

சி
ட்ரா என்ற பெயரால் உலகப் புகழ்பெற்ற தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி, பயிற்சி, மேம்பாட்டு மையத்தை நிறுவி வளர்த்த சீனிவாசன்தான் இந்த நூலின் நாயகர். கரடிபாவி என்ற எளிய கிராமத்தில் மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்து தனது கல்வியாலும் கற்பனைத் திறனாலும் சவால்களை வென்று சாதனை படைத்த சீனிவாசனின் வாழ்க்கை எல்லோருக்கும் நல்ல முன்னுதாரணம். தொழிலதிபர்களைப் பற்றிய புத்தகங்களைs சுவைபட எழுதுவது கலை. சலிப்பில்லாமல் இந்த நூலை நம்மைப் படிக்க வைத்திருப்பது நூலாசிரியரின் தனித்தன்மை. இந்த நூலுக்குத் தொடர்புள்ள காட்சிகளை சீனிவாசனின் மனைவி பார்பராவே கண்ணுக்குப் பாந்தமாக வரைந்திருப்பது நிறைவாக இருக்கிறது.
சென்னை மாநிலக் கல்லூரியில் இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற பிறகு ஜவுளித் தொழில்நுட்பத்தில் உயர் கல்விக்கு மான்செஸ்டர் சென்ற சீனிவாசன், அங்கே பார்பராவைச் சந்தித்ததும் காதல் திருமணம் செய்துகொண்டதும் நாவல்களில் வருவதைப் போலவே நடந்துள்ளது. சீனிவாசன் நாடு திரும்பிய பிறகு, குடும்ப ஜவுளி ஆலையை விருத்தி செய்வதைவிட ஜவுளித் துறை ஆராய்ச்சியில் ஈடுபாடு காட்டினார். தென்னிந்தியாவில் உள்ள எல்லா ஜவுளி ஆலைகளையும் அடிக்கடி சுற்றிப் பார்த்து, அவற்றின் நிர்வாகக் கோளாறு, உற்பத்தித்திறன் குறைபாடு ஆகியவை களைய வழி சொன்னதல்லாமல் எல்லாவற்றையும் தங்களுடைய வளாகத்திலேயே சோதிக்க மாதிரி ஜவுளி ஆலையை நிறுவியதும் முன்னோடியான சாதனை.
புற்றுநோயாளிகளின் துயர் துடைக்க சீனிவாசன் எடுத்த நடவடிக்கைகள் என்றென்றும் நினை வாஞ்சலி செய்ய வைக்கும். இந்நூல் சீனிவாசனின் வாழ்க்கையோடு அன்றைய கோவை, பிரிட்டானிய வரலாறு, ஜவுளித் துறை வளர்ச்சி, சாதனை போன்றவற்றையும் ஒருங்கே தரும் அரிய ஆவணம்.
- சாரி