Published : 15 Jul 2017 10:18 AM
Last Updated : 15 Jul 2017 10:18 AM

பல்துறை அறிவும் நூல்களாய் விரியட்டும்!

ஆங்கிலம் போன்ற மேலை மொழிகளில் இருப்பதுபோல தரமான அறிவியல் நூல்கள் தமிழில் ஏன் இல்லை என்ற கேள்வி அடிக்கடி முன்வைக்கப்படுவது உண்டு. 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கேள்விக்கு இருந்த முக்கியத்துவம் இன்னமும் நீடிப்பதுதான் விசித்திரம்.

ஆங்கிலம் இன்று உலகாள்கிறது என்றால் அதற்கு இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட நாடுகளின் காலனியாதிக்க, ஏகாதிபத்தியச் செயல்பாடுகள் மட்டுமே காரணம் அல்ல. உலக அறிவுச் செல்வம் அனைத்தும் தங்கள் மொழியில் கிடைக்க வேண்டும் என்ற அவர்களின் அறிவுப் பசியும் ஒரு காரணம். கூடவே, எல்லாத் துறைகளிலும் முதன்மையான சாதனைகள் படைத்த அமெரிக்கர்கள், ஆங்கிலேயர்கள் தங்கள் மொழியில் துறை சார்ந்து எழுதிய கணக்கற்ற நூல்கள்தான் இன்றைய அறிவுலகத்தில் அவர்களின் ஏகாதிபத்தியத்துக்கு முக்கியமான காரணம்.

மிகச் சிறந்த ஒரு அறிவியலாளர் மிகச் சிறந்த அறிவியல் எழுத்தாளராகவும் அங்கே இருப்பார். துறைசாராத பொது வாசகர்களும் எளிதில் படிக்கும்படி அவர்களின் எழுத்துகள் இருக்கும். ஆனால், தமிழைப் பொறுத்தவரை துறை சார்ந்து எழுதுபவர்களின் நூல்கள் பெரும்பாலும் அவர்களின் துறைகளைத் தாண்டிச் செல்வதில்லை.

அறிவியல் துறைகள் சார்ந்து தமிழில் சுயமாக எழுதப்படும் நூல்கள் மட்டுமல்ல, அறிவியல் நூல்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளும் பெரும்பாலும் கடினமானவையாகவே அமைந்துவிடுகின்றன. தமிழ் மட்டுமே அறிந்த ஒரு வாசகர் இதுபோன்ற நூல்களைப் படித்தே தங்களின் பல்துறை அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார். இருப்பதை வைத்துக்கொண்டு திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டிய நிலை! மேலும் தரமான, துல்லியமான, விரிவான நூல்களைப் படிக்க வேண்டும் என்றால் ஆங்கிலம் தெரிந்துகொண்டு, ஆங்கில நூல்களை நாடிச் சென்றாக வேண்டும் என்ற நிலைதான் இங்கு நிலவுகிறது.

பெ.நா. அப்புஸ்வாமி, மா.கிருஷ்ணன் என்று தொடங்கி சுஜாதா, என்.ராமதுரை, சி.ஜெயபாரதன் போன்றோர் அடங்கிய சிறு பட்டியல் தமிழில் இருக்கிறது. முன்பைவிடவும் நிறைய பேர் தற்போது அறிவியல் கட்டுரைகள் எழுதுகிறார்கள். என்றாலும், தேவைக்கு ஏற்ற அளவில் அறிவியல் எழுத்தாளர்களும் அறிவியல் நூல்களும் தமிழில் இல்லை என்பதுதான் உண்மை.

பள்ளிக்கல்வித் துறை, பல்கலைக்கழகங்கள், பெரும் பதிப்பகங்கள், ஆர்வமுள்ள அறிவியலாளர்கள், பிற துறை வல்லுநர்கள், எழுத்தாளர்கள் என்று பல தரப்பினரும் கைகோத்தால் தமிழில் தரமான துறைசார் நூல்களை முன்பைவிட பல மடங்கு உருவாக்க முடியும். தமிழ் மட்டுமே அறிந்த ஒருவர் உலகின் அனைத்துத் துறைகளின் அறிவைப் பெற முடியும் என்ற நிலை அடைந்தால் மட்டுமே தமிழ் ஏற்றம் பெற முடியும் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x