Last Updated : 03 Jan, 2016 01:26 PM

 

Published : 03 Jan 2016 01:26 PM
Last Updated : 03 Jan 2016 01:26 PM

விஷ்ணுபுரம் விருது 2015: இலக்கிய உற்சவம்

கடந்த ஏப்ரல் மாதம், கவிஞர் தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டதிலிருந்து தேவதச்சன் கவிதைகள் தொடர்ந்து பரவலான வாசிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. எழுத்தாளர் ஜெயமோகன் இணைய தளத்தில் தேவதச்சன் என்னும் கவி ஆளுமை குறித்த கருத்துப் பரிமாற்றங்கள் பதிவேறத் தொடங்கின. விளக்கு விருதுக்குப் பிறகு தேவதச்சனுக்குக் கிடைத்த பெரும் அங்கீகாரம் இந்த விஷ்ணுபுரம் விருது எனலாம்.

விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டு ஒரே நாளில் முடிந்துவிடும் பண்டிகை போன்றதல்ல. சித்திரைத் திருவிழாவைப் போல் தினந்தோறும் நடக்கும் கொண்டாட்டம் அது. விருதாளரின் படைப்புகள் குறித்த இணைய விவாதம், கலந்துரையாடல், புத்தக வெளியீடு, ஆளுமை குறித்த ஆவணப்படம் தயாரித்தல் எனப் பல நிலைகளைக் கொண்டது விஷ்ணுபுரம் விருது. கோவையைச் சேர்ந்த விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் இந்த விருதை எழுத்தாளர் ஜெயமோகனின் வழிகாட்டுதலின் பேரில் 2010-ம் ஆண்டு முதல் வழங்கிவருகிறது. எழுத்தாளர்கள் ஆதவன், பூமணி, கவிஞர்கள் தேவதேவன், ஞானக்கூத்தன் ஆகியோர் இந்த விருதை ஏற்கனவே பெற்றிருக்கும் ஆளுமைகள்.

2015-ம் ஆண்டுக்கான விருதுக் குறிப்பு ஜெயமோகன் தளத்தில் வெளியான நாள் முதலே தேவதச்சன் கவிதைகள் பெருவாரியான வாசகப் பரப்புக்குப் போய்ச் சேர்ந்தன. சிறு இலக்கியச் சூழலுக்குள் விவாதிக்கப்பட்டுவந்த அவருடைய நுட்பமான கவிதைகள் பரவலான விவாதத்துக்கு உள்ளாயின. தொடர்ந்து தேவதச்சன் கவிதைகள் குறித்த கட்டுரைகளை ஜெயமோகன் தனது தளத்தில் வெளியிட்டார். வாசக அனுபவம், கவிதையியல் ஆய்வு என்னும் இரு அடிப்படையில் அந்தக் கட்டுரைகள் அமைந்திருந்தன. அவை மட்டுமல்லாது தேவதச்சன் கவிதைகள் குறித்த ஜெயமோகனின் விரிவான கட்டுரையும் வெளியானது. இந்தக் கட்டுரைகள் குறித்த வாசக எதிர்வினைளும் வெளிவந்தன.

விருது வழங்கும் விழா மூன்று நாள் உற்சவமாக டிசம்பர் 25 அன்று தொடங்கியது. அன்று இரவிலிருந்து தேவதச்சன் கவிதைகள் குறித்த உரையாடல் தொடங்கி விழா நடைபெற்ற 27 அன்று மாலைவரை தொடர்ந்தது. இடையில் சிறுகதைகள், நாவல்கள் குறித்த விவாதங்களும் ஒருங்கிணைக்கப்பட்டன. விஷ்ணுபுரம் அமைப்பைச் சேர்ந்த செல்வேந்திரன் விழாவை ஒருங்கிணைத்தார். ஜெயமோகன் முன்னிலை வகித்தார். எழுத்தாளர்கள், கவிஞர்கள், வாசகர்கள் எனப் பல தரப்பினரும் விழாவில் கலந்துகொண்டனர்.

விழா கோயம்புத்தூரில் உள்ள கிக்கானி உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. தேவதச்சனுக்கு 2015-ம் ஆண்டுக்கான விருதை எழுத்தாளர் நாஞ்சில் நாடனும் திரைப்பட இயக்குநர் வெற்றி மாறனும் இணைந்து வழங்கினர். தேவதச்சன் கவிதைகள் குறித்த நூலான, ‘அத்துவான வேளையின் கவிதை’ நூலை எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் வெளியிட விஜய்சூரியன் பெற்றுக்கொண்டார். தேவதச்சன் குறித்த ஆவணப்படத்தை வெற்றி மாறன் வெளியிட கடலூர் சீனு பெற்றுக்கொண்டார்.

எழுத்தாளர்கள் நாஞ்சில்நாடன், ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், லஷ்மி மணிவண்ணன் ஆகியோர் தேவதச்சனை வாழ்த்திப் பேசினர். யுவன் சந்திரசேகரின் உரை கவிதைகளுக்கு அப்பாற்பட்டு தேவதச்சனின் ஆளுமையைப் புரிந்துகொள்ள ஏதுவாக அமைந்தது. லஷ்மி மணிவண்ணன் ஜெயமோகனின் ஆளுமை குறித்தும், தேவதச்சனின் கவிதைகள் குறித்தும் பேசினார். ஜெயமோகன், கவிதையியல் குறித்தும் தேவதச்சனின் கவிதைகளின் நுட்பம் குறித்தும் பேசினார். தேவதச்சன் தன் முதல் கட்டுரையை ஏற்புரையாக வழங்கினார். விஷ்ணுபுரம் அமைப்பைச் சேர்ந்த வெ.சுரேஷ் நன்றி கூறினார். படைப்பு சார்ந்த விவாதங்களையும் பரிமாற்றங்களையும் கொண்ட இந்த விழா இலக்கியத்தின் கொண்டாட்டமாக அமைந்தது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x