Last Updated : 27 Jul, 2017 11:51 AM

 

Published : 27 Jul 2017 11:51 AM
Last Updated : 27 Jul 2017 11:51 AM

பெண் கதை எனும் பெருங்கதை 04: கூனிப் பாட்டி

அந்தக் காலத்தில் அனைத்து அரிசிகளுமே உரலில் போட்டுக் குத்தப்பட்டதால், மாவுகளுக்குப் பஞ்சமே இல்லை.

எல்லாத்துக்கும் சிகரம், வாயில் அதக்கிக் கொண்டு எச்சில் ஊற ஊறவாயிலே வைத்து ருசித்து உண்ணுவதே சிறப்பான அமிர்த உண்டி!

பெரிய, வெங்கல வெத்திலைச் செல்லத்தை கிட்டத்தில் - மடியில் - அணைத்து வைத்துக் கொண்டு, பாக்கு இடிக்கும் உரலும் உளிஉலக்கையும் சாதா நாட்களை விட புலவு உண்ணும் நாட்களில் அதிகம்தேடும்.

பெரிய கொட்டைப் பாக்குகளைக் கூட மூணு போட்டு இடிக்கச்சொல்லுவார்கள். வெத்திலை போடாதவரும் போடச் சொல்லி நாக்கு கேட்கும். இடிக்கும் வெத்திலைக்கே ஒரு தனி ருசிதான்!

தேவலோகத்தில் இருந்து ஊர்வசி ஒளித்து வைத்துக்கொண்டு வந்த வெத்திலையில்லையா? அதுக்குன்னு ஒரு வாசம் இருக்கத் தானேசெய்யும்!

இப்பவும் தெரியுதே அவளுடைய அந்த வியர்வை மணம்; அடடா!

அந்தக் கதையை மீண்டும் ஒரு முறை பாட்டிமார் சொல்லி மகிழ்வார்கள்.

பாட்டிமார்கள் இப்படிக் குதூகலித்துக் கொண்டிருந்தபோது,

“பாஸ், பாஸ்”

“சங்கு பாஸ், பாஸ்” என்று கூப்பிட்டுக் கொண்டே அந்த வீட்டுக்குள் ஒரு வயசான முதுகு வளைந்த கூனிப் பாட்டி வந்தாள்.

அந்தப் பாட்டியைக் கண்டதும் இந்தப் பாட்டிமார்களுக்கு அதிகப்படியான சந்தோசம் வந்துவிட்டது.

அவள் பிறவிக் கூனி இல்லை; ஒரு காலத்தில் உயரமாக, நிமிர்ந்து நடந்தவள்தான். அப்படி உயர்ந்து இருப்பவர்கள் வயது முற்றும்போதுஇப்படி வளைந்து கூனியாகி விடுகிறார்கள்.

கூனியாகியப் பிறகு, கம்பு ஊன்றி நடக்கப் பிரியப்படாதவர்கள் கைகளைத் தொங்கப் போட்டுக் கொண்டு - நடக்க மாச்சப்பட்டுக் கொண்டு – பின்புறமாக கைகோர்த்து வைத்துக் கொண்டே நடந்து வருவதுபோல இந்தக் கூனிப் பாட்டி வந்தாள்.

இந்தக் கூனிப் பாட்டியை வீட்டை விட்டு வெளியே பார்ப்பதே அபூர்வம். அவளுக்குத் துணையாக யாரும் கூட வரவில்லை.

அவளுக்குத் துணையாக யாரும் இல்லை. ‘‘தனியாகத்தான் இருக்கியா?’’ என்று கேட்டால் ‘‘ஆமா…’’ என்பதுபோல் குறுஞ்சிரிப்புக் காட்டுவாள்.

‘‘பயமா இல்லையா’’ என்று கேட்டாலும் அதே சிரிப்புத்தான் பதில்.

‘‘பயமா இல்லீயா..?’’ என்று கேட்பவர்கள் அநேகமாக குழந்தை களாகத்தான் இருப்பார்கள்.

குழந்தைகளுக்குக் கூனிப் பாட்டியைக் கண்டவுடன் ஏதோ ஒரு ஒட்டுதல் வந்துவிடுகிறது. அது கதை சொல்லும் பாட்டியா ‘அம்புலி மாமா’வில் உள்ள பாட்டியா எனத் தெரியவில்லை.

குழந்தைகள், மடியில் வறுத்த காணப் பயறும் நனையப் போட்ட குதிரைவாலி அரிசியும் கொண்டுவருவார்கள் இந்தப் பாட்டிக்கு.

இந்த வீட்டில் உள்ள பாட்டிகள் இந்த கூனிப் பாட்டியைக் கண்டதும் ஆரவாரக் குரலால் வரவேற்று, “ஆரைத் தேடுரே..?” என்று கேட்டார்கள்.

