

விடுதலைக்குப் பிந்தைய தமிழக வரலாற்றின் கறைபடிந்த பக்கங்களுள் ஒன்று முதுகுளத்தூர் கலவரம். இந்திய விடுதலைக்குப் பின்பு ஆதிக்க சாதிகளின் பிடியிலிருந்து விடுபட எண்ணி எழுப்பப்பட்ட குரல்கள் பலவும் நெரிக்கப்பட்டன. அவற்றில் அழியாத வடுவாய், இன்றைய தமிழகத்தின் சாதிய அரசியலின் தோற்றுவாயாக விளங்குவது 1957-ல் நடைபெற்ற முதுகுளத்தூர் கலவரம். இதில் சம்பந்தப்பட்ட ஒரு பிரிவினர் மாநில அரசின் அடக்குமுறையின் விளைவு எனவும், எதிர்ப்பிரிவினர் ஆதிக்கசாதியின் வன்முறையை எதிர்த்து எழுந்த முதல் குரல் எனவும் இதை விவரிக்கின்றனர்.
தமிழகத்தின் அரசியல் போக்கை மாற்றிய இந்த நிகழ்வின் பின்னணியை விரிவாக விவரிக்கும் வரலாற்றுப் பேராசிரியர் கே.ஏ. மணிக்குமார், இன்றைய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆழமாக வேரூன்றியிருக்கும் சாதிய ஆணவத்தின் தோற்றுவாயாக இந்த நிகழ்வு அமைகிறது என்பதைத் தெள்ளிய ஆவண ஆதாரங்களுடன் நிலைநிறுத்தியுள்ளார்.
- வீ. பா. கணேசன்