கழனியூரன் எனும் கதை வேட்டைக்காரர்

கழனியூரன் எனும் கதை வேட்டைக்காரர்
Updated on
3 min read

தமிழ் நாட்டுப்புற வழக்காற்றியலின் முன்னத்தி ஏரான கி.ராஜநாராயணனின் நீட்சியாக, அவர் வழி வந்தவர் கழனியூரன். கரிசல் வட்டார வழக்குகள், நாட்டார் கதைகள், வசவுச் சொற்கள், விடுகதைகள், தமிழ்-தெலுங்கு சொலவடைகள், சிறுவர் கதைகள், பாலியல் சேகரிப்புகள் என்று ஒரு தேனீயைப் போல தேடித்தேடிச் சேகரித்தவர் கழனியூரன். கி.ராவின் அத்யந்த சீடனாகவே தன் வாழ்நாள் முழுக்கவும் செயல்பட்ட கழனியூரனின் சொந்தப் பெயர் எம்.எஸ். அப்துல் காதர். எழுத்துக்காக, தான் பிறந்த ஊரான கழுநீர் குளத்துக்காரராக (கழனியூரன்) மாறியவர். சிறுவயதில், கண்பார்வையற்ற தனது அண்ணனுக்காக அவர் கொடுத்த புத்தகங்களைத் சத்தமாக வாசிக்கத் தொடங்கியதுதான் கழனியூரனின் முதல் இலக்கிய அறிமுகம். பிறகு, தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் வாசலில் நடக்கும் ஆன்மிக, இலக்கியச் சொற்பொழிவுகளில் ஆர்வமாகக் கலந்துகொள்ளத் தொடங்கினார். அங்கேதான் ‘லானா சானா’ என்று அழைக்கப்படும் ல. சண்முகசுந்தரத்தின் அறிமுகம் கழனியூரனுக்குக் கிடைத்தது.

திருநெல்வேலியில் வட்டத்தொட்டி இலக்கியக் குழுமமும், ரசிகமணி டி.கே.சி.யின் பிறந்தநாள் நிகழ்ச்சியும் மிகவும் பிரபலம். ராஜாஜியில் தொடங்கி, ரா.பி. சேதுப்பிள்ளை, கல்கி, அ. சீனிவாச ராகவன், தொ.மு. பாஸ்கர தொண்டைமான், வையாபுரிப்பிள்ளை, மீ.ப. சோமு, கி.ரா., ஜெயகாந்தன் என்று பலரும் வட்டத்தொட்டியின் நெடுநாளைய உறுப்பினர்கள். டி.கே.சி.யின் மறைவுக்குப் பிறகு, அவரது பேரன் தீப. சிதம்பரநாதன் முயற்சியில், டி.கே.சி. அன்பர்கள் அனைவரும்கூடி, அவரது பிறந்தநாளை ஆண்டுதோறும் கொண்டாடத் தொடங்கினார்கள்.

அந்நிகழ்வில் பல்வேறு இலக்கிய ஆசான்களும் கலந்துகொள்வார்கள். அங்குதான் முதன்முறையாக கி. ராஜநாராயணனைச் சந்தித்தார். நிகழ்ச்சி முடிந்து ஊருக்குப் போன கி.ரா.விடமிருந்து சில நாட்களில் கழனியூரனுக்குக் கடிதம் வந்தது. “நீங்கள் ஒரு நல்ல வாத்தியார், அதே நேரம் கிராமம் கிராமமாக அலைந்து வேலை பார்க்கும் வாய்ப்பும் உங்களுக்கு இருக்கிறது. இப்படி, நாட்டார் வழக்காற்றியல் தொடர்புடைய கதைகளைத் தேடிச் சேகரியுங்களேன்” என்று முதல் தடவையாக கி.ரா கழனியூரனைத் தூண்டிவிட்டார். இப்படித்தான் தொடங்கியது கழனியூரனின் நாட்டாரியல் வேட்டை.

முதல் தடவை கழனியூரன் கிராமங்களுக்குப் போய்க் கதைகள் சேகரிப்பதற்காக கிராமத்தினரை அணுகியபோது, வெட்கத்தின் காரணமாகவும், வேலைப்பளுவைக் காரணம் காட்டியும், பெண்ணும் ஆணும் கதைசொல்ல மறுத்திருக்கிறார்கள். அதை கி.ராவிடம் சொன்னதும், “பொம்பளையாளு சோறு ஆக்கணும்பா. நீங்க போய்ப் பக்கத்துல உக்காந்து அடுப்புல தீயைத் தள்ளுங்க, அவங்களோட ஒண்ணுமண்ணா பழகிப் பேச்சு கொடுத்து, கதையச் சொல்ல விட்டுக் கேளுங்க” என்றாராம் கி.ரா. அப்படி மனிதர்களோடு நெருங்கிப் பழகி கழனியூரன் கதைகள் சேகரித்த சம்பவங்களையே தனித் தொகுப்பாக எழுதலாம்.

