Last Updated : 04 Jan, 2014 12:00 AM

 

Published : 04 Jan 2014 12:00 AM
Last Updated : 04 Jan 2014 12:00 AM

பொழுதுகளின் ருசி

அனார் இலங்கையின் கிழக்குப்பகுதியில் வசிக்கிறார். ‘எனக்குக் கவிதைமுகம்’ தொகுப்பின் முன்னுரையில் அனாரின் கவிதை களில் ‘வேட்கையும் காதலும் மேலெழுகின்றன. தனிமையும் காத்திருப்பும் எரித்தாலும் ஊடல் சுடர் விடுகின்றன’ என்கிறார் சேரன். ‘உடல் பச்சை வானம்’ தொகுப்பின் பின் அட்டைக் குறிப்பில் ‘கவிதை வரிகளுக்கிடையில்... இயற்கை பெண்ணுடலாகிறது: இயற்கை பெண்ணாகிறது’ என்கிறார் சுகுமாரன்.

‘எல்லை வேலிகள்’ என்ற கவிதையில் வேட்கையைக் கூறுகிறார்.

“எங்களுக்கிடையில்

இந்துமகா சமுத்திரம் இருந்தது

வழிநடையில் முகில் குவியல்கள்

வண்ணங்களின் குகைகள்

அடுக்குகளாய்த் தீயெரியும் ஒளிக்காடு

சூரியன் ஆட்சி முற்றிய வானம்

சந்திரன் ஆக்கிரமித்த சுரங்கப் பாதைகள்

வல்லரசுகளின் படையணிகள்

எல்லாம் இருந்தன.

மலைகளை எல்லை வேலிகளாக

நாட்டியுள்ளனர்.

காடுகள் நகர்ந்தபடி

எங்களைச் சுற்றி வளைத்து

வழிமறிக்கின்றன.

ஆனபோதிலும்

நான் அன்றவனை

மூன்றுமுறை முத்தமிட்டேன்.”

காதலின் வேட்கை இவ்வளவு இடைமறித்தல்களையும் கடந்து அவனை, அதுவும் மூன்று முறை முத்தமிட வைக்கிறது.

‘பகிர்ந்து கொள்ளாத மாலை’ என்ற கவிதையின் சாரத்தைப் பார்ப்போம். என்னைச் சுற்றி குளிர் வலையை விரித்துக் கொண்டே யிருக்கிறது, உன் உருவம். வைக்கோற் கட்டுகளை அடைத்துக் கொண்டு மாட்டுவண்டிகள் வயல்பாதையில் வரிசையாக வருகின்றன. கடலை வியாபாரி கறிவேப்பிலை பொரித்த எண்ணெய் மணம் பரவ, சிணுங் கும் மணிகளின் இசையோடு மாலையின் ருசியைக் கூட்டுகிறான். ஒரு சோடித்தும்பிகள் காற்றின் கிழிந்த ஓரங்களைத் தைத்து முடிப் பதில் அவசரம் காட்டுகின்றன. நெருப்பு நிற மாலைக்கதிர்கள் ஆற்று நீர் மேற்பரப்பில் மருதாணி யிடுகின்றதா? பதுங்கி வரும் வாடைக்காற்றின் எதிர்பாராத தொடுதலில், அதிர்ந்து சிலிர்க் கின்றன, மஞ்சள் மலர்கள். இத்தருணங்களில் உன் இதமான நெருக்கத்தைப் பருகாமல் ஆறிய தேநீரிடம் நாம் பகிர்ந்துகொள்ளாத இந்த மாலைப் பொழுது தோல்வியைத் தழுவுகிறது. இக்கவிதை சங்க இலக்கியக் கவிதைகளை நினைவூட்டுகிறது.

பல கவிதைகளில் விரவிக் கிடந்த சில கவிதை வரிகளை இங்கு தருகிறேன்.

உன் குரல் நதியுள்

பொன் மீன்கள் துள்ளுவதை

குதிப்பதை

மலையுச்சியிலிருந்து

அந்தியென நான் ரசித்திருப்பேன்

நிலவு நனையும் உயரத்தில்

தெறிக்கின்றது மா கடல்

கனவின் கத்திகள் பாய்ந்த

கவிதையை

ருசிக்கின்றோம் மிச்சம் வைக்காமல்

அரண்மனையின் நீண்ட படிகளின்கீழ்

ஒநாயின் வடிவத்திலிருக்கிறது தனிமை

மறைவான புதர்களுக்கிடையில்

வேட்டையாடப்பட்ட இரையை

சத்தமின்றிப் புசித்தபடியிருக்கும் அரூப மிருகம்

அணில் கொறித்துப் போட்ட

கொய்யாப் பூக்களும், பிஞ்சுகளும்

விழுந்த வாசலில்

தேன் நிற அந்தி

புதிய காதலைப் பருகிக்கிடந்தது.

இத்தகைய வரிகள் அனாரின் கவிதைகளில் நெடுகிலும் காணக் கிடைக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x