Published : 23 Jul 2017 11:09 AM
Last Updated : 23 Jul 2017 11:09 AM

கவிஞன் பிரம்மனாக, ருத்ரனாக...

விதை, பொருட்களும் வெளியும் சம்பவங்களும் மனதில் நிகழ்த்தும் சலனங்களைத் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. தன் அகத்தை முடிந்த மட்டும் உரித்துக் காட்டிவிடும் முயற்சியாகவே ஒரு வகையில் கவிதைகள் அமைந்துவிடுகின்றன. ஆகவே, கவிதைகளை ரசனை சார்ந்து விமர்சிப்பதே சரியாக இருக்கும். இதில் நான் அளவீடுகளாகக் கொள்வது கவிதை எந்த அளவு ஆழமான உணர்வுகளை எடுத்தாள்கிறது, வார்த்தைச் சிக்கனம், கூர்மையான வரிகள் போன்றவையே. ஒரு நெருங்கிய நண்பனைவிடக் கவிஞர் கவிதையில்தான் மேலதிக உண்மையோடு இருக்கிறார்.

கண்டராதித்தனின் கவிதைகள் மரபோடு ஆழ்ந்த தொடர்புடையவை. இவரது கவிதைகள் மரபிலிருந்து எழுந்து நவீன உலகோடு இயல்பாய்ப் பொருந்தி வெளிப்படுகின்றன. முதல் தொகுப்பு ‘கண்டராதித்தன் கவிதைகள்’ 2001-லும் இரண்டாவது தொகுப்பான ‘சீதமண்டலம்’ 2006-லும் மூன்றாவது தொகுப்பு ‘திருச்சாழல்’ 2015-லும் வெளியாயின.

முதல் தொகுப்பில் நெருப்பருவியாய்க் கொட்டியது இரண்டாவதில் அமைதி கொண்டு நீரோட்டம் தெரியாதவண்ணம் மெல்ல நகர்கிறது. மூன்றாவது தொகுப்பு குளிர்ந்து நெகிழ்ந்து காணப்படுகிறது. மூன்றிலும் பொது அம்சமாக காலப் பிரக்ஞை, சமூக ஒழுங்கு முன்னான மன்றாடல், அவமானம், கள்ளொழுக்கம் ஆகியவற்றைச் சொல்லலாம்.

அவரது கவிதைகளில் சங்கப் பாடல்களின் சாயை உண்டு. முதலாவது தொகுப்பில் நீள் கவிதைகளில்கூட காணப்படும் இறுக்கமும் செறிவும் பின்னதில் இல்லை; பேசுபொருள், உணர்வெழுச்சி, கச்சிதமான உயிர் ததும்பும் வார்த்தைகள் இவையும் மூன்றாவது தொகுப்பில் இல்லை. காதலும் காமமும் அதன்கண் நேர்ந்த பிரிவு, வலி, அவமானம், ஆற்றாமை இவையேதும் பிந்திய தொகுப்பில் இல்லை.

அதனாலேயே நடையில் ஒரு நெகிழ்வும் நிதானமும் ‘திருச்சாழல்’ தொகுப்பில் தெரிகிறது. இரண்டாவது தொகுப்பான ‘சீதமண்டல’த்தின் பேசுபொருள் காதலின் கொதிப்பிலிருந்து அமைதி கண்டிருந்தாலும், அந்தக் கவிதைகள் இறுக்கமான மொழியில் புனையப்பட்டுள்ளன.

முதல் தொகுப்பில் காதலைவிட பிரிவு அதிகம் பேசப்படுகிறது. ஆற்றாமையின் கதறல் வரிக்கு வரி குமிழ்குமிழாய் வெடிக்கிறது. அவரது ஈமத்தாழி என்ற கவிதை பிரசித்தம். திருமணமான காதலியின் பிரசவ தினம் குறித்த பத்தி இது:

‘… … உன் பனிக்குடமுடைந்து கமழ்ந்த மணம்

நெடுந்தொலைவு கடந்து என் நாசிமுட்டும்

...உன் தூக்கத்தின் ஆழத்திற்காக

பாழ்பட்ட யாழின் இசைக்கேட்டில்

பிசிறும் குரல்மீறி மென்படும்

என் கவிதைகளை குழைத்து

உயிரின் ஒரு இழையை இழுத்தபடி

நான் பாடிய பாடல்களின் கீதங்கள்…’

‘மழையரவும் கடேரிகன்றும்’ என்ற தலைப்பிலான கவிதையில் ஒருவரி, ‘நிலம் ஊறிய கார் நிசி’. வாசித்ததும் அப்படியே ஒருகணம் மனம் அசைவிழந்துவிட்டது. அந்தக் கருமையை நுகர முடியும்போல, நாவால் தொட்டெடுத்துவிடலாம்போல ஒரு நெருக்கம். இது ஒரு அசல் சங்கக் கவிதை வரி.

