Last Updated : 09 Nov, 2013 12:00 AM

Published : 09 Nov 2013 12:00 AM
Last Updated : 09 Nov 2013 12:00 AM

புனைவு என்பது தனக்குத் தெரிந்தவற்றைக் கொட்டி வைப்பதல்ல: சோ. தர்மன்

சோதர்மன். கரிசல் இலக்கியத்தின் மூன்றாம் தலைமுறை எழுத்தாளர். எண்பதுகளில் எழுதத் தொடங்கிய இவர் தன் எழுத்துகள் மூலம் கரிசல் மொழியைக் கூர்மையாக்கியவர். தூர்வை நாவல் மூலம் இதுவரை சொல்லப்படாத தலித் வாழ்க்கையின் மற்றொரு பக்கத்தைச் சித்தரித்துள்ளார். இதன் மூலம் தலித் இலக்கியத்தின் தனித்துவமான குரலாக அறியப்படுகிறார். ஐந்து சிறுகதைத் தொகுப்புகள், இரு நாவல்கள், ஒரு ஆய்வு நூல் இதுவரை வெளியாகியுள்ளன.

நீங்கள் எழுத வந்த பின்னணி பற்றிக் கூறுங்கள்...

என்னுடைய அப்பா ஒரு ஒயில் கும்மிக் கலைஞன். நான் சிறு பையனாக இருந்தபோது என்னை உட்காரவைத்துவிட்டு என்னிடம் ஆடிக் காண்பிப்பார். ஒரே நேரத்தில் காட்சியும் கானமும் காணக் கிடைத்தன. இதுமாதிரியான வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்கும் எனச் சொல்ல முடியாது. எனக்கு இந்த வாய்ப்பு என்னுடைய 12 வயதுவரை கிடைத்தது. இப்போது நினைக்கும்போது இதுதான் என் வாசிப்பிற்கான காரணமாக இருக்கும் என நினைக்கிறேன். முதலில் எல்லோரையும்போல சிந்துபாத்திலிருந்துதான் தொடங்கினேன். அண்ணாதுரை, மதியழகன், நெடுஞ்செழியன், ஆசைத்தம்பி போன்றோரை வாசித்தேன். தொடக்கத்தில் திரவிடக் கட்சியில் எல்லோருமே எழுத்தாளர்களாக இருந்தார்கள். இந்தத் திராவிட எழுத்தாளர்களை வாசித்தது ஒருவிதமான புதிய ரசனையைக் கொடுத்தது. இது இலக்கிய வாசிப்புக்கான வாசலாக இருந்தது எனலாம். அதன் பிறகு ஜெயகாந்தன், சுஜாதா போன்றவர்களை வாசிக்கத் தொடங்கினேன். ரசனை மாறுகிறது. ரஷ்ய இலக்கியங்களையும் தேடி அடைகிறேன். எழுத்தாளர் பூமணி என்னுடைய தாய்மாமன் என்பதால் அவருடைய வீட்டில் நான் கேட்டிராத இதழ்களையும், புத்தங்களையும் பார்க்கிறேன். கரிசல் எழுத்தாளர்களின் கதைகள் வாசிக்கக் கிடைத்தன. அந்தக் கதைகள் என் பிரதேத்துக் கதைகளாக, நான் எழுத நினைத்த கதைகளாக இருந்ததால் என்னாலும் எழுத முடியும் என்னும் தைரியம் வந்தது. நானும் எழுதினேன். ஆனால் அப்போது என் கதைகள் அவர்களின் கதைகளைப் பிரதி எடுத்தது போலதான் இருந்தன.

பூமணி உங்களுக்கு உற்சாகம் அளித்தாரா? உங்கள் இருவருக்குமான உறவு எப்படி இருந்தது?

இல்லை. அவர் என்னை எழுதச் சொல்லி உற்சாகம் அளிக்கவில்லை. நாங்கள் இருவரும் இலக்கியம் குறித்தெல்லாம் உரையாடிக்கொண்டிருக்க மாட்டோம். அவருக்கு நான் ஏகலைவன்போலதான். நாங்கள் மருமகன்கள் மட்டும் 16பேர் இருப்போம். அவர் எங்களுக்கெல்லாம் தாய்மாமன் என்பதால் நாங்கள் அவர் முன்னாடி நின்றெல்லாம் பேச மாட்டோம். நான் மட்டும் கொஞ்சம் பேசுவேன். புத்தகம் கொடுப்பார். “படிச்சியா? நல்லாருக்கா” என்று கேட்பார். நானும் “ஆமா. படிச்சேன். நல்லாருக்கு” என்பேன். அவ்வளவுதான்.

