

பழைய புத்தகக் கடைகளில் சிதறிக் கிடக்கும் புத்தகங்களுக்குள் முகமறியாத சிலரது நினைவுகளும் கலந்திருக்கின்றன. ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட் புத்தக முகப்பில் அச்சு பதித்தது போல அத்தனை அழகாக கையெழுத்திட்டுள்ள கே.நல்லசிவம் என்பவர் யாராக இருக்கக் கூடும்? பிரேம்சந்த் சிறுகதைத் தொகுப்பின் முன்னால் ‘எனதருமை வித்யாவுக்கு...’ என எழுதிக் கையெழுத்திட்டுள்ள காந்திமதி டீச்சர்… எதற்காக, எந்த நாளில், இந்தப் பரிசைக் கொடுத்தார்? இப்போது அந்த வித்யாவுக்கு என்ன வயது இருக்கும்? அவர், இப்போது என்ன செய்து கொண்டிருப்பார்?
தி.ஜானகிராமன் எழுதிய ‘மரப்பசு’ நாவலில் அடிக்கோடிட்டு, ‘நானும் ஒரு அம்மணிதான்’ என்று எழுதிய பெண், யாராக இருக்கக் கூடும்? இப்படிப் பழைய புத்தகங்களைப் புரட்டும்போது தென்படும் பெயர்கள், குறிப்புகள் என்னை மிகவும் யோசிக்க வைக்கின்றன!
புத்தகங்களோடு மனிதர்களுக்கு உள்ள உறவு ரகசியமானது. ‘எதற்காக புத்தகம் படிக்கிறாய்?’ எனக் கேட்டால் ஆளுக்கு ஒரு காரணம் சொல்வார்கள். என்னதான் ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், அதனடியில் சொல்லாத காரணம் ஒன்று இருக்கவே செய்கிறது. அதுவே, ஒருவரைத் திரும்பத் திரும்ப வாசிக்கத் தூண்டுகிறது.
வாசகர் என்ற சொல் அரூபமானது. ஒரு வாசகர் எப்படி இருப்பார் என வரையறுக்கவே முடியாது. வாசகர் என்ற சொல் வயதற்றது. கால, தேச, மத, இனங்களைக் கடந்தது. எழுத்தாளனும் தேர்ந்த வாசகனே!
ஒரு புத்தகத்தின் வாசகன் என்ற முறையில் அதே புத்தகத்தை வாசித்த இன்னொரு வாசகனைத் தேடிச் சந்தித்து, புத்தகத்தை, எழுத்தாளரைப் பாராட்டியும், கேள்வி கேட்டும், கோபித்துக் கொண்டும் பேசி மகிழ்வதற்கு இணையாக வேறு என்ன சுகம் இருக்கிறது? அந்தச் சந்தோஷத்தை ஏன் இந்தத் தலைமுறை தேவையற்றதாகக் கருதுகிறது?
புத்தகக் கடையொன்றில் சில காலம் பணியாற்றிய நண்பர் அமீன்... ஓர் அரிய மனிதரைப் பற்றிய நினைவைப் பகிர்ந்துகொண்டார். அபு இப்ராகிம் என்ற அந்த மனிதர், வாரம்தோறும் வியாழக்கிழமையன்று மதியம் புத்தகக் கடைக்கு வருவாராம். ஒவ்வொரு முறையும் முப்பது, நாற்பது புத்தகங்கள் வாங்கிக் கொண்டு போவாராம்.
‘எதற்காக, இத்தனை புத்தகங்கள் வாங்குகிறீர்கள்’ எனக் கேட்டதற்கு, தன்னைத் தேடி வீட்டுக்கு வரும் யாராக இருந்தாலும்... அவர்களுக்கு ஒரு புத்தகம் பரிசு கொடுப்பது வழக்கம். இந்தப் பழக்கத்தை 25 வருஷங் களுக்கும் மேலாகக் கடைப்பிடித்து வருவதாகச் சொல்லியிருக்கிறார்.
ஒருமுறை அவர் வருவதற்கு பதிலாக, அவரது மகன் கடைக்கு வந்து நூறு புத்தகங்கள் வாங்கியிருக்கிறார். ‘அப்பா வரவில்லையா...’ எனக் கேட்டதற்கு, ‘‘அப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கே அப்பாவைப் பார்க்க வருபவர்களுக்குக் கொடுப்பதற்காகத்தான் இந்தப் புத்தகங்களை வாங்குகிறேன். இதன் முகப்பில் ‘என்னால் உங்களுடன் பேச முடியவில்லை; ஆனால் இந்தப் புத்தகங் கள்... என் சார்பாக உங்களுடன் பேசும்’ என அச்சிட்டு தரப் போகிறோம்’’ என்று சொல்லியிருக்கிறார்
‘இப்படியும் புத்தகங்களைக் காதலிக்கும் ஒரு மனிதர் இருக்கிறாரே...’ என அமீன் வியந்திருக்கிறார்.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு இப்ராகிமின் மகன் புத்தகக் கடைக்குத் தேடி வந்து 500 புத்தகங்கள் வாங்கியிருக்கிறார். ‘அப்பா எப்படி இருக்கிறார்?’ எனக் கேட்டபோது, ‘‘அவர் இறந்துவிட்டார். அவரது இறுதி நிகழ்வுக்கு வருபவர்களுக்குத் தருவதற்காகத்தான் இந்தப் புத்தகங்கள். இதில், ‘இனி நான் உங்களுடன் இருக்க மாட்டேன்; என் நினைவாக இந்தப் புத்தகம் உங்களிடம் இருக்கட்டும்’ என அச்சிட்டு தரப் போகிறோம். இதுவும் அப்பாவின் ஆசையே’’ என்று சொல்லியிருக்கிறார்.
