

ஒரு மரத்தடி அல்லது விடுமுறைப் பள்ளிக்கூடங்களின் வகுப்பறைகள் அல்லது ஒரு மொட்டை மாடி, இலக்கியம் வாசிக்கும் ஐந்தாறுநண்பர்கள். இப்படித்தான் முன்பெல்லாம் புத்தக வெளியீடுகளும் விமர்சனக் கூட்டங்களும் நடந்தன. அதுபோல புத்தகங்கள் வாங்குவதற்குச்சென்னையைத் தவிர வேறு எங்கும் பெரிய வாய்ப்புகள் இருக்கவில்லை. தி.நகரில் நர்மதா பதிப்பகத்தால் தொடங்கப்பட்ட நியூ புக் லேண்ட்தான் தீவிர இலக்கியப் புத்தகங்களுக்கான ஒரே விற்பனை மையம் எனச் சொல்லலாம்.
இணையவெளி புதிய வாசகர்களை உருவாக்கியது. அதுபோல வலைப்பூக்கள் சுதந்திரமான எழுத்துக்குக் களம் அமைத்துக் கொடுத்தன. பிரதிகள் எழுதப்பட்ட நிமிடத்திலே வெளியிடப்படும் அற்புதம் நிகழ்ந்தது. தமி்ழில் எழுதவே வாய்ப்பில்லாத புதிய தலைமுறையினர் எழுத்தை நோக்கி ஈர்க்கப்பட்டனர். கட்டற்ற இந்தச் சுதந்திர வெளியைப் பயன்படுத்தி பலர் எழுத வந்தனர். இப்படி எழுத வந்தவர்கள் தங்களுக்கான மொழியைக் கண்டடைய தமிழின் முன்னோடி எழுத்துகளைத் தேடி வாசிக்கத் தொடங்கினர். இந்தத் தேடல் இலக்கியப் பதிப்பகங்களுக்குப் புதிய உத்வேகத்தை அளித்தது. ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்தில் புத்தகக் காட்சி இலக்கிய ஆர்வலர்களுக்கு ஒரு திருவிழா ஆனது. இதையொட்டி தமிழில் முன்னணி பதிப்பகங்கள் தங்கள் புத்தங்களை வெளியிட்டன. இந்தப் புத்தக வெளியீட்டு நிகழ்வுகள் இலக்கியச் சந்திப்புகளாகவும் இருந்தன.
இந்த டிசம்பர் மாதம் தவிர்த்து மற்ற மாதங்களில் இலக்கியச் சந்திப்பு என்பது மிக அரிதான விஷயமாகத்தான் இருந்தது. தொடர் இலக்கியச் சந்திப்புகளுக்கான வெற்றிடம் இருந்துகொண்டுதான் இருந்தது. சமீபத்தில்அதிகரித்துள்ள இலக்கிய வாசிப்பு அதற்கான மையங்கள் உருவாக வேண்டிய தேவையை உணர்த்தியது. இதற்கான தொடக்கப்புள்ளி வேடியப்பனிடம் இருந்து வந்தது. இலக்கிய வாசகரான இவர் 2009இல் இந்தக் கடையைத் தொடங்கினார், “நான் கே.கே. நகர்ப் பகுதியில் பலஆண்டுகளாக வசித்துவருகிறேன். இலக்கிய வாசகர்கள் அதிகமானோர் இந்தப் பகுதியில் இருப்பதை வாசகன் என்ற அடிப்படையில் அறிவேன். இந்தப் பகுதியில் ஒரு புத்தகக் கடை இருந்தால் சிறப்பாக இருக்கும் என விரும்பினேன். அந்த விருப்பத்தின் வெளிப்பாடே டிஸ்கவரி புக் பேலஸ்” என்கிறார் வேடியப்பன். “புத்தக வெளியீட்டுக்கும், இலக்கியச் சந்திப்புக்குமான இடத்தையும் உள்ளேயே ஏற்படுத்தினோம்” என்கிறார்.