கரிசல் இலக்கியத்தின் போக்கு எப்படி இருக்கிறது?

இதுவரைக்கும் கரிசல் இலக்கியம் என்று எழுதப்பட்டவை எல்லாம் ஒற்றைத்தன்மையிலான கதைகள்தாம். விஷயங்கள் அளவில் அடர்த்தியாக இருந்தாலும் அவை எல்லாம் ஒருவிதமான கட்டுரைத் தன்மை கொண்டவை. ஒரு புனைவாக அவை வெளிப்படவில்லை. இந்த இடத்தில்தான் நான் பூமணியையும், ராஜநாரயணனையும் என்னுடைய முன்னோடிகள் எனச் சொல்ல மாட்டேன். நான் கரிசல் எழுத்துகளை இன்னொரு தளத்திற்குக் கொண்டு செல்ல முயல்கிறேன். அதில் தோல்வி ஏற்பட்டிருந்தாலும் அதைக் கெளரவமாகவே கருதுகிறேன். கரிசல் எழுத்தாளர்களெல்லாம் இந்த மொழியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முயலவில்லை. பூமணி நாவல் எழுதிக்கொண்டிருக்கிறார். மேலாண்மை பொன்னுசாமி முற்போக்கு எனச் சொல்லிக் கொண்டு எதையோ எழுதுகிறார். பா.செயப்பிரகாசம் எழுதுவதையே விட்டுவிட்டார். என் காலகட்டத்து எழுத்தாளரான சுயம்புலிங்கமும் இப்போது எழுதவில்லை. என்னுடைய கூகை நாவலில் கரிசல் இலக்கியத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த நிறையவே முயன்றிருக்கிறேன்.

குறளிவித்தைக்காரன் கதையில் இருந்து நீங்கள் வேறொரு இடத்திற்கு நகர்ந்திருக்கிறீர்கள். இந்த மாற்றம் எப்படிச் சாத்தியப்பட்டது?

அந்தச் சந்தர்ப்பத்தில்தான் கவிஞர் தேவதச்சனின் நட்பு கிடைத்தது. அவர் உலக அளவிலான உரைநடை இலக்கியப் பரிச்சயம் உள்ளவர். சமீபத்தில் வந்திருக்கும் எழுத்துகளையும் வாசிக்கிறவர். அவர் எனக்கு நண்பர் ஆனவுடன் என்னுடைய எழுத்துகளையெல்லாம் வாசித்தார். வாசித்த பிறகு, “நீங்கள் கிராமத்தைப் பற்றி எனக்குத் தெரியாத பல விஷயங்களைச் சொல்லியிருக்கிறீர்கள். நான் ஒருநாள் கிராமத்தில் குடியேறிவிட்டால் இவை எல்லாம் எனக்கும் தெரிந்துவிடும். அப்படியானல் இந்த எழுத்துக்கு என்ன மதிப்பு?” எனக் கேட்டார். அவர் கேள்வி முக்கியமானதாகப்பட்டது. தெரியாத விஷயங்களை எழுதினாலேயே அது இலக்கியம் ஆகிவிடாதல்லவா? ஆனால் தெரியாத விஷயங்கள் வாசிப்பதற்குச் சுவாரஸ்யமாகத்தான் இருக்கும். பழங்குடிகளைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. அதனால் சோளகர் தொட்டி வாசிக்கிறேன். கடலைப் பற்றி தெரியாது அதனால் ஆழி சூழ் உலகு வாசிக்கிறேன். இவை எல்லாம் ஏதோ ஒருவகையில் பலவீனமாக இருந்தாலும் அந்த விஷயத்திற்காக வாசிக்கிறேன். ஆனால் இந்த விஷயங்களை மேற்குலக இலக்கியங்கள், லத்தீன் அமெரிக்க இலக்கியங்கள் எவ்வளவு நுட்பமாகச் சொல்கின்றன என்பதை தேவதச்சன் ஒரு பாடத்தைப் போல விளக்கினார். மொழிபெயர்ப்பு நூல்கள் தந்து வாசிக்கச் சொன்னார். நேரடித் தன்மை இல்லாத நுட்பமான விவரணைகளை நான் தெரிந்துகொண்டேன். இதை நான் என் கதைகளில் முயன்று பார்த்தேன். இம்மாதிரியான என் முயற்சிகளுக்கு இந்தியாடுடே இடம் கொடுத்தது. வாஸந்தி எனக்குத் தொடர்ந்து உற்சாகம் அளித்தார்.

