மாபெரும் கலைப் பயணி

மாபெரும் கலைப் பயணி
Updated on
2 min read

தனபால் கண்டெடுத்த அற்புதமான ஓவியர்களில் ஒருவர் வீரசந்தானம். ஆதிமூலமும் நானும்கூட தனபாலின் ஊக்குவிப்பால்தான் வளர்த்தெடுக்கப்பட்டோம். எழுபதுகளில் சென்னை ஓவியக் கல்லூரியில் படிப்பதற்காக வீரசந்தானம் வந்தார். அப்போதிருந்தே அவர் எனக்குப் பழக்கம். ஓவியக் கல்லூரியில், ஒரு மாணவர் வரையும் ஓவியம் மற்ற மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரின் காட்சியிலும் இருக்கும். எனவே, வளர்ந்துவரும் ஓவியரின் தனித்திறமைகளையும் ஆர்வத்தையும் முயற்சிகளையும் மற்ற ஓவியர்கள் அறிந்துகொள்ள முடியும். எனவே, அங்கு மூத்த மாணவர்கள், இளையவர்கள், ஆசிரியர்கள் என்ற பாகுபாடுகள் இருக்காது. அங்கு எல்லோரும் ஓவியர்கள்தான். அதனால் வீரசந்தானம் எனக்கு மூத்த மாணவராக இருந்தாலும் அவருக்கும் எனக்கும் நல்ல நட்பு இருந்தது.

தமிழில் கோட்டுச் சித்திரங்களுக்கு மிக நீண்ட மரபு இருக்கிறது. அது சமீப காலம் வரையில் தொடர்கிறது. இந்தியாவிலேயே தென்னாட்டில் குறிப்பாக சென்னை ஓவியக் கல்லூரிக்கு கோட்டுச் சித்திரங்களில் மிகப் பெரிய பங்கு இருக்கிறது. எழுபதுகளில் ஓவியக் கல்லூரியின் ஆசிரியர்களாக இருந்த மாபெரும் ஓவியர்கள் தனபால், சந்தானராஜ், அல்போன்ஸா ஆகியோர் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். அவர்களைத் தொடர்ந்து தக்ஷ்ணாமூர்த்தி, ஆர்.பி. பாஸ்கரன் ஆகியோர் ஓவியக் கல்லூரியில் கற்பிக்க ஆரம்பித்தார்கள். முந்தைய தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்குமான இணைப்புப் பாலமாக அவர்கள் விளங்கினார்கள். கோட்டுச் சித்திரங்களில் ஆதிமூலம், வீரசந்தானம், சந்ரு, நான் முக்கியப் பங்காற்றியிருக்கிறோம். வீரசந்தானம் ஓவியங்களில் உள்ள தனித்துவம் நமது கோயில்களில் உள்ள சுவரோவியங்கள், மரபார்ந்த வண்ணங்கள் ஆகியவற்றின் தாக்கம் அதிகம்.

அதே காலகட்டத்தில் ஆதிமூலம் நெசவாளர் பணி மையத்தில் பணியில் சேர்ந்தார். அவரையடுத்து வீர.சந்தானமும், நானும் அங்கு பணிக்குச் சென்றோம். கைத்தறியின் வடிவமைப்பை மேம்படுத்தும் பணியில் வீரசந்தானம் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். கைத்தறி நெசவில் உள்ள கலாச்சார அடையாளங்களைக் காப்பாற்றும் நோக்கத்தில்தான் அந்த ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டது. அங்கு பணிபுரிந்த அனுபவத்தில் அவர் கற்றுக்கொண்ட கலாச்சார வெளிப்பாடுகள், வண்ணப் பயன்பாடுகள் அவரது ஓவியங்களில் அதிகமாக இடம்பெற்றன.

ஓவியக் கலையில் இருந்த ஈடுபாட்டைப் போலவே தமிழ்த் தேசியம், பெரியாரியம் ஆகியவற்றிலும் அவருக்கு ஈடுபாடு இருந்தது. தமிழ்த் தேசிய இயக்கப் பணிகளில் அப்போதே வீரசந்தானம் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டார். தொடர்ந்து, மார்க்ஸியம் சார்ந்த தோழர்களோடும் சிறுபத்திரிகை இயக்கத்தோடும் இணைந்து பங்காற்றிவந்திருக்கிறார். இலங்கையில் போராட்ட மனநிலையுடன் இயங்கிய பல்வேறு குழுக்களுடன் ஓவியப் பங்களிப்பைச் செய்துள்ளார். வைகறை, கி.பி.அரவிந்தன் ஆகியோர் நடத்திய ‘பாலம்’ இதழுக்கு வீரசந்தானம் தொடர்ந்து ஓவியங்கள் வரைந்தார். தற்போது வெளியாகும் ‘காக்கைச் சிறகினிலே’ வரைக்கும் அவரது சிற்றிதழ் பங்களிப்பு தொடர்ந்தது. தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் அவரது ஓவியத்தின் அடிப்படையில்தான் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒரு பெரிய நட்பு வட்டத்தோடு தொடர்ந்து பொதுவெளியில் இயங்கிய மிகச்சில ஓவியர்களில் அவரும் ஒருவர். சென்னை ஓவியக் கல்லூரி, நெசவாளர் பணி மையம், சமூக அக்கறை சார்ந்த அமைப்புகளின் தொடர்புகள் என கிட்டத்தட்ட நாற்பதாண்டு காலமாக இருவரும் இணைந்து பயணித்திருக்கிறோம். அவர் மூலமாகத்தான் இலங்கையில் இயங்கிய பல்வேறு அரசியல் அமைப்புகளுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. ஈழ ஆதரவு தொடர்பாக எந்த சமரசத்துக்கும் அவர் ஆளானதில்லை. ஏறக்குறைய நாற்பதாண்டு காலம் என்னுடன் சேர்ந்து இயங்கிய சக பயணியை இழந்து நிற்கிறேன்.

- ட்ராட்ஸ்கி மருது, ஓவியர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in