Last Updated : 19 Jan, 2017 10:36 AM

 

Published : 19 Jan 2017 10:36 AM
Last Updated : 19 Jan 2017 10:36 AM

தமிழில் இன்றைய மொழிபெயர்ப்புகளின் நிலை எப்படி?

ஒரு பக்கம் ஏராளமான மொழிபெயர்ப்புகள்; இன்னொரு பக்கம் அவற்றின் தரம் குறித்து எழுப்பப்படும் கேள்விகள்! இந்தச் சூழலில், தமிழில் மொழிபெயர்ப்புகளின் நிலை, பெண்கள் அதிகம் மொழிபெயர்க்காததற்கான காரணம் உள்ளிட்ட பல விஷயங்களை மொழிபெயர்ப்பாளர்கள் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்கள்:

நஞ்சுண்டன்
(‘அக்கா’ உள்ளிட்ட நூல்களின் மொழிபெயர்ப்பாளர்)

தன் மொழிபெயர்ப்பை எப்போதும் சந்தேகிக்கும் பண்பு மொழிபெயர்ப்பாள ருக்கான அத்தியாவசியத் தகுதி. மொழிபெயர்த்த பிறகு, மூல மொழியும் இலக்கு மொழியும் தெரிந்த வேறொருவர், அதைக் கவனமாகப் படிக்க வேண்டும். பிறகு, இலக்கு மொழி மட்டுமே அறிந்த ஒருவரைப் படிக்கச் சொல்லி, அவர் சொல்கிற திருத்தங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்தத் திருத்தங்களையும் செய்த பிறகு, மொழிபெயர்ப்பை ஒரு எடிட்டர் படிப்பதும், அவர் சொல்லும் திருத்தங்களைப் பரிசீலிப்பதுமே மொழிபெயர்ப்பைச் செம்மையாக்க உதவும். இப்படித்தான் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகின்றன. இப்போதெல்லாம் ஒரே நபர், ஓராண்டில் பல நூல்களை மொழிபெயர்க்கிறார். இவற்றின் நம்பகத்தன்மை ஐயத்துக்குரியது.

குறிஞ்சிவேலன்

(‘ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோரா’ உள்ளிட்ட நூல்களின் மொழிபெயர்ப்பாளர், ‘திசை எட்டும்’ இதழாசிரியர்):

இப்போது இருப்பது ஆரோக்கியமான சூழல் என்று சொல்ல முடியவில்லை. அந்த ஆர்வம், வணிக நோக்கமாக மாறியதால், பல மொழிபெயர்ப்புகள் அரைவேக் காட்டுத்தனமாகிவிட்டன. புற்றீ சல் போல ஒவ்வொரு பதிப்பகமும் ஆண்டுதோறும் 20, 30 மொழிபெயர்ப்புகளை வெளியிடுவது பீதியூட்டுகிறது.

அமரந்தா
(‘நிழல்களின் உரையாடல்’ உள்ளிட்ட நூல்களின் மொழிபெயர்ப்பாளர்)

மொழிபெயர்ப்பு கடுமையான உழைப்பு தேவைப்படுகிற வேலை மட்டுமல்ல, உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதற்கு வாய்ப்பில்லாத வேலையும்கூட. பிழைப்புக்கு வேறு வழி இருந்தாலொழிய, இதைச் செய்ய முடியாது. முன்பெல்லாம் எவ்வளவு மூத்த, அனுபவசாலி எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளராக இருந்தாலும் விமர்சனம் வந்தால் அதிலிருந்து பாடம் பெற்றுக்கொள்வார்கள். ஆனால், இப்போது விமர்சகர்களுடன் இவர்கள் ‘கா’ விட்டுவிடுகிறார்கள். இந்தப் போக்கு தொடர்ந்தால், மொழி பெயர்ப்பு இலக்கியத்துக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்படும்.

ஜி. குப்புசாமி
(‘பனி’ உள்ளிட்ட நூல்களின் மொழிபெயர்ப்பாளர்)

மிகச் சிறந்த புத்தகத்துக்கான உரிமத்தைப் பதிப்பாளர் வாங்கிவிட்டு, அதை அப்போதைக்குச் சிக்குகிற ஏதோ ஒரு மொழிபெயர்ப்பாளரிடம் கொடுத்து மொழிபெயர்க்கச் செய்வது தவறான போக்கு. என்னைப் பொறுத்தவரை நான் படித்து, இதைத் தமிழுக்குக் கொண்டுவந்தேயாக வேண்டும் என்று தோன்றும் புத்தகங்களை மட்டுமே எனது பதிப்பாளர் கண்ணனிடம் சொல்வேன். ஒரு படைப்பாளியைப் பற்றி முழுதும் அறிந்திருக்கும், அவரது நூல்கள் எல்லாவற்றையும் வாசித்திருக்கும் ஒருவரே அவரது நூல்களை மொழிபெயர்க்கத் துணிய வேண்டும். மொழிபெயர்ப்பாளர் மிகச் சிறந்த நுட்பமான வாசகராக, இரு மொழிகளிலும் நல்ல தேர்ச்சி உள்ளவராக இருப்பது அடிப்படைத் தேவை.

இந்தப் புத்தகக் காட்சியில், நான் கேள்விப்பட்டே இருக்காத ‘காற்று, மணல், நட்சத்திரங்கள்’ என்ற மொழிபெயர்ப்புப் புத்தகத்தைச் சட்டென்று வாங்கிவிட் டேன். காரணங்கள், 1. பிரெஞ்சிலிருந்து அதை நேரடியாக மொழிபெயர்த்தது வெ. ஸ்ரீராம். 2. அதை வெளியிட்டது ‘க்ரியா’ பதிப்பகம். 3. அதன் ஆசிரியர் எக்சுபெரி. அறிமுகமில்லாத ஒரு புத்தகத்தை வாங்குகிறேன் என்றாலும், அவர்கள் மூவர் மீதும் உள்ள நம்பிக்கையே காரணம். இந்தப் பொறுப்பை மொழிபெயர்ப்புப் பணியைச் செய்யும் அனைவரும் உணர வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x