உங்களுடைய தூர்வை நாவல் இதுவரை காட்டப்பட்ட தலித் வாழ்க்கைக்கு மாறுபட்ட ஒன்றைச் சித்தரிக்கிறது...

இந்த நாவலை வாசித்த பலரும் இதைச் சொன்னார்கள். எங்களுக்கு இதுவரை காட்டப்பட்ட தலித், தலைக்கு எண்ணெய் தடவாமல் பரட்டைத் தலையுடன் இருப்பான். அழுக்காக, நாற்றமுடையவனாக, வன்முறை விரும்பியாக இருப்பான். தலித் பெண்கள் எளிதில் சோரம்போகிறவர்களாக இருப்பார்கள். இப்படித்தான் தலித்துகள் குறித்து சித்தரிக்கப்பட்டுள்ளது. உங்களுடைய கதையில் வரும் தலித் நிலங்கள் வைத்திருக்கிறான், உழவு மாடு வைத்திருக்கிறான். மாட்டு வண்டி கட்டிப்போறான். இது என்ன முரணாக இருக்கிறதே எனச் சிலர் என்னிடம் கேட்கிறார்கள். இதுவரை காண்பிக்கப்பட்ட தலித் வாழ்க்கை ஒருபக்கச் சார்புடையவை. ஏற்கனவே காட்டப்பட்டுள்ள தலித் குறித்தான சித்திரங்கள் எல்லாம் இடதுசாரி மார்க்சிய எழுத்தாளர்களால் காட்டப்பட்டவையே. தலித் எழுத்தாளர்களும் இதைத் தொடர்ந்தார்கள். என்னுடைய கதைகள் இவை எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்கின. தலித்துகளுக்குத் தொடக்க காலத்தில் நிலங்கள் கிடையாதுதான். ஆனால் பின்பு அவர்கள் நிலவுடமையாளர்களாகச் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தார்கள். அந்த வாழ்க்கையைத்தான் என் கதைகளில் பதிவுசெய்கிறேன்.

தொடக்கத்தில் நிலங்கள் இல்லை என்றால் தலித்துகள் எப்படி நிலவுடமையாளர்கள் ஆனார்கள்?

முன்பெல்லாம் ஊரின் நிலங்கள் அத்தனையும் அந்த ஊரில் உள்ள பிராமணர்களுக்குச் சொந்தமானவையாகவே இருக்கும். அதில்தான் எல்லோரும் விவசாயக் கூலிகளாகப் பாடுபடுவார்கள். அந்தப் பிராமணர்கள் அரசு வேலை கிடைத்து பட்டணங்களில் குடியேறத் தொடங்கினர். அவர்கள் சென்ற பிறகு அந்நிலங்களை நிர்வகித்தவர்கள் பெரும்பாலும் தலித்துகளே. பிற்காலத்தில் அந்நிலங்களை அதில் பாடுபட்ட தலித்துகளுக்கே பிராமணர்கள் கையளித்துவிட்டாட்கள். பிராமணர்கள் சிலர் இலவசமாகவும் கொடுத்தார்கள். கொடுப்பதைக் கொடு எனச் சிறு தொகைக்கு நிலத்தைக் கொடுத்துச் சென்றவர்களும் உண்டு. இப்படித்தான் தலித்துகளுக்கு நிலங்கள் கிடைத்தன. எங்கள் பகுதியைப் பொருத்தவரை இதுதான் உண்மை. இன்று பிராமணர்கள் தலித்துகளுக்கான எதிரிகளாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். இது மாபெரும் தவறு.

தலித்துகள் இன்னமும் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் சூழல் இருக்கிறது. இது தலித் எழுத்துகளில் வெளிப்படத்தானே செய்யும்...

சரி. ஆனால் இந்த மாதிரியான தலித் பிரச்சினைகளை யார் எழுதுகி றார்கள்? என்னுடைய கூகை தவிர்த்து தலித்துகளுக்கான அரசியலை வேறு யார் எழுதியிருக்கிறார்கள்? தலித்து களின் மற்ற விஷயங்கள் பற்றி எழுதியிருக்கி றார்கள். முழுக்க முழுக்க அரசியல் ரீதியாக யாரும் இதுவரை எழுதவில்லை.

