நூல் நோக்கு: எது உண்மையான கல்வி?

நூல் நோக்கு: எது உண்மையான கல்வி?
Updated on
1 min read

ந்தியாவில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் ஜே.கிருஷ்ணமூர்த்தி நிகழ்த்திய கலந்துரையாடல்களின் தொகுப்பான ‘திங்க் ஆஃப் தீஸ் திங்ஸ்’ நூலின் தமிழாக்கம்.

ஆசையை அறுப்பதும் தன்னை அறிவதும் இந்திய மெய்யியலில் அடிக்கடி உச்சரிக்கப்படும் வார்த்தைகள். ஆண்டாண்டு காலமாய் எல்லோரும் அதையே உபதேசித்துக்கொண்டிருக்கிறார்கள். எனினும் அது இயலக்கூடியதாய் இல்லை. இலக்கை மட்டும் போதிக்காமல் அதை எட்டிப்பிடிப்பதற்குத் தடையாய் நிற்பதைச் சுட்டிக்காட்டவும் செய்கிறார் ஜே.கே. ஆசையை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல், வெறுமனே அதைத் துறப்பதற்கு மட்டும் முயற்சி செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்று கூறுகிறார் அவர். தன்னையறிதல் மிகவும் கடினமானது, வேறு நிலையை எட்டிவிட வேண்டும் என்பது போன்ற ஆசைகளிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக இருந்தால் மட்டுமே, தன்னை அறிய முடியும் என்பது அவரது முடிவு. அவரது வார்த்தைகளில் சுதந்திரம் என்பது, முன்தீர்மானங்களிலிருந்து விடுபட்டு, கணத்துக்கு கணம் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும் நுண்ணறிவு.

மாணவர்கள், ஆசிரியர்களுடனான உரையாடல்கள் என்பதால் கல்வி என்பது இந்த உரைகளின் மையப் பொருளாக அமைந்திருக்கிறது. கல்வி என்று இப்போது அழைக்கப்படுவது கல்வியே அல்ல. நன்கு வாழ்வதற்கு மாணவர்களைப் பயிற்றுவிக்காத கல்வி, கல்வியே அல்ல, அத்தகைய கல்விக்கு அர்த்தமேதுமில்லை என்கிறார் ஜே.கே. எதைச் சிந்திப்பது என்பதைக் கற்றுக்கொள்வது கல்வியாகாது, உண்மையான கல்வி என்பது எப்படிச் சிந்திப்பது என்பதைக் கற்றலாகும் என்பதே அவர் வலியுறுத்தும் கல்வியின் இலக்கணம். மெய்யியல் நாட்டம் கொண்டவர்களுக்கு மட்டுமல்லாது கல்வியாளர்களுக்கும் வழிகாட்டும் நூல் இது.

- புவி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in