Published : 12 Jan 2017 11:24 AM
Last Updated : 12 Jan 2017 11:24 AM

வாசிப்பு வழிகாட்டி | காந்தியை அறிதல்... - சுனில் கிருஷ்ணன்

காந்தியைப் பற்றி அறிந்துகொள் வதற்கான முதற்படி ‘சத்திய சோதனை’தான். அதற்குப் பிறகு, காந்தியை நெருக்கமாக அறிந்து கொள்ளப் பயன்படும் இரு நூல்கள் என ஜெயமோகனின் ‘இன்றைய காந்தி’ யையும்’ (தமிழினி வெளியீடு) தரம்பாலின் ‘காந்தியை அறிதல்’ நூலையும் (காலச்சுவடு) குறிப்பிடுவேன். ‘இன்றைய காந்தி’ தமிழ்ச் சூழலில் காந்தியை மறுஅறிமுகம் செய்கிறது. நாம் செவிவழியாகக் கேட்டிருக்கும் பெரும்பாலான விமர்சனங்களை எதிர்கொள்கிறது. ‘காந்தியை அறிதல்’ காந்தியைப் புரிந்துகொள்ளப் புதிய கோணங்களை அளிக்கிறது.

கல்கி, திரு.வி.க., டி.டி. திருமலை, கொத்தமங்கலம் சுப்பு எனப் பலரும் காந்தியின் வாழ்க்கை சரித்திரத்தைத் தமிழில் எழுதியிருக்கிறார்கள். லூயி ஃபிஷர் எழுதிய ‘காந்தி வாழ்க்கை’ நூலை தி.ஜ.ர. மொழிபெயர்த்திருக்கிறார் (வெளியீடு: பழநியப்பா பிரதர்ஸ்). வின்சென்ட் ஷீனின் ‘மகாத்மா காந்தி’(வ.உ.சி. நூலகம் வெளியீடு) ஆகியவை முக்கியமான நூல்கள். சமீபத்தில், ராமச்சந்திர குஹா எழுதியிருக்கும் ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’ (கிழக்கு வெளியீடு) அபாரமான வாசிப்பனுபவத்தை அளிக்கிறது. குஹா ஒரு கதைசொல்லியின் நேர்த்தியுடன் காந்தியின் தென்னாப்பிரிக்க வாழ்வை நமக்கு அறிமுகம் செய்கிறார்.

வி.ராமமூர்த்தியின் ‘காந்தியின் கடைசி இருநூறு நாட்கள்’ (பாரதி புத்தகாலயம்) இந்தியாவின் மிக இக்கட்டான ஒரு காலகட்டத்தில் காந்தியை நெருக்கமாக அவதானிக்கிறது. மிலி கிரகாம் போலாக்கின் ‘காந்தி எனும் மனிதர்’ (சர்வோதயா இலக்கியப் பண்ணை) ஒரு ஆளுமையாக காந்தி வெளிப்படுவதற்கு முந்தைய காலகட்டத்தை ஒரு வெளிநாட்டுப் பெண்ணின் பார்வையில் பதிவுசெய்கிறது.

அ. மார்க்ஸின் ‘காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்’ இன்றளவும் அடிப்படைவாதத் துக்கு எதிராக காந்தி முக்கியமான தரப்பாக இருக்க முடியும் என்பதை நிறுவும் நூல். டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் ‘காந்தி தீண்டத்தகாதோருக்கு என்ன செய்தார்?’ எனும் நூலுக்குப் பதிலாக க. சந்தானமும் ராஜாஜியும் ஆதாரபூர்வமாக அப்போதே மறுப்பு அளித்திருக்கிறார்கள். அவர்களின் அறிக்கைகள் காந்திய இலக்கிய சங்கத்தால் தமிழில் தற்போது வெளியிடப்பட்டிருக்கின்றன. அ. ராமசாமி தொகுத்த ‘தமிழ்நாட்டில் காந்தி’, அதே தலைப்பில் தி.செ.சௌ. ராஜன் எழுதிய நூல் (சந்தியா) ஆகியவை ஆவண அம்சம் பொருந்திய முக்கியமான நூல்கள்.

இந்தப் புத்தகங்களை வாசித்த பின் காந்திய ஆளுமைகள், சூழலியல், காந்தியப் பொருளியல், சர்வதேச அரசியல் என இங்கிருந்து பல்வேறு தளங்களைத் தொட்டு முன்செல்ல இயலும்.

- சுனில் கிருஷ்ணன், ‘காந்தி இன்று’ தளத்தின் ஆசிரியர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x