Published : 29 Apr 2017 09:14 AM
Last Updated : 29 Apr 2017 09:14 AM

விண்ணளாவும் தமிழ் விக்கிபீடியா!

இணையம் மிகப் பெரிய ஜனநாயக வெளி! அந்த ஜனநாயக வெளியை மேலும் விரிவுபடுத்தியதில் விக்கிபீடியாவுக்கும் முக்கியமான பங்கு இருக்கிறது. பல்கலைக்கழகங்கள், புத்தகங்கள் போன்றவற்றில் மட்டும் அடைபட்டுக் கிடந்த அறிவுப் பரப்பை உலகெங்கும் இலவசமாகக் கொண்டுபோய்ச் சேர்த்தது, சேர்த்துக்கொண்டிருப்பது விக்கிபீடியாவின் பெரும் சாதனை. அதிலும், இந்திய மொழிகளைப் பொறுத்தவரை விக்கிபீடியா பெரும் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

உலகப் புத்தக மாதமாக அனுசரிக்கப்படும் ஏப்ரல் மாதத்தில் தமிழ் விக்கிபீடியாவை விண்ணோக்கிச் செலுத்தும் ஏராளமான முனைப்புகள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன. தமிழ் இணையக் கல்விக் கழகம் இந்தச் செயல்பாடுகளின் பிரதான மூளையாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து கல்லூரிதோறும் கணித்தமிழ்ப் பேரவையை இந்த அமைப்பு உருவாக்கியிருக்கிறது. இதற்கென நூறு ஒருங்கிணைப்பாளர்கள் தயார்செய்யப்பட்டிருகிறார்கள். இந்தக் கணித்தமிழ்ப் பேரவையில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

கணித்தமிழ்ப் பேரவை மூலம் பேராசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர்களை அந்தந்தத் துறைகளில் கட்டுரைகள் எழுதும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆசிரியர்கள் அந்த மாவட்டத்தின் கலை, இலக்கியம், கலாச்சாரம் சார்ந்த கட்டுரைகளை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இதனால் ஒவ்வொரு மாவட்டம் சார்ந்தும் விக்கிபீடியாவில் வளமான கட்டுரைகள் இடம்பெறும். வேளாண் பல்கலைக்கழகம், மீன்வளப் பல்கலைக்கழகம் போன்ற தொழில்நுட்பக் கல்வி நிலையங்களின் பேராசிரியர்கள் தங்கள் துறை சார்ந்து ஏராளமான கட்டுரைகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்ப் பல்கலைக் கழகத்தால் ஏற்கெனவே வெளியிடப் பட்டிருக்கும் கலைக்களஞ்சியம் போன்ற முன்னூறுக்கும் மேற்பட்ட புத்தகங்களில் இடம்பெற்ற கட்டுரைகளை ‘ஒளி எழுத்துணரி’ (ஓ.சி.ஆர்.) தொழில்நுட்பத்தின் மூலம் எண்ணியல் கட்டுரைகளாக மாற்றி, தகுந்த வல்லுநர்களைக் கொண்டு அவற்றைச் சரிபார்த்துத் தமிழ் விக்கிபீடியாவில் ஏற்றவிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், தரவுகளைக் கட்டுரைகளாக மாற்றும் கணினித் தொழில்நுட்பத்தின் மூலம் ஊராட்சி அமைப்புகள், இந்துசமய அறநிலையத் துறை போன்றவற்றின் தரவுகளைக் கட்டுரைகளாக மாற்றி அவற்றைச் சரிபார்த்துத் தமிழ் விக்கிபீடியாவில் ஏற்றவிருக்கிறார்கள்.

தற்போது ஒரு லட்சம் கட்டுரைகளைத் தமிழ் விக்கிபீடியா நெருங்கிக்கொண்டிருக்கிறது. உருது, இந்தி மொழிகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுத் தமிழ் விக்கிபீடியா இந்திய அளவில் முதலிடத்தைக் கூடிய விரைவில் நிச்சயம் பிடிக்கும். மொழித்தூய்மைவாதம், தகவல் பிழைகள் போன்றவற்றின் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டாலும் அவற்றையும் தாண்டி தமிழ் விக்கிபீடியாவின் முக்கியத்துவத்தைப் பார்க்க வேண்டும். குறைகள் களையப்பட்டு, பரப்பை மேலும் விஸ்தரிக்கும்போது நம்ப முடியாத தகவல் புரட்சியின் முதல் வரிசையில் தமிழ் நிற்கும். அதற்காக, தமிழ் விக்கிபீடியாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x