

பிரபஞ்சனின் 73-வது பிறந்த நாளை முன்னிட்டும் அவர் எழுத ஆரம்பித்து 55 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டும் எழுத்தாளர்கள் எஸ். ராமகிருஷ்ணன், பவா. செல்லத்துரை, டிஸ்கவரி புக் பேலஸின் வேடியப்பன் ஆகியோர் முக்கிய முன்னெடுப்பு ஒன்றைச் செய்துவருகிறார்கள். பல்வேறு நண்பர்களிடமிருந்தும் வாசகர்களிடமிருந்தும் 10 லட்ச ரூபாய் திரட்டி, பிரபஞ்சன் பிறந்த நாளில் அவரிடம் அதை வழங்குவதற்கு உத்தேசித்திருக்கிறார்கள். சாகித்ய அகாடமி உள்ளிட்ட விருதுகளைப் பெற்ற, பரவலாக அறியப்பட்ட எழுத்தாளரான பிரபஞ்சனின் பொருளாதார நிலையே இப்படி இருக்கிறதென்றால் மற்ற எழுத்தாளர்களின் நிலையைப் பற்றி என்ன சொல்வது? பிரபஞ்சன் பிறந்த நாள் விழாவில் தங்கள் பங்கை ஆற்ற விரும்புபவர்கள் இந்த எண்ணில்
தொடர்புகொள்ளலாம்: வேடியப்பன் (9940446650).
அரிய நூல்களின் அலாவுதீன் விளக்கு
‘டிஜிட்டல் லைப்ரரி ஆஃப் இந்தியா’ என்ற இணைய சேவையில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் மின்நூல் வடிவத்தில் கிடைக்கின்றன. 2000-ல் தொடங்கப்பட்ட இந்த டிஜிட்டல் சேவை அமைப்பு அரசின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டது. இந்திய மொழிகள் அனைத்திலும் உள்ள அரிய, முக்கியமான நூல்கள் எல்லோருக்கும் இலவசமாகப் படிக்கக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது இந்த டிஜிட்டல் சேவை. இந்த டிஜிட்டல் சேவையில் இணையதளத்தில் 1887-லிருந்து பதிப்பிக்கப்பட்ட அரிய புத்தகங்கள் பலவும் உள்ளன. மொத்தம் 5,376 தமிழ்ப் புத்தகங்களின் மின்நூல்கள் இந்தத் தளத்தில் கிடைக்கின்றன. இந்த இணைப்பில் சென்றால் தமிழ் நூல்களைத் தரவிறக்கிக்கொள்ளலாம்: >https://goo.gl/JSyMO4