“எங்க சங்குபாஸ் பூனையைக் காணோம்?” என்றாள்.

நாயைக் கூப்பிட “தோத்… தோ” என்றும் பூனையைக் கூப்பிட ‘வாஸ்வாஸ்’ என்றும் வழக்கத்தில் உள்ளது.

‘‘இது என்ன ‘சங்கு பாஸ்’ புதுசாஇருக்கே?’’ என்று கேட்டார்கள்.

‘‘பூனை போனா அதுவா வராதா? தேடிக் கண்டுபிடிக்க அது என்ன புனுகுப் பூனையா?’’ என்று கேட்டாள் ஒரு பாட்டி.

“புனுகுப் பூனையை எல்லாம் வளக்க நமக்குத் தம்முசம் (தைரியம்) காணுமா? இது சாதாப் பூனைதாம். இதோட நெறம் சங்கு நெறம். அதாலெ ‘சங்குபாஸ்’ ஆயிட்டது.

26chmbn _ manohar art 1

‘‘பெண் பூனையா? கெண்டுப் (வெருகுப்) பூனையா?’’ என்று கேட்டாள்இன்னொரு பாட்டி.

“அதெல்லாம் கிடையாது பெட்டைதான்” என்றாள் கூனிப் பாட்டி.

“அப்படியா! அப்பொ அது மாப்பிள்ளை தேடிப் போயிருக்கும். வரும்போது சினையாக வரும்” என்று ஒரு பாட்டி சொன்னதும், அங்கே சிரிப்பலை பரவியது.

“இதுக மாப்பிள்ளைத் தேடிப் போறதில்லையே; இங்கெ இருந்துக்கிட்டேஒரு சத்தம் கொடுத்தாப் போதுமே; காட்டுலெ இருக்க வெருகுப் பூனை (கெண்டு) எல்லாம் ஓடி வருமே இங்கெ.”

‘‘பிறகு ஒரே ரகளைதாம்பொ…’’ என்று சொல்லி காதைப் பொத்திக் காண்பித்தாள் அந்தப் பாட்டி.

மனிதர் வளர்க்கும் உசுப்பிராணிகளில் பூனை மட்டும் எப்போதும் வீட்டில்ஒரு காலும் காட்டில் ஒரு காலுமாக விளங்குகிறது!

பெண் குட்டி மட்டும் வீட்டில் தங்கிக் கொள்கிறது; ஆண் குட்டி - கெண்டு - ஆனவுடன் காட்டைப் பார்த்து ஓடிவிடுகிறது. இது நம்பிக்கைதானா தெரியவில்லை.

கூனிப் பாட்டியை எல்லோரும் இன்னைக்கு இங்கே சாப்பிடு என்று வற்புறுத்தியும், சரி என்றாளே தவிர சாப்பிடவில்லை.

இவள் எப்பவும் அப்படித்தான்; மற்றவர் வீட்டில் கை நனைப்பதில்லை.

‘‘மகா பிடிவாதக்காரி’’ என்றாள் பெரிய பாட்டி. கரிசக் காட்டின் ‘கீகாடு’ என்கிற கிழக்குப் பக்கம் சமுத்திர அலைகளின்கோபமான ஓசை, கவனித்தால் காதில் விழும்.

‘கிழவனானாலும் கிழக்கத்தியான்…’ என்பது சொலவம். பலம் பொருந்திய மக்கள் அந்த மண்ணை நெய்க் கரிசல் என்பார்கள். நெய் உறைந்துவிட்டால் பார்க்க எப்படி இருக்குமோ அப்படித் தோற்றம் தரும் அந்த நெய்க் கரிசல்.

ஈர மண்ணை அள்ளி உடம்பு தேய்த்துக் குளிக்கலாம்; அப்படி ஒரு நுண்ணம்.

அப்படியான மண்ணில் பிறந்து வளர்ந்து வந்தவள் கூனம்மாள். கூன்விழுந்ததால் கூனிப் பாட்டி ஆகிவிட்டாள்.

ஒரு காலத்தில் அவள் பிறந்த குடும்பமும் புகுந்த குடும்பமும் சீரும் சிறப்பும் கொண்டு ஓஹோ என்று வாழ்ந்த குடும்பங்கள். ‘காலக்கொடுமை’இங்கே இப்படி ஆகிவிட்டது.

“சிலுவாருடி ஊரில் இருந்து அவள் இங்கே வந்து இறங்கி பல்லக்கில் கால்வைத்து ஏறி ஊராங்கி (ஊர்கோலம்) வந்த காட்சி, பல்லக்கில் அமர்ந்துஇருந்த இருப்பு இவை பற்றியெல்லாம் நீண்ட நாட்கள் பேசி மகிழ்ந்தார்கள் இந்த கிராமத்து மக்கள்.

- கதை வரும்
ஓவியங்கள்: மனோகர்

ALL.1.Relax_01IMG3 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x