

உலகத்தின் வளமான, முன்னேறிய நாடுகள் பலவும் இந்தியாவின் வாசனை திரவியங்கள், தங்க, வைர நகைகளின் புதையல்கள் போன்றவற்றின் மீது கண் வைத்தன. வாஸ்கோடகாமாவிலிருந்து கொலம்பஸ் வரை அன்றைய ஐரோப்பிய மாலுமிகளின் ஒரே நோக்கம் இந்தியாவில் கரையிறங்கி, இங்கிருந்த செல்வத்தை வணிகம் என்ற பெயரில் கொள்ளையடித்துச் செல்வதாகவே இருந்தது.
அதன் ஒரு பகுதியாகவே பிரிட்டிஷ் அரசின் ஆசியோடு கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் 16-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வணிகம் செய்ய முதன்முதலாக சூரத் நகரில் காலடி எடுத்து வைத்த பிரிட்டிஷ்காரர்கள் படிப்படியாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளை ஆண்டுவந்த அரசர்களிடையே நிலவிய பரஸ்பரப் பகைமையைப் பயன்படுத்திக்கொண்டு இருநூறு ஆண்டுகளில் நம் நாட்டை முழுமையாக அடிமைப்படுத்தினார்கள். இங்கிருந்த செல்வத்தைச் சுரண்டியெடுத்துச் சென்று பிரிட்டனின் தொழிற்புரட்சிக்கு வித்திட்டனர் என்பதும் வரலாறு.
இந்த அந்நிய ஆட்சிக்கு எதிராக முழக்கமெழுப்பிக் கிளர்ந்தெழுந்த இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என அழைக்கப்படும் 1857 புரட்சிக்குப் பிறகு இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை நேரடியாக ஏற்ற விக்டோரியா மகாராணி, தனது ஆளுகைக்கு உட்பட்ட இந்தியர்கள் உலகில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்குக் கீழே இருக்கும் எந்தவொரு நாட்டிலும் குடியேறி வாழலாம் என்ற உறுதிமொழியை வழங்கினார். ஆனால், அதே பிரிட்டிஷ் அரசு, 1914-ல் பஞ்சாப் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்களும் விவசாயிகளும் கனடாவின் ஆளுகையில் இருந்த பிரிட்டிஷ் கொலம்பியாவில் குடியேற ஹாங்காங் துறைமுகத்திலிருந்து கோமகட்டா மாரு என்ற கப்பலின் மூலம் நீண்ட பயணம் செய்து கனடாவின் கரையைத் தொட்டபோது அவர்களை கனடாவுக்கு உள்ளே விடாமல் விரட்டியடித்து, அவர்கள் திரும்பவும் இந்தியாவின் கல்கத்தா நகரை நோக்கிப் பயணம் செய்தபோது அதற்கு முன்பாகவே கரையிறக்கினார்கள். பட்ஜ் பட்ஜ் என்ற இடத்தில் அவர்களைச் சூழ்ந்து கொண்டு ஆங்கிலேயப் படை படுகொலை வெறியாட்டம் ஆடிய ‘பட்ஜ் பட்ஜ்’ படுகொலைச் சம்பவம், பஞ்சாபின் கீர்த்திமிக்க வரலாற்றுச் சம்பவங்கள் பலவற்றையும் ஆவணப்படுத்தியுள்ள சோஹன் சிங் ஜோஷின் புத்தகம் தற்போது தமிழுக்கு வந்திருக்கிறது.
கோமகட்டா மாருவின் கனடாவை நோக்கிய பயணமும், பட்ஜ் பட்ஜ் படுகொலையுடன் அது முடிந்ததும் பிரிட்டிஷ் ஆட்சியின் கொடூரத்தை முழுமையாக வெளிக்கொணரும் சம்பவங்கள். இந்தப் பயணம், பட்ஜ் பட்ஜ் படுகொலை, அதைத் தொடர்ந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை ஆகியவை பிரிட்டிஷ் ஆட்சியில் வெறியாட்டம் ஆடியவர்கள், அவர்களின் அடிவருடிகள் ஆகியோரைக் குறிவைத்துச் செயல்படுவதற்கு பகத் சிங் போன்ற எண்ணற்ற இந்திய இளைஞர்களுக்குக் காரணமாக அமைந்தன.
ஒரு காலத்தில் பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவற்றின் காலனியாக இருந்த கனடா, ஆசிய நாட்டவர்களிலேயே ஜப்பானியர் களையும் சீனர்களையும் அனுமதித்த அதே நேரத்தில் பழுப்பு நிறத்தவரான இந்தியர்களை உள்ளே விட மாட்டோம் என்று நிறவெறியோடு தடுத்தது. நிராசையுடன் அவர்கள் இந்தியாவுக்குள் மீண்டும் காலடி எடுத்து வைத்தபோது ஆதிபத்திய வெறியுடன் அவர்களை பிரிட்டிஷ் காலனிய அரசு வேட்டையாடியது. (அமெரிக்காவின் இன்றைய நிலையை இங்கே நினைவுபடுத்திக்கொள்வோமானால்) இந்தியர்களின் இன்றைய நிலையை நமக்கு நினைவூட்டுவதாகவும் இந்த நூல் அமைகிறது.
சோஹன் சிங் ஜோஷின் உணர்ச்சி மிக்க எழுத்துக்களைத் தமிழில் மிகுந்த ஆர்வத்துடன் கொண்டுவந்திருக்கிறார் எஸ். அர்ஷியா. தமிழாக்கத்தில், குறிப்பாக வாக்கிய அமைப்புகளில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் இந்த நூல் மேலும் சிறப்பாக வந்திருக்கும்.
- வீ.பா. கணேசன், மூத்த பத்திரிகையாளர், தொடர்புக்கு: vbganesan@gmail.com