Published : 08 Nov 2014 12:48 PM
Last Updated : 08 Nov 2014 12:48 PM

மனதைக் கவ்விய சிவப்பு: திரைப்பட இயக்குநர் நலன் குமாரசாமி

மனித இனத்தையும் கதைகளையும் பிரித்துப் பார்க்க முடியாது என்று பலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். நிறைய கதைகள் படித்து வளர்ந்தவன் நான். நல்ல புத்தகங்கள் கிடைத்துவிட்டால் தொடர்ச்சியாக மாதக் கணக்கில் படித்துக்கொண்டே இருப்பேன்.

சென்னையிலிருந்து, திருச்சிக்கு ரயிலில் சென்றபோது, ரயில் நிலையத்தில் இருந்த பழைய புத்தகக் கடையில் வாங்கிய புத்தகம் ‘மை நேம் இஸ் ரெட்’. இலக்கியத்துக்காக நோபல் பரிசு வென்ற ஓரான் பாமுக் எழுதிய நாவல் இது. படிக்கத் தொடங்கிய பின்னர்தான் தெரியவந்தது, புத்தகத்தின் நடு நடுவே சில பக்கங்கள் இல்லை என்பது. எனினும் வாசிப்பில் பெரிய சிரமம் இருக்கவில்லை.

ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு வேறு வேறு கோணத்தில் கதை சொல்வதும் ஒரு முறை. ‘சூது கவ்வும்’படத்தில் பல இடங்களில் இதைச் செய்திருப்பேன். இந்த நாவலிலும் பல்வேறு கோணங்களில் கதை சொல்லப்பட்டிருக்கும். திருச்சி போய்ச்சேரும்போது நாவலைப் படித்து முடித்திருந்தேன். இதை ஜி. குப்புசாமி தமிழில் ‘என் பெயர் சிவப்பு’ என்ற தலைப்பில் மிகச் சிறப்பாக மொழிபெயர்த்திருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள். விரைவில் அந்த மொழிபெயர்ப்பையும் படித்தாக வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x