல்வீர்கள் என்றால் அங்கே பெல்ட், பர்ஸ், கீ-செயின் போன்ற பொருட்களை விற்பனை செய்தபடியே, இடைவெளியில் புத்தகம் வாசித்துக்கொண்டிருக்கும் வடிவேலை நீங்கள் தவறவிட முடியாது. 10 வருடங்களுக்கு முன் சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னைக்கு வந்த வடிவேலு, ‘கடம்பன்’, ‘ஓட்டத் தூதுவன்’ ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார். சினிமாவைப் போலவே புத்தகங்கள் மீதும் பெரும் காதல் கொண்டவர் வடிவேலு. “சினிமா வாய்ப்பு ஒண்ணும் பெரிசா வரலை. அதை நம்பிக் குடும்பத்தை நடத்த முடியுமா..? அதான், இந்த வியாபாரத்தை ஆறு வருஷமா செய்யிறேன். சமையல் செய்யவும், டெக்கரேஷன் செய்யவும் எனக்குத் தெரியும். இடையிலே அந்த வேலைக்கும் போவேன். அதில வர்ற வருமானத்தை வச்சுத்தான் புத்தகம் வாங்கிப் படிக்கிறேன். எஸ். ராமகிருஷ்ணனோட எழுத்து எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஒன்றரை வருஷமா ‘தி இந்து’ல வர்ற தொடர்கள், நடுப் பக்கக் கட்டுரைகளைத் தொடர்ந்து படிச்சிட்டுவர்றேன்” என்கிறார் வடிவேலு.
தடைசெய்யப்பட்ட புத்தகங்களால் கட்டப்பட்ட பார்த்தினன்!
ஹிட்லரின் நாஜிப் படையினர் அரங்கேற்றிய கொடுமைகளில் அறிவுலகம் மீதான தாக்குதலும் முக்கியமானது. 1933-ல் யூதர்களாலும் மார்க்சிய எழுத்தாளர்களாலும் எழுதப்பட்ட ஆயிரக் கணக்கான புத்தகங்களை ஜெர்மனியின் காஸெல் நகரில் உள்ள ஃப்ரைடிச்ப்ளாட்ஸ் பகுதியில் தீயிட்டுக் கொளுத்தினார்கள். இன்றைக்கு அதே பகுதியில் கிரேக்கத்தின் புகழ்பெற்ற பார்த்தினன் கட்டிடத்தைப் போல் புத்தகங்களாலேயே உருவாக்கப்பட்ட கட்டிடம் கம்பீரமாக நிற்கிறது. ஜெர்மனியில் நடந்துவரும் ‘டாகுமெண்டா’ எனும் கலைக் கண்காட்சியில் அனைவரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது இந்தப் புத்தகக் கட்டிடம்.
அர்ஜெண்டினாவின் புகழ்பெற்ற ஓவியக் கலைஞரான மார்த்தா மினுஜினின் கைவண்ணம் இது. தடைசெய்யப்பட்ட 170 புத்தகங்களின் ஒரு லட்சம் பிரதிகளைக் கொண்டு இதை உருவாக்கியிருக்கிறார். அர்ஜெண்டினாவில் 1971 முதல் 1983 வரை சர்வாதிகார ஆட்சியின் கொடுமைகளை அனுபவித்தவர் மார்த்தா. கடுமையான தணிக்கை நடவடிக்கைகள், புத்தகங்கள் எரிப்பு போன்றவற்றையும் நேரில் கண்டவர். நமது எதிர்காலத்துக்கு, பன்முகத்தன்மை தேவை என்பதை உணர்த்தும் விதமாக இந்தக் கட்டிடத்தை உருவாக்கியதாக மார்த்தா சொல்கிறார். தடைசெய்யப்பட்ட புத்தகங்களை டிசம்பர் மாதம் வரை சேகரிக்கிறார். கண்காட்சி முடிந்த பின்னர், மக்களிடம் அந்தப் புத்தகங்கள் விநியோகிக்கப்படுமாம்!
மருத்துவர் கு. கணேசனுக்கு விருது
தமிழில் 40-க்கும் மேற்பட்ட மருத்துவ நூல்களை, பாமரருக்கும் புரியும் விதத்தில் எழுதியவர் மருத்துவர் கு. கணேசன். ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் தொடர்ந்து மருத்துவக் கட்டுரைகள் பங்களித்துவருபவர். ராஜபாளையத்தைச் சேர்ந்தவரான இவருக்கு இந்திய மருத்துவச் சங்கத்தின் தமிழ்நாட்டுக் கிளை சார்பில் ‘சிறந்த மருத்துவர் விருது’ சமீபத்தில் வழங்கப்பட்டிருக்கிறது. மருத்துவர் கு. கணேசனுக்கு வாழ்த்துகள்!
ஆத்மாநாம் விருது
ஆத்மாநாம் அறக்கட்டளையின் விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ‘பெருங்கடல் போடுகிறேன்’ என்ற கவிதைத் தொகுப்புக்காக ஈழக் கவிஞர் அனாரும் ‘தாகம் கொண்ட மீனொன்று’ என்ற ரூமி பாடல்களின் மொழிபெயர்ப்பு நூலுக்காக என். சத்யமூர்த்தியும் விருதுகள் பெறுகிறார்கள். விருதாளர்களுக்கு வாழ்த்துகள்!