அதன்படியே இப்ராகிமின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட அத்தனைப் பேருக்கும் புத்தகங்களைத் தந்திருக்கிறார்கள். இதை அமீன் சொல்லியபோது, எனக்குச் சிலிர்த்துப்போனது. ‘தன் வாழ்நாளிலும், அதற்குப் பின்னும் புத்தகங்களைப் பரிமாறிக் கொண்ட அற்புதமான மனிதராக அவர் இருந்திருக்கிறாரே...’ என வியந்து போனேன். புத்தகங்கள் மட்டுமில்லை; அதை நேசிப்பவர்களும் அழிவற்றவர்களே!
கறுப்பு வெள்ளை புகைப்படங்களைக் காணுவதைப் போல பழைய புத்தகக் கடையில் அரிதாக கிடைக்கும் புத்தகங்கள் நினைவை மீட்டத் தொடங்கிவிடுகின்றன. அப்படித்தான் திருவல்லிக்கேணி சாலையோரப் புத்தகக் கடையில் ‘வண்ணநிலவன்’ எழுதிய ‘எஸ்தர்’ சிறுகதைத் தொகுப்பின் முதல் பதிப்பு எனக்குக் கிடைத்தது.
அமுதோன் ஓவியத்துடன் ஆறு ரூபாய் விலையில் 1979-ல் வெளியான அந்தச் சிறுகதைத் தொகுப்பு, நர்மதா பதிப்பகத்தால் வெளியிடப் பட்டுள்ளது. இதில் 18 சிறு கதைகள் உள்ளன. இவை, அத்தனையும் வண்ண நிலவனின் மிகச் சிறந்த சிறு கதைகள். உள் அட்டையில் ஓவியர் அமுதோன் ‘எஸ்தர்’ கதைக்காக அற்புதமான கோட்டோவியம் ஒன்றை வரைந்திருக்கிறார்.
தமிழ்ச் சிறுகதை உலகில் வண்ணநிலவனின் சாதனை என்பது தொட முடியாத உச்சம். மொழியை அவர் கையாளும் லாகவம், நுட்பமாக மன உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதம், குறைவான உரையாடல்கள், மறக்க முடியாத கதாபாத்திரங்கள், கச்சிதமான கதையின் வடிவம்... எனச் ‘சிறந்த சிறுகதை எப்படி இருக்க வேண்டும்’ என்பதற்கு வண்ணநிலவனின் பல கதைகள் உதாரணங்களாக இருக்கின்றன.
இந்தத் தொகுப்பின் இன்னொரு விஷேசம், இதற்கு எழுதப்பட்ட முன்னுரை. ஒரு பேச்சிலர் அறையில் லயோனல் ராஜ், நம்பிராஜன் எனும் கவிஞர் விக்ரமாதித்யன், சுப்பு அரங்கநாதன், தா.மணி, அம்பை, பாலன், ஐயப்பன், நாகராஜன் என இலக்கிய நண்பர்கள் ஒன்று கூடி, வண்ணநிலவன் எழுதிய சிறுகதைககளைப் பற்றி பேசியது, அப்படியே முன்னுரையாக இடம்பெற்றிருக்கிறது.
சிறுகதைகள் குறித்த திறந்த உரையாடலும், இடைவெட்டாக வந்து போகும் ‘இதயக்கனி’, ‘சிவகங்கை சீமை’ திரைப்படங்களைப் பற்றிய பேச்சும். ‘சிகரெட் பாக்கெட்டை இப்படி எடுத்துப் போடு’ எனப் பேசியபடியே புகைப்பதும் வித்தியாசமானதொரு அனுபவப் பதிவாக உள்ளது.
இந்த உரையாடலில் இடம்பெற்றுள்ள தா.மணி எனும் மணி அண்ணாச்சியை நான் அறிவேன். தீவிர இலக்கிய வாசிப்பில் தன்னைக் கரைத்துக் கொண்ட மகத்தான மனிதர். அவர் இன்றில்லை. ஆனால், இந்த முன்னுரையை வாசிக்கும்போது அவரது குரல் என் காதில் விழுகிறது. கண்கள் தானே கலங்குகின்றன.
முன்னுரையின் இறுதி யில், ‘சமீபத்தில் வந்த தொகுப்புகள்ல எஸ்தர் தொகுப்பு தமிழிலக்கிய வட்டாரத்தில் திருப்தி தரக் கூடியதாக இருக்கும். இதுக்கு நல்ல வரவேற்பு இருக்கணும். பார்ப்போம்...’ என நம்பிராஜன் சொல்கிறார். அவரது கணிப்பு நிஜமாகியது. அன்று தொடங்கி இன்றுவரை ‘எஸ்தர்’ சிறுகதைக்கான வாசகர் வட்டம் பெருகிக் கொண்டேதான் இருக்கிறது.
தமிழ்ச் சிறுகதையில் வண்ணநிலவன் செய்துள்ள சாதனைகள் உலக அளவில் ஆன்டன் செகாவ், ரேமண்ட் கார்வர், ஹெமிங்வே போன்றோர் சிறுகதை இலக்கியத்தில் செய்த சாதனைகளுக்கு நிகரானது. அதை நாம் உணர்ந்து கொண்டது போல உலகம் இன்னமும் அறியவில்லை.
அதற்கு, வண்ணநிலவனின் சிறு கதைகள் முழுமையாக ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட வேண்டும். அதுவே தமிழ் இலக்கியம் குறித்து உலகின் கவனத்தைப் பெறுவதற்கான முதல் தேவை!
- இன்னும் வாசிக்கலாம்...
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com