

மூத்தோர் வணக்கம் தமிழர்கள் போற்றிய ஒரு வழக்கமாகும். சங்க கால சமய வரலாற்றில் மூத்தோர் வணக்கம் தெய்வ வழிபாடாகச் சிறப்பிக்கப்பட்டாலும் சில விநோத பழக்கங்களும் அம்மக்களால் பின்பற்றப்பட்டு வந்தன. அவற்றில் ஒன்றுதான் முதுமக்கள் தாழி என்னும் சவ அடக்க முறையாகும்.
முதுமக்கள் தாழிக்கு ஈமப்பேழை, மதமதக்கா பானை, ஈமத்தாழி என்றெல்லாம் வேறு பெயர்கள் உண்டு. முதுமக்கள் தாழி அரை அடி முதல் ஏழு அடி வரையிலான பல்வேறு அளவுகளில் தமிழகத்தில் கண்டெடுக் கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆற்றுச் சமவெளிப் பகுதிகளில் இம்முறை பரவலாகப் பின்பற்றப்பட்டு வந்ததைத் தொல்லியல் ஆய்வுகள் உணர்த்துகின்றன.
முதுமக்கள் தாழியினுள் ஒரே நபரின் எலும்புக்கூடுகள் மட்டும் காணப்படுவதில்லை, ஒரே நேரத்தில் இறந்த நபர்களின் எலும்புக்கூடுகள்கூட ஒன்றாகப் புதைக்கப்பட்டிருக்கின்றன. கொடிய நோய்களில், குறைமாதத்தில் இறந்த குழந்தைகளும் தொட்டில்பேழை எனப்பட்ட தாழியில் இட்டுப் புதைக்கப்பட்டனர்.
தொல்லியல் சான்றுகள்
தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், பூம்புகார், கொற்கை, கொடுமணல், அழகன்குளம் , அரிக்கமேடு, மாங்குடி (சங்கரன்கோவில் தாலுகா), பல்லாவரம், திருக்கழுகுன்றம் மற்றும் கர்நாடகாவின் ஜடினகள்ளி, ஆந்திராவில் இருளபாண்டா, கவல குண்டா போன்றவை முதுமக்கள் தாழி முறை சிறந்திருந்த இடங் களாகத் தொல்லியல் துறை ஆய்வுகளால் கண்டறியப்பட்டுள்ளன.
ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழிகள் சிலவற்றில் திரிசூலம் போன்ற இரும்புக் கருவிகளும் தொல்லியல் அகழாய்வின்போது கண்டறியப்பட்டன. திரிசூலம் என்பது பண்டைய தொடக்க கால உழவுக் கருவி ஆகும். வேட்டைச் சமூகத்திலிருந்து வேளாண் சமூகத்துக்குத் தமிழர்கள் மாறத்தலைப் பட்டபோது உழவுக் கருவியான சூலம் ஆயுத மாக்கப்பட்டது. வேளாண்மை செய்யும் பணியைப் பெண்கள்தான் ஏற்றிருந்தனர்.
அவர்களே வேளாண்மைக்குப் பயன்படுத்தும் நோக்கில் தரையை உழுவதற்கு வசதியாகத் திரிசூலம் போன்ற கொழுவை வைத்திருந்தனர். பின்னர், பெண் தெய்வங்களுக்கு உரிய ஆயுதமானது. பெண் தெய்வங்களிடம் இருந்து ஆண் கடவுளர்கள் காலப்போக்கில் சூலத்தைப் பெற்றுக் கொண்டனர். உரிமைகள் தாய்வழிச் சமூகத்திடம் இருந்து தந்தை வழிச் சமூகத்துக்கு மாற்றப்பட்டதைக் குறிக்கிறது.
தாழியில் புகுந்து தவம்
ஆதிச்சநல்லூரைப் பற்றிக் குறிப்பிட வேண்டிய ஒரு செய்தி, இங்கு சில பெரிய தாழிகளில் முழு எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளதுதான். இவை ஆசீவக சமயத்தவருக்கு உரியது என கருத வாய்ப்புள்ளது. எவ்வாறெனில் ஆசீவக சமய துறவிகளிடம் வாழ்வின் இறுதி நாட்களில் தாழியில் புகுந்து தவம் மேற்கொண்டு உயிர் துறக்கும் ஒரு விநோத வழக்கம் இருந்தது. ஆசீவகம் என்பது மகாவீரர், புத்தரின் சம காலத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் மற்கலி கோசலர் என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு சமயமாகும். லோகாயதம் இவர்களது கொள்கையாகும்.
உடல் தளர்ந்தும், நடமாட சக்தியற்றும் உயிர் துறவாமலிருக்கும் முதியவர்களும் உயிருடன் புதைக்கப்பட்டனர். சில சந்தர்ப்பங்களில் கொடிய நோயால் மரணம் அடைந்தவர்களும் பானையில் இட்டு உயிருடன் புதைக்கப்பட்டனர். வயதான முதியோர்களும் நடமாட இயலாதவர்களும் புனித நீராட்டலுக்குப் பின்னர் அவர்கள் பயன்படுத்திய பொருட்களுடன் உயிருடன் கருணைக்கொலை செய்யப்பெற்றதைச் சோழர் இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.
பவானி, நொய்யல் ஆற்றுப் பள்ளத்தாக்கு களில் கண்டெடுக்கப்பட்டுள்ள முதுமக்கள் தாழிகளில் நெற்றிக் காசாக வைக்கப்பட்ட ரோமானிய நாணயங்களும் கிடைத்துள்ளன. இறந்த பிறகு நெற்றியில் காசு வைப்பது அப்போதைய காலகட்டத்தில் தமிழர்கள் மட்டுமல்லாது கிரேக்கர்களாலும், ரோமானியர் களாலும் பின்பற்றப்பட்டு வந்தது. இதை திருநெல்வேலி சுற்று வட்டாரப் பகுதிகளில் வழிச்செலவுக் காசு என்றழைப்பர். பாலஸ்தீன முதுமக்கள் தாழிகளிலும் இத்தகைய நாணயங்கள் கிடைத்துள்ளது ஆச்சர்யம் தருவதாக உள்ளது.
மட்பாண்டம் என்பது தமிழர்களின் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகும். மனிதன் பிறப்பிலிருந்து, இறப்பு வரை கூடவே வருகிறது ஆற்றுச் சமவெளியில் மனிதன் வாழ ஆரம்பித்தது முதல் மனிதனுக்கும் மட்பாண்டத்துக்குமான உறவு தொடங்குகிறது. இறுதியில் சடலத்தை மயானத்தில் கிடத்தி காரியம் செய்வதோடு மட்பாண்டமும் மனிதனுடனான உறவை முறித்துக் கொள்கிறது.
- இல.கணபதி முருகன்,
வரலாற்றுப் பேராசிரியர், தொடர்புக்கு: testphd@gmail.com