அகநாழிகை பதிப்பகம் அண்ணாசாலையில் சமீபத்தில் புத்தகக் கடையைத் தொடங்கியது. இந்தக் கடையின் திறப்பு விழாவே ஓர் இலக்கியச் சந்திப்பாக அமைந்தது. இதன் உரிமையாளரும் எழுத்தாளருமான பொன்.வாசுதேவன், “சமீபத்தில் அதிகரித்திருக்கும் வாசகவெளிக்கான காரணம் இணையம்தான். வாசகர்கள் வார இறுதியில் தங்களுக்குள் ஓர் ஆசுவாசமான உரையாடல்கள் நிகழ்த்திக்கொள்வதற்கு இடமாக இந்தப் புத்தகக்கடைகள் இருக்கின்றன”என்கிறார்.
ஆன்லைன் புத்தக விற்பனையில் ஈடுபட்டுவரும் தடாகம் பதிப்பகத்தினர் பனுவல் என்னும் பெயரில் திருவான்மியூரில் ஒரு புத்தகக் கடையைத் தொடங்கியுள்ளனர். இக்கடை கணினித் துறையில் பணியாற்றிவரும் இளைஞர்களால் தொடங்கப்பட்டுள்ளது. பனுவல் என்னும் பெயரில் ஆன்லைன் புத்தக விற்பனையைச் சில ஆண்டுகளாக மேற்கொண்டு வந்ததின் தொடர்ச்சியாகத்தான் அதே பெயரில் இந்தப் புத்தகக் கடை தொடங்கப்பட்டிருக்கிறது. வாசக சந்திப்பிற்கான இடத்தை ஏற்படுத்த வேண்டும் என முன்திட்டத்துடனே தனி அரங்குடன் இந்தக் கடையைத் தொடங்கியதாக இதன் உரிமையாளர்களின் உருவரான முகுந்தன் கூறுகிறார். பத்தாண்டுகளுக்கும் மேலாகப் புத்தக விற்பனையில் ஈடுபட்டுவரும் பரிசல் செந்தில்நாதன் இதன் மேலாளராக இருக்கிறார். “முன்பெல்லாம் இலக்கியக் கூட்டங்களுக்குச் சென்று புத்தகங்களை விற்போம். இப்போது புத்தக விற்பனை மையத்திற்குக் கூட்டங்கள் வந்திருக்கின்றன. இது வரவேற்கக்கூடிய மாற்றம். இன்று விரிந்துவரும் வாசகப்பரப்பால் இது சாத்தியமாகியிருக்கிறது” என்கிறார்.
அறிவியலின் வளர்ச்சியால் மனிதத் தொடர்பு என்பதே அருகிப் போய்விட்டது. சந்திப்புகள், உரையாடல்கள் என அனைத்தும் நவீன அறிவியல் கருவிகளின் துணைகொண்டு நடக்கின்றன. இச்சூழலில் முப்பது பேர் கூடிச் சந்திப்பதே ஓர் அரிய நிகழ்வுதான். இந்த நிகழ்வுகளில் பலதரப்பட்ட மக்கள் கலந்துகொள்கிறார்கள்; உரையாடுகிறார்கள். இன்றைய நெருக்கடியான சமூகப் பின்னணியுடன் நோக்கும்போது இக்கூட்டங்கள் சமூகத்தின் மிக அவசியமான தேவை. இது போன்ற புத்தகக் கடைகளும் கூட்டங்களும் இலக்கியத்திற்கு அப்பாற்பட்டு மலிங்கிப் போய்விட்ட சமூகத்தில் விவாதத்திற்கான களமாகவும் இருக்கும். ஒரு சுதந்திரமான சமூகத்திற்கு கலந்து ரையாடலும் வாசிப்பும் அவசியம். இந்த ஆரோக்கியமான மாற்றத்தால் இவை அனைத்தும் சாத்தியமாகும்.