Last Updated : 20 May, 2017 10:25 AM

 

Published : 20 May 2017 10:25 AM
Last Updated : 20 May 2017 10:25 AM

விசித்திர வாசகர்கள்!- வாசகரை நலம் விசாரித்த கருணாநிதி

தஞ்சாவூர் கரந்தையில் பூக்குளம் செல்லப்பா என்றால் அந்தக் காலத்தில் எல்லோருக்கும் தெரியும். டீக்கடைக்காரரான அவர் பிரபலமானதற்குக் காரணம் அவருடைய வாசிப்புப் பழக்கம். அப்போதெல்லாம் திராவிட இயக்க இளைஞர்களை அடையாளம் காண்பது எளிது. மடித்துவிட்ட முழுக்கைச் சட்டை, கையில் சுருட்டிய முரசொலி ஏடு. செல்லப்பா ஒல்லியாக சிவப்பாக இருப்பார். வழுக்கை, அண்ணாவின் பற்களை நினைவூட்டும் முன்பல்வரிசை காலையில் கடைக்கு வந்ததும் டீ தயாரிப்புக்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு முரசொலியை, குறிப்பாக கருணாநிதியின் உடன்பிறப்புக்கான கடிதத்தை சத்தம் போட்டு கருணாநிதியைப் போன்றே அச்சு அசலாக வாசிப்பார். தெருவில் போகும் மாற்றுக்கட்சித் தோழர்களும் நின்று ரசித்துவிட்டுப் போவார்கள். பூக்குளம் செல்லப்பா ஒரு காலத்தில் தஞ்சை சட்டமன்றத் தேர்தலில் கருணாநிதிக்கு வேலைசெய்தவர். செல்லப்பா தினமும் முரசொலியை வாசிப்பது கருணாநிதி காதுக்கும் எட்டிவிட்டது. அவர் முதல்வர் ஆனதும் கரந்தை வழியாகப் பயணித்தபோது காரை நிறுத்தி செல்லப்பாவைப் பார்த்து “என்ன செல்லப்பா செளக்கியமா?” என்று கேட்டிருக்கிறார். செல்லப்பா பவ்யமாக உடனே ஒரு டீ போட்டுக் கட்சித் துண்டில் ஏந்தி கருணாநிதியிடம் நீட்ட அவர் வாங்கிப் பருகியிருக்கிறார். ஒரு எளிய வாசகனை மாநிலத்தின் முதல்வர் கவுரவப்படுத்தியது தஞ்சை முழுவதும் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.

உரத்த சிந்தனை!

ஓர் அன்பர் எந்தப் புத்தகத்தை எடுத்தாலும் உரக்க வாசிப்பார். மனசுக்குள் வாசித்தால் வாசித்த மாதிரியே இருக்காது என்பார். குறிப்பாக பாரதி, ஜெயகாந்தன் ஆகியோர் பற்றிய புத்தகம் எதுவானாலும் சத்தம் போட்டு வாசிப்பார். இவை உரக்கப் படிப்பதற்கென்றே எழுதப்பட்ட சிந்தனைகள் என்பார். ‘ப்ளாக்கி அண்ட் சன்ஸ்’ முன்பு ‘புக்ஸ் டு ரீட் அலவ்டு’ என்று ஒரு வரிசை வெளியிட்டதைச் சுட்டிக்காட்டுவார். ஜெயகாந்தன் புத்தகத்தை அவர் வாசிக்கும்போது ஏதோ ஜெயகாந்தனே நேரில் வந்து பேசுவதுபோல் இருக்கும். அதே ஏற்ற இறக்கம் த்வனி, கர்ஜனை! ஜே.கே.யிடம் பேசும்போது இதைக் குறிப்பிட்டேன். ஜே.கே. சொன்னார், “உண்மையில் என் எழுத்துக்களெல்லாமே உரத்து வாசிக்கவென்று எழுதியவைதான். சில சமயம் உரத்து நான் பேசும்போது பிறர்மூலம் எழுதுவித்துப் பிரசுரமானவை அநேகம். சிறு குழந்தைகளைப் பார்த்து வாய் விட்டுப் படி என்பார்களே அந்த ரகம்தான் என் எழுத்தும்” என்றார்.

துரத்தும் எழுத்தாளர்கள்!

