

ஸ்ரீராமாநுஜர் பிறந்து 1,000 வருடங்களாகின்றன. அந்த ஆன்மிகப் புரட்சிக்காரரைப் பற்றி மிக எளிமையாக 1964-ல் தமிழுக்குச் சொன்னவர் பி.ஸ்ரீ எனும் பி. ஸ்ரீநிவாச்சாரி. இவர் எழுதிய ‘ஸ்ரீ ராமாநுஜர்’ புத்தகத்துக்கு 1965-ல் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது!
ஆனந்த விகடனை வாங்கிய சிறிது காலத்திலேயே எஸ்.எஸ். வாசன் கண் டெடுத்த இலக்கிய பொக்கிஷம் பி.ஸ்ரீ. ஆனந்த விகடனில் ‘சித்திர ராமாயணம்’, ‘கிளைவ் முதல் ராஜாஜி வரை’, ‘தென்னாட்டுத் திருக்கோயில்கள்’, ‘துள்ளித் திரிகின்ற காலத்திலே’, ‘சிவநேசச் செல்வர்கள்’ என்றெல்லாம் பல கட்டுரைகளையும் தொடர்களையும் அவர் எழுதினார்.
பி.ஸ்ரீ. பிறந்த ஊர் தென்திருப்பேரை. நெல்லை மாவட்டத்தின் தாமிரபரணி கரையிலிருக்கும் நவதிருப்பதிகளில் ஒன்று. ‘அகத்தியர் முதல் அனந்தகிருஷ்ணய்யங்கார் வரையில் தமிழ் தாகத்தைத் தீர்த்தது தாமிரபரணிக் கரைதான்’ என்பார் தமிழ் தாத்தா உ.வே. சாமிநாதய்யர். பி.ஸ்ரீ, உ.வே.சா.வுடன் அறிமுகம் ஆனார். தமிழ்த் தாத்தாவின் பழக்கத்தால் அவருக்குத் தமிழ் ஆர்வம் வர ஆரம்பித்தது. சின்ன வயதிலேயே தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் வல்லவராக இருந்தவர் பி.ஸ்ரீ. இவருக்கு தேசிய ஞானத்தைப் பக்குவமாகவும் இனிமையாகவும் கலந்து ஊட்டியது பாரதியாரின் பத்திரிகையும் எழுத்துக்களுமே! நாளடைவில் பாரதியாரின் பாடல்கள் அனைத்துமே பி.ஸ்ரீ.க்கு மனப்பாடமாகின.
அப்போது பி.ஸ்ரீ. படித்த கல்லூரியின் முதல்வர் விங்க்ளர் துரை. இவர் ஐரோப்பியர். மதபக்தி என்பது மூடநம்பிக்கை என்கிற கொள்கையுடைவர். கிறித்துவ மதத்தைக் கண்டித்ததோடு, சுயமரியாதைக் கொள்கையைக் காரசாரமாக உபதேசித்தார் விங்க்ளர் துரை. அவரது உபதேசங்கள் பி.ஸ்ரீ.யின் மனதில் ஆழமாகப் பதிந்தன. பி.ஸ்ரீ.க்கு கடவுள் நம்பிக்கை இருந்தது. ஆனால், மூடநம்பிக்கைகளை அறவே வெறுத்தார். கோயிலுக்குச் செல்வது, பூஜை, மதச் சடங்குகள் எதிலும் இவருக்கு வாழ்நாள் முழுவதும் நம்பிக்கை இல்லாமலே இருந்தது. நெஞ்சமே கோயில், நினைவே சுகந்தம், தாம் படிக்கும் கம்பராமாயணமே தாரக மந்திரம் என்று இருந்தது. விங்க்ளர் துரைக்குப் பிறகு கல்லூரியில் ஹெர்பர்ட் சாம்பியன் முதல்வராக வந்தார். இவர்தான் பின்னாளில் பி.ஸ்ரீ.க்கு சப்-இன்ஸ்பெக்டர் வேலை வாங்கிக்கொடுத்தார். போலீஸ் இலாக்காவில் இவருக்கு மேல் அதிகாரி ராபர்ட்சன். அவர் பி.ஸ்ரீ.யிடம் தமிழ் கற்றுக்கொண்டார்.
சப்-இன்ஸ்பெக்டராக தஞ்சாவூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியின் ஆலத்தம்பாடியில் பி.ஸ்ரீ. வேலை பார்த்தார். நடுவே அவரை புதுச்சேரிக்கு அனுப்புவார்கள். காரணம், அப்போது அரவிந்தர் அங்கே இருந்தார். `அவரைக் கண்காணித்துக் கைது செய்ய வேண்டும்’ இதுதான் காவல்துறையின் கட்டளை. இது நடக்கிற காரியமில்லை. காரணம், பி.ஸ்ரீ., அரவிந்தரின் பக்தர், சிஷ்யர்! அவரை எப்படிக் கைதுசெய்ய முடியும்? இதனால் போலீஸ் உத்தியோகம் பிடிக்காமல் போனது. மூன்றரை வருட போலீஸ் உத்தியோகத்துக்கு முழுக்கு போட்டார். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
1908-ம் ஆண்டு வ.உ.சி.க்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அவரது ஆயுள் தண்டனை பிறகு குறைக்கப்பட்டது. சிறையிலிருந்து விடுதலை அடைந்த பின் வ.உ.சி. வறுமையில் வாடினார். அவரது முயற்சிகளுக்கு பெரிய ஆதரவு கிட்டவில்லை. அப்போது கோவில்பட்டிக்கு வந்து மீண்டும் தன் வழக்கறிஞர் தொழிலை நடத்த ஆரம்பித்தார் வ.உ.சி. அவரைக் கோவில்பட்டியில் சந்திக்கப் போனார் பி.ஸ்ரீ. தன்னுடைய அரசியல் குரு, சிறிதும் கூச்சமின்றித் தன்னை ஒரு தோழனாக கருதிப் பழகியதில் நெகிழ்ந்துபோனார். பிறகு அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள். அந்தச் சமயத்தில் பி.ஸ்ரீ., கோவில்பட்டியில் கம்பராமாயணப் பிரசங்கங்கள் செய்துகொண்டிருந்தார். பல நாட்கள் முதல் வரிசையில் அமர்ந்திருப்பார் வ.உ.சி. தமிழ் ஆராய்ச்சிப் பேரறிஞரான வையாபுரிப் பிள்ளை திருவனந்தபுரத்தில் வழக்கறிஞராகத் தொழில் செய்துவந்தார். அப்போது திருவனந்தபுரத்தில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையும் இருந்தார். இவர்கள் ‘சைவ பிரகாச சபை’ அமைத்துத் தமிழ், சைவத்தொண்டு ஆற்றிவந்தார்கள்.