‘புதன் கிழமைகள்’ என்ற தலைப்பிலான கவிதை இப்படி ஆரம்பிக்கிறது. ‘எல்லா புதன்கிழமைகளைப் பற்றியும் பகுத்தறிய வாய்ப்புக்களைத் தருகின்றன புதன்கிழமைகள்’. ‘காலத்தை அணுகி’ என்ற கவிதை ஒருவித மயக்கத்தைத் தருகிறது. இது பேசுவது காலத்தைப் பற்றியா, இயலாமையையா என்றறிய முடியாத தோற்ற மயக்கத்தைக் கொண்டிருக்கிறது. கவிதையின் வரிகள் தமக்கான பிரத்யேக அர்த்தங்களைச் சொற்சேர்க்கைகளின் மூலம் உற்பத்தி செய்தபடி இருக்கின்றன. இப்படிச் செய்வதன் நோக்கம் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுவதற்கல்ல. நேரடியான மொழி கடந்து எழ முயலும் உணர்வின் வீச்சே அது.

அவமானங்களை, குற்றவுணர்வை மனித உறவுகளின் நேரெதிர் மோதல்களை, குற்றம் சாட்டப்பட்டு கூண்டில் நிற்பவனின் மனநிலையை அற்புதமாய் வரிகளில் எடுத்துவிடுகிறார் கண்டராதித்தன். இவரது பெரும்பாலான கவிதைகள் நீள் கவிதைகள்தான். நீள் கவிதைகளில் இத்தனை செறிவாய், ஆழமாய் உணர்வுகளை அடையாளம் சுட்டியிருப்பது அரிது. ‘சா.’ என்ற தலைப்பில் ஏழு நீள் கவிதைகள் உள்ளன. அதில் ஒரு பகுதி,

பிரபஞ்சத்தையே அயராத துளிகளால்

நனைக்கும் பிறப்புறுப்பின்

தாய் விழியும் சுழியும்

பகிர்ந்தவொரு சொல்

இந்தக் காற்று”

‘சுக்கிலச் சுருக்கு’ என்ற கவிதையில்

ஒரு பகுதி இது:

"அலகுகள் அலகுகளை விட்டொழிய

மொழியை மீட்க முயன்று கூவும்

ஓர் அலகற்ற பட்சி"

அலகு அத்தனை அழகாய் இருக்கிறது. அப்படியென்றால் அவை அழகாய்ப் பேசியிருக்கலாமே. ஏன் இப்படி மொழி மறந்ததுபோல புரியாமல் அரைகுறையாய்? அலகிலிருந்து அலகு பிரிந்து போய்விட்டதுபோல இருக்கிறது அது பேசும் மொழி. அலகு இல்லாததால் அதை திரும்ப மீட்க முயன்றுதான் அது ஓசை எழுப்புகிறதோ என்ற வியப்பு. இந்த வியப்புதான் அந்த வரிகள். கண்டராதித்தனிடம் நன்கு துவைத்து மடித்த துணியைப் போல் வரிகள் அத்தனை பாந்தமாய் சொல்லவந்ததை, அவரது பார்வைக் கோணத்தை வெளிப்படுத்துகின்றன. அழகாய்ச் செதுக்கிய ஒரு சிற்பத்தை எடுத்து ஒரு பெருஞ்சிற்பத்தோடு பொருத்திவிடுவது போன்றவை இந்த வரிகள்.

‘திருச்சாழல்’ என்பது மாணிக்கவாசகர் இயற்றியது. சாழல் என்பது பெண்களுக்கிடையிலான விளையாட்டு. ஒரு பெண் கேட்க இன்னொரு பெண் பதில் சொல்ல என்று இருக்கும். கண்டராதித்தனுடையது வேறு வகை திருச்சாழல்l.

அம்மா ஓடிப்போனதை

அறியும் வயதுள்ள பிள்ளைகள்

தின்ணையிலமர்ந்தபடி

ஆள்நடமாட்டமில்லாத

தெருவை வெறித்து

வேடிக்கை பார்க்கிறார்கள்.

மொத்தத்தில் பார்த்தால் ஒற்றைவரி. ஆனால் எப்படி நெஞ்சை உலுக்கிவிடுகிறது. திருச்சாழல் தொகுப்பின் ஆகச் சிறந்த கவிதையென்றால் ‘சாவைத் தள்ளும் சிறுமி’ என்று சொல்வேன். தாளும் நாளும் ஒப்புமைப்படுத்தப்பட்டு, காலம் பக்கங்களுக்கிடையில் பறக்கிறது. இந்தக் கவிதையில் கவிஞன் பிரம்மனாக, ருத்ரனாக அவதாரமெடுக்கிறான்.

மூன்றாவது தொகுப்பை வாசிக்கையில் அவர் கவிதையைத் தாண்டிக்கொண்டிருக்கிறார் என்ற உணர்வே ஏற்பட்டது. பெரும்பாலானவற்றில் சம்பவங்கள் விவரிக்கப்பட்டுக் கதைக்குக் களம் அமைக்கும் தோரணையிலேயே உள்ளன. கண்டராதித்தன் மிகச் சிறிய கூடாரத்துக்குள் அமர்ந்துகொண்டு அதிபிரகாசமான ஒளியை வைத்துக்கொள்கிறார். அந்தச் சிறிய கூடாரத்தை நாம் கண்டடைய வேண்டும். அதற்குள் எல்லோருக்குமான இடம் இருக்கவே செய்கிறது.

- பாலா கருப்பசாமி, இலக்கிய விமர்சகர்,

தொடர்புக்கு: balain501@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x