கரிசல் நிலம், செவக்காட்டு நிலம் முழுக்க அலைந்து கழனியூரன் திரட்டிக் கொண்டுவந்து குவித்த கதைகளில், தான் ஏற்கெனவே பதிவுசெய்தவற்றை, அரிசியில் கல் பிறக்குவதுபோலப் பிறக்கி எடுத்துவிட்டு, மற்றவற்றைச் சேர்த்துப் புத்தகமாக்கினார் கி.ரா. அப்படித் தொகுக்கும் ஒவ்வொரு முறையும் தவறாமல் கழனியூரன் பெயரையும் சேர்த்துப் புத்தகத்தில் இடம்பெறச் செய்திருந்தார்.

ஒரு சீடனுக்குக் கிடைக்கிற உச்சபட்ச மரியாதையை கி.ரா. எப்போதும் கழனியூரனுக்குத் தந்தார். அவர்கள் இரண்டு பேருக்குமிடையே வெளியில் சொல்லாத ஒரு தந்தை மகன் உறவு நிலை கொண்டிருந்தது. கிராம மக்களின் பேச்சில் நடமாடும் வசவுச் சொற்களை எல்லாம் விசாரித்து அவற்றில் இருக்கும் பூர்வாங்க மனித உணர்வுகளைப் படிக்க வேண்டும் என்று தனது 92-வது வயதில் யாருக்காவது ஆசை வருமா? கி.ராவுக்கு வந்தது. உடனே வேட்டியை மடித்துக்கொண்டு களத்தில் இறங்கினார் கழனியூரன். இத்தனைக்கும் அப்போதுதான் அவர் புற்றுநோய் பாதிப்பை உணரத் தொடங்கியிருந்தார்.

கழனியூரன் நூல்களில் சில...

தாய்வேர் - பூங்கொடி பதிப்பகம்.

கதைசொல்லியின் கதை - தாமரைச்செல்வி பதிப்பகம்.

நெல்லை நாடோடிக் கதைகள் - மித்ரா பதிப்பகம்.

மண் மணக்கும் மனுஷங்க - பூங்கொடி பதிப்பகம்.

நாட்டுப்புற நீதிக் கதைகள் - காவ்யா பதிப்பகம்.

பன்னாட்டுச் சிறுவர் நாடோடிக் கதைகள் - பூங்கொடி பதிப்பகம்.

செவக்காட்டு மக்கள் கதைகள் - சந்தியா பதிப்பகம்.

தாத்தா பாட்டி சொன்ன கதைகள் - பாரதி புத்தகாலயம்.

குறுஞ்சாமிகளின் கதைகள் - உயிர்மை பதிப்பகம்.

வாய்மொழி வரலாறு - சந்தியா பதிப்பகம்.

நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம் -

(தலைமைத் தொகுப்பாளர் கி. ராஜநாராயணன்,

சண்முகசுந்தரம், கழனியூரன், பாரததேவி) - சாகித்ய அகாடமி.

நெருப்பில் விழுந்த விதைகள் (கவிதைகள்) - அகரம் பதிப்பகம்.

மண்ணின் கதைகள் மக்களின் கதைகள் - உயிர்மை பதிப்பகம்

நாட்டுபுற வழக்காறுகள் - தாமரைச்செல்வி பதிப்பகம்.

நாட்டுபுற நம்பிக்கைகள் - அகரம் பதிப்பகம்.

அன்புள்ள கி.ரா (கடித இலக்கியம்) - உயிர்மை பதிப்பகம்.

ரஷ்ய நாட்டு நாடோடிக் கதைகள் - பூங்கொடி பதிப்பகம்.

ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, கழனியூரனின் உடல்நலம் மிகவும் மோசமடைந்தது. சிகிச்சைக்காக மகள் வீட்டிலும், ஓய்வுக்காகச் சொந்த ஊரிலுமாக நாட்களைப் பங்குபோட்டுக்கொண்டார். தனக்கு மிச்சமாகக் கிடைத்த ஒவ்வொரு நிமிடத்தையும் அதுவரையிலான தன் நாட்டுப்புறச் சேமிப்புகளை ஆவணப்படுத்தும் பணிகளுக்காகக் கவனத்தோடு செலவிடத் தொடங்கினார். தன்னுடையவை மட்டுமல்லாமல் கி.ராவின் கதைகள், கடிதங்கள், கட்டுரைகள், முன்னுரைகள், கதைசொல்லி இதழ் வெளியீடுகள், கி.ரா. பிற சஞ்சிகைகளில் எழுதியவை, வல்லிக்கண்ணன் -திகசி கடிதங்கள் என்று யாவற்றையும் தொகுத்துப் பத்திரப்படுத்தி நூலாக்கினார்.

கி.ரா.வை ஆசிரியராகக் கொண்டு, கே.எஸ். ராதாகிருஷ்ணன் பதிப்பித்து வெளியிடும் ‘கதைசொல்லி’ இதழில் கடைசிவரைக்கும் பொறுப்பாசிரியர் பணிகளை கழனியூரன் கவனித்தார். கி.ரா.வின் வாழ்க்கையை, திரும்ப அவருக்கே படம்போட்டுக் காட்டுவதுபோல, அவருடனான தன் அனுபவங்களைத் தொடராக எழுதிக்கொண்டிருந்தார் கழனியூரன்.

இந்த ஆண்டு 95-வயதைப் பூர்த்திசெய்யும் தன் குருநாதர் கி.ரா.வுக்குக் காணிக்கையாக, அவர் பற்றிய பிற படைப்பாளர்களின் எழுத்துகள் அடங்கிய தொகுதி ஒன்றை நூலாக ஆவணப்படுத்தும் பணியை கழனியூரன் என்னிடம் ஒப்புவித்திருந்தார். நூல் வேலைகள் முடிவடையும் நிலையில் புற்றுநோய் அவரை முற்றிலுமாகப் பறித்துக்கொண்டது. கழனியூரன் தன் குருவுக்கான காணிக்கையைக் கையளிக்கும் முன்பாகக் காலமாகிவிட்டார்.

கி.ரா. சொல்லுவார், “ராமகிருஷ்ண பரமஹம்சர் தன் வாழ்நாளில் பேசினதை, எழுதினதையெல்லாம் பத்திரப்படுத்திக்கொடுத்த மகேந்திரநாத் மாதிரி, ரசிகமணி டி.கே.சி.க்கும் ஒரு ‘சுடுகுஞ்சு’ கிடைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்” என்று. டி.கே.சி.க்கு அப்படி ஓர் ஆள் வாய்த்தாரோ இல்லையோ! கி.ரா.வின் ‘சுடுகுஞ்சாக’ வாழ்ந்தவர் கழனியூரன்.

கரிசல் மண்ணில் கி.ரா.வின் பங்களிப்பு பூரண நிலவென்றால் அதே வானத்தின் விடிவெள்ளியாக மின்னியவர் கழனியூரன். ஒரு முறை அவரிடம் ‘உங்கள் காலம்போல எங்களுடைய காலம் அவ்வளவு நல்ல விஷயங்களைக் கொண்டிருக்கவில்லையே?” என்றேன்.

அதற்கு அவர் சொன்ன பதில்: “எங்க தாத்தா வாழ்ந்த காலத்தை நான் பார்க்கும்போது அது பிரம்மாண்டமா இருந்துச்சு. அதிலே அவ்வளவு விஷயங்கள் இருந்துச்சு. என் காலத்து வாழ்க்கை என் பேரனுக்கு வித்தியாசமா இருக்கும். அவன் பேரன் வரும்போது, இங்கே இன்னும் நிறைய மாறியிருக்கலாம். நவீனத்துக்கான மாற்றங்கள் வந்துகிட்டேதான் இருக்கும். அவரவர் காலத்தோட கண்ணாடியை அணிஞ்சுக்கிட்டே இருக்கணும். நம் பார்வைகள் நாளுக்கு நாள் மாறும்; உடலும் உயிரும் வந்து வந்து போய்க்கிட்டே இருப்பது மாதிரி. ஆனா அதோட ஆன்மா அப்படியே இருக்கும். ஆன்மா அழியாது” என்றார். கழனியூரனின் ஆன்மா அவரது எழுத்து.

ஜீவா, எழுத்தாளர்,

தொடர்புக்கு: jeevapataippagam@gmail.com

அஞ்சலி: கழனியூரன் - (1954 - 2017)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in