தலித்துகள் தங்கள் பிரச்சினைகளைப் பேசுவதே ஒரு அரசியல்தானே?

பேசுகிறார்கள். ஆனால் தலித்துகளின் அரசியல் இலக்கியமாக வெளிப்படவே இல்லை. எல்லா இடத்திலும் இப்படித்தான் உள்ளது. தலித் தலைவர்களோ ஒரு இடத்திற்காக அதிமுக, திமுகவை அண்டியிருக்கிறார்கள். இன்றைக்கு கம்யூனிஸ்ட்கள்போலதான் இவர்களும் இருக்கிறார்கள்.

தலித் எழுத்துகளை வாசிக்கிறீர்களா?

தலித் எழுத்துகள் மட்டுமல்ல. பலரின் எழுத்துகளை இன்று என்னால் வாசிக்க முடியவில்லை. தனக்குத் தெரிந்த விஷயங்களை அம்பாரமாகக் குவித்துவைக்கிறார்கள். சில பக்கங்களுக்கு மேல் வாசிக்கவே முடியவில்லை. சமீபத்தில் தோல் என்ற நாவலின் எழுத்தாளர் வந்து அந்த நாவலைக் கொடுத்துப் படித்துச் சொல்லும்படி கேட்டார். அந்த நாவலை என்னால் வாசிக்கவே முடியவில்லை. சாகித்திய அகடமி விருது பெற்ற நாவலே என வாசிக்கப் பெரிதும் முயன்றேன். ஆனால் வாசிக்க முடியவில்லை. சிலர் பல பக்கங்களுக்குச் சரித்திர நாவல்கள் எழுதுகிறார்கள். அது எனக்குத் தேவை இல்லாதது. காவல் கோட்டத்திலும், அஞ்ஞாடியிலும் எனக்கு வாசிக்கச் சில பக்கங்களே உள்ளன. மற்றவை எல்லாம் எனக்குத் தெரிந்த வரலாற்றுத் தகவல்கள்தாம். அதை வரலாற்றுப் புத்தகங்களிலே படித்துக்கொள்வேன். எதற்கு நாவல் வாசிக்க வேண்டும்? புனைவு என்பது தனக்குத் தெரிந்த விஷயங்களைக் கொட்டிவைப்பதல்ல. அதை நெய்ய வேண்டும்.

ஆனால் இவற்றுக்கிடையில் ம.அரங்கநாதன், ஜெயமோகன் ஆகியோரின் எழுத்துகள் என்னை ஆகர்ஷிக்கின்றன. கோணங்கியின் எழுத்துகள் புரியவில்லை என்றாலும் வாசிக்கத் தோன்றுகிறது. தலித் இலக்கியத்தைப் பொருத்தவரை இன்றைக்கு அதன் வீச்சு குறைந்துவிட்டதாகத்தான் தெரிகிறது.

இப்போது என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?

மதத்தைப் பரப்புவதற்காக வந்த கிறித்துவ அமைப்புகள் எப்படிக் கல்வியை வியாபாரம் ஆக்கினார்கள் என்பதைப் பற்றி ஒரு நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன். தூத்துக்குடியில் ஒரு கிறித்துவ அமைப்பில் 10 ஆண்டுக் காலம் இருந்தேன். அந்த அனுபவத்தையும் சரித்திரச் சான்றுகளையும் வைத்து எழுதியிருக்கிறேன். இந்நாவல் 18 ஆம் நூற்றாண்டில் தொடங்கி இன்று வரை கிறித்துவ அமைப்புகளின் செயல்பாடுகளைச் சொல்கிறது. இதில் இதுவரை தமிழில் பேசத் தயங்கின விஷயங்களைச் சொல்லியிருக்கிறேன். கிறித்துவக் கன்னியாஸ்திரியாக இருந்த பாமா போன்றோர்கள் இது பற்றியெல்லாம் எழுதியிருக்க வேண்டும். ஆனால் அவர் இது பற்றியெல்லாம் பேசவே இல்லை.

இது தவிர்த்து குழந்தைகளுக்கான சிறுகதைத் தொகுப்பு ஒன்று எழுதி இருக்கிறேன். கரிசல் பறவைகள் உடனான எனது அனுபவத்தை கட்டுரைத் தொகுப்பாக எழுதியிருக்கிறேன். இந்த மூன்று நூல்களும் இந்த ஆண்டு வெளிவரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x