அப்படி ஒரு கூட்டத்தில், வருபவர்களை வரவேற்க வாசலில் நின்றுகொண்டிருந்தார் வையாபுரிப் பிள்ளை. அப்போது மீசையுடனும், கம்பீரமான தோற்றத்துடனும் ஒருவர் வந்து தன்னை ‘சுப்ரமணிய பாரதி’ என்று அறிமுகப்படுத்திக்கொண்டார்.அந்தக் கூட்டத்தில் பி.ஸ்ரீ.யும் இருந்தார். அங்கேதான் பாரதியும் பி.ஸ்ரீ.யும் அறிமுகமானார்கள். 1980-ல் ஆனந்த விகடன் மலருக்கு பி.ஸ்ரீ. ஒரு பேட்டியளித்தார்.
அதில், “நானும் அவனும் ( பாரதியும்) நெருங்கிய நண்பர்கள். அவன் என்னைவிட ஐந்து வயது பெரியவன். பாரதியின் சில பாடல்கள் அவனுக்கே நினைவிருக்காது. நான் அத்தனை பாடல்களையும் சொல்வேன். கம்பனுக்குப் பிறகு, பாரதியைத்தான் நான் கவிச் சக்கரவர்த்தியாக மதிக்கிறேன். நெல்லையிலும் பாளையங்கோட்டையிலும் கடையத்திலும் தாமிரபரணிக் கரையிலும் நாங்கள் பழகித் திரிந்த காலங்கள் அற்புதமானவை” என்றார் பி.ஸ்ரீ.
`குமரன்’ என்ற பத்திரிகையில் பி. ஸ்ரீ பல கட்டுரைகளை எழுதினார். அதைக் கண்ட வாசனும் கல்கியும் அவரை விகடனுக்கு எழுத அழைத்தார்கள். இவரைச் சென்னைக்குக் கொண்டுவர வேண்டுமென்று ஒரு கட்டத்தில் அவர்கள் விரும்பினார்கள். பி.ஸ்ரீ., விகடனில் பணிபுரிய வந்தார். ஆனால் வந்த நோக்கம் விகடனில் பணிபுரிய அல்ல. வாசன் ஒரு ஆங்கிலப் பத்திரிகை தொடங்கினார். அதற்கு மெர்ரி மேகஸீன் (Merry magazine) என்று தலைப்புக் கொடுத்தவர் பி.ஸ்ரீ.
அந்த ஆங்கிலப் பத்திரிகையின் பொறுப்பாசிரியர் வேலைதான் பி.ஸ்ரீ.க்கு. ஆனால் ஆனந்த விகடனுக்கு எழுதுவதே அவருக்கு முக்கிய வேலையாக இருந்தது. ராஜாஜி, பெரியார் இருவர் மீதும் பி.ஸ்ரீ.க்கு மிகுந்த பற்று இருந்தது. இதைத் தன்னுடைய `கொஞ்சமோ நினைவில் வெள்ளம்’ புத்தகத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார் பி.ஸ்ரீ.:
“சமய, அரசியல், சமுதாயத் தொண்டு நாட்டுக்கு எத்தனை முக்கியமானதோ, அதேபோல் சுயமரியாதைப் பெரியாரின் தன்மான, தனிவீர, சமய மறுப்புத் தொண்டுகூட எண்ணிறந்த மூடநம்பிக்கைகளிலிருந்து தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்கு அவசியமானவை என்றே நான் உறுதியாக நம்புகிறேன். பக்தி எத்தனை அவசியமோ, அத்தனை அவசியம் மூடநம்பிக்கை ஒழிப்பு! பக்தி நெறியில் பகுத்தறிவைப் பயன்படுத்திக்கொள்ள இடம் கொடாதவர் களைத் தண்டிக்கவே இறைவன் மூடநம்பிக்கை என்ற கொடிய பிளேக் நோயை அனுப்பியுள்ளான் என்றார் ஒரு ஆங்கில அறிஞர். இந்த அரும்பெரும் கருத்திலே பெரியார் ராமசாமியின் பிரசாரத்திற்கு ஆதாரம் இருப்பதாகவே கருதுகிறேன்.”
- சுதாங்கன், மூத்த பத்திரிகையாளர். தொடர்புக்கு: sudhangan@gmail.com