ஒரு புத்தகத்தை எங்கே வாசித்து முடிக்கிறாரோ அந்த இடத்திலேயே போட்டுவிட்டு வந்துவிடும் வழக்கம் ஒரு வாசகரிடம் உண்டு. பேருந்தின் இருக்கைகள், பூங்கா பெஞ்சுகள், காத்திருக்கும் இடங்கள் எதுவானாலும் புத்தகத்தை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிடுவார். சில சமயம் பேருந்தின் ஜன்னல் வழியே நழுவ விடுவார். யாராவது எடுத்துப்போவார்கள். ஒரு தடவைக்கு மேல் படிக்க அதில் ஒன்றுமில்லை என்பார். “சார் புத்தகத்தின் அருமை தெரியாதவர்கள் கையில் கிடைத்துவிட்டால் என்ன செய்வது” என்பேன். “நம் வாழ்க்கையே அப்படித்தானே சார் இருக்கிறது” என்பார். ஒரு துணிக்கடையில் தான் வாசிக்க ஆரம்பித்த புத்தகம் பிடிக்காததால் அந்தப் புத்தகத்தை விட்டெறியாத குறையாக கோபத்துடன் விட்டுவிட்டு வெளியேறினாராம். “சார் சார்” என்று கூப்பிட்டுக்கொண்டு கடைச்சிப்பந்தி ஓடிவந்திருக்கிறார். “இப்படி நான் விரும்பாவிட்டாலும் துரத்தும் எழுத்தாளர்கள் உண்டு” என்றார் அந்த அன்பர்.

சிலையா? மனிதனா?

எனது செக்கோஸ்லோவாக்ய நண்பர் யரோஸ்லவ் ஃபொர்மானக்கும் ஒரு விசித்திர வாசகர். புத்தகங்களை, அதுவும் தமிழ்ப் புத்தகங்களைத் தடையின்றி வாசிக்க ஒரு வழியைக் கண்டுபிடித்தார். பார்த்துக்கொண்டிருந்த வேலையை உதறிவிட்டு பிராஹாவில் உள்ள அருங்காட்சியகத்தில் காவலாளியாகப் பணியில் சேர்ந்தார். “வேலைக்குக் கவுரவம் பார்ப்பது உங்கள் ஊரில்தான். எங்களுக்குத் தொந்தரவில்லாத சூழ்நிலை இருந்தாலே போதும்” என்பார். அருங்காட்சியகத்தில் இவர் அப்படியே புத்தகத்தில் மூழ்கி உறைந்திருந்தபோது ஒரு வயதான பெண்மணி சிலையா, மனிதனா என்று தெரிந்துகொள்ள இவருடைய கன்னத்தைக் கிள்ளிப் பார்த்துவிட்டுச் சென்றாராம்.

எனக்குத் தெரிந்த பெண்மணி!

அவர் நடுத்தர வயதுப் பெண்மணி. தமிழ்வாணன், ஜாவர் சீதாராமன் நாவல்கள் என்றால் விழுந்து விழுந்து படிப்பார். திடீரென்று அவர் மனநிலையில் ஏதோ பாதிப்பு. மனோதத்துவ டாக்டரிடம் அழைத்துப் போனோம். புத்தகம் வாசிக்கிற வழக்கம் உண்டா என்று கேட்டார் அந்த பெண் மனநல மருத்துவர். மெல்லமெல்ல அவர் ஒரு கட்டத்தில் ஜாவர் சீதாராமன் எழுதிய ‘உடல் பொருள் ஆனந்தி’ படித்து பயந்துவிட்டதாகக் கூறினார். திலீபனும் ஆனந்தியும் (கதையில் வரும் கதாபாத்திரங்கள்) தன்னுடைய காதில் வந்து ‘செத்துப்போ’ என்கிறார்கள் என்று சொன்னார். அந்த மருத்துவர், மருந்துக்கு பதிலாக கல்கியின் ‘பார்த்திபன் கனவு’ நாவலைப் படிக்குமாறு பரிந்துரைத்தார். ஆன்மிகப் பெரியோர்களின் புத்தகங்களையும் பரிந்துரைத்தார். அந்தப் பெண்மணிக்கு எல்லோரும் ஆச்சரியப்படும்படியாகக் குணமாகிவிட்டது. அவர் என் அம்மாதான்!

(நிறைவு பெற்றது)

- கோபாலி

தொடர்புக்கு:- thanjavurkavirayar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x