நல் வரவு: இந்துவிற்கு ஒரு கடிதம்,

நல் வரவு: இந்துவிற்கு ஒரு கடிதம்,
Updated on
2 min read

எஸ்.ஆர்.வி-90 எஸ்.வி.வேணுகோபாலன், பாரதி புத்தகாலயம்,
சென்னை-600018, 044-24332424

வேலூர் மாவட்டத்திலுள்ள சொரையூர் எனும் கிராமத்தில் பிறந்து, முதலில் வருவாய்த்துறை பணியில் சேர்ந்து, பிறகு வட்டார உணவு வழங்கல் அலுவலராக, வட்டாட்சியராக, உதவி ஆட்சியராகப் பணி ஓய்வுபெற்ற எஸ்.ஆர். வரதாச்சாரிக்கு, இப்போது வயது 90. இதைக் கொண்டாடும் வகையில், அவரது இளைய மகனும் எழுத்தாளருமான எஸ்.வி.வேணுகோபாலன் தனது கட்டுரைகளால் ஆன குறுநூலைத் தனது தந்தைக்குக் காணிக்கையாக்கியுள்ளார். வரும் காலங்களில் குடும்ப விழாக்களைக்கூட எப்படியெல்லாம் அர்த்தபூர்வமாகக் கொண்டாடலாம் என்பதற்கான மிகச் சிறந்த முன்னுதாரணம் இந்நூல்.

செத்தை, வீரபாண்டியன், விலை: ரூ.110/-
வெளியீடு: எழுத்து, சென்னை-600034, 044-28270931

‘பருக்கை’ எனும் தனது முதல் நாவலுக்காக சாகித்திய அகாடமியின் ‘யுவ புரஸ்கார்’ விருதினைப் பெற்ற, சென்னைப் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வு மாணவரான வீரபாண்டியனின் சிறுகதைத் தொகுப்பிது. இதிலுள்ள 10 கதைகளும் வெவ்வேறு உளவியல் சிக்கல்களைக் கருவாகக் கொண்டிருக்கின்றன. கதாமாந்தர்கள் நம் பக்கத்து வீடுகளில் இருக்கும் சக மனிதர்களாக இருப்பது கூடுதல் அழுத்தத்தைக் கதைகளுக்கு தந்துவிடுகிறது. ‘எங் காதார, எங் கட்ட வேவ, எஞ்சாவுக்குனு ஒரு கொறலு இல்லாமப்போச்சே… ஏஏஏ…’ என்று பாட்டுக்காரனின் உயிரற்ற உடலிலிருந்து எழும் கேவல், காற்றில் கலந்தொலிக்கிறது.

இந்துவிற்கு ஒரு கடிதம், லியோ டால்ஸ்டாய், தமிழில்: வழிப்போக்கன்,
விலை: ரூ. 50 சென்னை-18., 044- 2433 2424

தாரக்நாத் தாஸ் என்பவர் இந்திய சுதந்திரம் குறித்துத் தனக்கு எழுதிய கடிதத்துக்கு லியோ டால்ஸ்டாய் எழுதிய பதில் கடிதங்கள் தான் ‘இந்துவிற்கு ஒரு கடிதம்’. 1908-ல் இதை எழுதிய டால்ஸ்டாய் இந்திய மக்கள் மட்டுமல்ல உலகம் முழுக்க மக்கள் எப்படி அடிமைப் பட்டார்கள் என்று விவரித்திருக்கிறார். இந்தக் கடிதங்களைப் படித்ததும் டால்ஸ்டாயின் கருத்துகளால் கவரப்பட்ட காந்தி, அவருடன் கடிதம் மூலம் தொடர்புகொண்டது இன்னமும் சுவாரசியம்.

தேவதைகளால் தேடப்படுபவன், தங்கம் மூர்த்தி, விலை: ரூ.60
படி வெளியீடு,சென்னை-600078, 8754507070

அன்பில் தோய்ந்த வார்த்தைகளால் மனதைக் குளிர்விக்கும் கவிதைகளைப் படைக்கும் தங்கம் மூர்த்தியின் சமீபத்திய கவிதைகளின் தொகுப்பு. கூடுதலாய் ஒற்றைச்சொல்கூடத் துருத்திக்கொண்டிருக்காமல் கவிதைகளைக் கோத்திருக்கும் கவிஞரின் செய்நேர்த்தி, ஒவ்வொரு கவிதையிலும் தெரிகிறது. மெய் உணர்தல், திருவிழாக்களும் குழந்தைகளும், நாய்கள், தோற்றப்பிழை உள்ளிட்ட கவிதைகள் தனித்த கவனிப்பைக் கோருகின்றன. ‘நிலவுகள் பூக்கும் பூமி’ எனும் கவிதையோடு தொடங்கி, ‘நட்சத்திர சொற்கள்/ குவிந்து கிடக்கின்றன./ நிலவைப் பற்றி/ ஒரு கவிதை இல்லை/ என்னிடம்’ எனும் கவிதையோடு முடித்திருப்பது ரசனைக்குரிய கவிதை முரண்.

மொஸாட், என்.சொக்கன், விலை: ரூ.150
வெளியீடு: கிழக்குப் பதிப்பகம், சென்னை 14, 044-42009603

உளவுத் துறை என்றாலே அதன் நியாயதர்மங்களுக்கான எல்லைகள் தெளிவற்றவைதான் என்றாலும் இஸ்ரேலின் உளவுத் துறையான ‘மொஸாட்’ இதில் தனி ரகம். ‘பணிநிமித்தமாக’ படுகொலை செய்த உளவாளி, பின்னாளில் இஸ்ரேல் பிரதமராக ஆனார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! சகல அதிகாரங்களும் படைத்த ‘மொஸாட்’ பற்றிய இந்தப் புத்தகம், அந்த அமைப்பின் அதிரடி நடவடிக்கைகள், சதி வலைகள், படுகொலைகள் என்று பல்வேறு விஷயங்களை விறுவிறுப்பாகச் சொல்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in